
சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னால் எல்லாமே சிறு சிறு வணிக நிறுவனங்களாக இருந்தன. இரண்டு தெருக்களுக்கு ஒரு சிறு மளிகைக்கடை காணப்படும். கிராமங்களில் இரண்டொரு மளிகைக்கடை மட்டுமே இருந்து வந்தது. கீரைகள், தயிர், பால், நெய், காய்கறிகள் முதலான பொருட்களை தினமும் காலை வேளைகளில் தலையில் சுமந்து வந்து தெருக்களில் விற்கப்படும். நகரப்பகுதிகளில் இன்றும் தள்ளுவண்டியில் காய்கறிகள் கீரைகள், பழங்கள் முதலான பொருட்களை வைத்து விற்பதைக்காணலாம்.
சிறு நகரங்களில் துணிக்கடைகள் பத்துக்கு இருபது என்ற சிறிய இடத்திலேயே செயல்பட்டு வந்தன. சில வியாபாரிகள் சைக்கிள் கேரியரில் புடவை, பாவாடை, ஜாக்கெட் முதலான துணிகளை கட்டி எடுத்துச்சென்று வீடு வீடாக அவற்றைக் காண்பித்து விற்பனை செய்வது வழக்கத்தில் இருந்தது. இதற்கான தொகையினை மாதாமாதம் ஒரு சிறு தொகையை மாதத்தவணை முறையில் வியாபாரிகள் பெற்றுக்கொள்ளுவர். இதனால் குறைவான வருமானம் உள்ளவர்கள் கூட தேவையான பொருட்களை எளிதாக வாங்க முடிந்தது.
சிறு மற்றும் பெரு நகரங்களில் எண்ணெயை விற்பதற்கென்றே சில கடைகள் காணப்படும். செக்கில் எண்ணெயை ஆட்டி தகர டின்களில் வைத்து லிட்டர் கணக்கில் விற்பார்கள். இத்தகைய கடைகளில் எண்ணெய் மட்டுமே விற்கப்படும்.
பல ஊர்களில் பெட்டிக்கடைகள் காணப்பட்டன. இவற்றில் அன்றாடத் தேவைகளுக்கான சிறுசிறு பொருட்கள் விற்பனை செய்யப்படும். சிறுவர்கள் வாங்கி சாப்பிட்டு மகிழ்ந்த திண்பண்டங்கள், அவர்கள் விளையாடும் கோலி, பம்பரம் காற்றாடி முதலான விளையாட்டுப் பொருட்கள், சோடா கலர் முதலான பொருட்கள் விற்பனை செய்யப்படுவது வழக்கம்.
அக்காலத்தில் பலரும் அன்றாடம் தேவைப்படும் மளிகைப்பொருட்களை தினமும் வாங்கிப் பயன்படுத்தும் வழக்கத்தை வைத்திருந்தனர். தற்போதும் கூட கிராமங்களில் இந்த நடைமுறை வழக்கத்தில் உள்ளது.
மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் மளிகை மற்றும் உணவுப்பொருட்கள், துணிமணிகள் இவ்வாறாக பலரால் தனித்தனியே விற்கப்பட்டன. இதனால் பணம் பல வியாபாரிகளைச் சென்றடைந்தது. மக்களும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.
தற்போது பெரு மற்றும் சிறு நகரங்களில் ஒரு பெரிய கட்டடத்தில் மளிகைப்பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், காய்கறிகள், பழங்கள், துணிமணிகள், அணிகலன்கள், உணவுப்பொருட்கள் என எல்லாவிதமான பொருட்களும் ஒரே இடத்தில் விற்பனை செய்யப்படுகின்றன. நாமும் ஒருநாள் காலை சென்று அரைநாள் செலவழித்து வீட்டிற்குத் தேவையான பலவிதமான பொருட்களை ஒரே சமயத்தில் வாங்கிக்கொண்டு வருகிறோம். தற்கால வாழ்வியல் சூழ்நிலையில் இது தவிர்க்க இயலாததாக மாறிவிட்டது.
நாம் சம்பாதிக்கும் பணமானது ஒரே இடத்தைச் சென்றடையாமல் நம்மைச் சுற்றியுள்ள பலரையும் சென்றடைய வேண்டும். இதைத்தான் பணப்புழக்கம் என்று சொல்லுவார்கள். பணம் பலரையும் சென்றடைந்தால்தான் அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சியாக வாழமுடியும். சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னால் இதுதான் நிகழ்ந்தது. அக்காலத்தில் வியாபாரம் மிக நியாயமான முறையில் நடைபெற்றது. தரமான பொருட்களை நியாயமான லாபத்தில் விற்பனை செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள்.
தற்காலத்தில் அதிகமாகப் புழங்கும் ஆஃபர் என்ற வார்த்தையை அக்காலத்தில் நாங்கள் கேட்டதே இல்லை. உண்மையில் சொல்லப்போனால் அக்காலத்தில் விற்ற ஒவ்வொரு பொருளும் தரமானதாக மிகவும் சொற்பமான லாபத்தில் விற்கப்பட்டன. அக்காலத்தில் தினம் தினம் நாங்கள் வாங்கிய ஒவ்வொரு பொருளுமே ஆஃபர் விலையில்தான் விற்கப்பட்டன.
நாம் வசிக்கும் பகுதியில் நம்மைச் சுற்றியுள்ள சிறுசிறு கடைகளில் வியாபாரம் செய்யும் வழக்கத்தை நாம் கடைபிடிக்க வேண்டும். கீரைகள், நாட்டுக்காய்கறிகள் முதலானவற்றை சாலைகளில் விற்கும் சிறு வியாபாரிகளிடம் வாங்கப் பழக வேண்டும்.
குறிப்பாக இத்தகைய எளிய மக்களிடம் பேரம் பேசாமல் வாங்க வேண்டும். பேருந்து மற்றும் ரயில்களில் பலர் தினமும் பிஸ்கட், சிறுசிறு புத்தகங்கள், கீரை, புதினா, பழங்கள் என பலவிதமான பொருட்களை வியாபாரம் செய்கிறார்கள்.
அவர்களிடமும் நாம் நமக்குத் தேவையாக பொருட்களை வாங்கும் வழக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும். தற்காலத்தில் தரமான சிறுசிறு உணவகங்கள் நியாயமான விலையில் தரமான உணவுகளை விற்பனை செய்கிறார்கள். இத்தகைய உணவகங்கள் பெரு சிறு நகரங்களின் பல பகுதிகளிலும் செயல்பட்டு வருகின்றன. அத்தகைய நல்ல உணவகங்களைக் கண்டுபிடித்து அதில் நாம் சாப்பிடும் வழக்கத்தைப் பின்பற்ற வேண்டும்.
ஏழை எளிய மக்கள் பொருளாதார ரீதியாக முன்னேறி வாழ்வில் உயரவேண்டுமல்லவா? நாமும் உயரவேண்டும். நம்மைச் சுற்றி வாழும் எளிய மக்களின் பொருளாதார நிலையை உயர்த்த நாம் உதவியாக இருக்கவேண்டும். நாம் ஒவ்வொரு சம்பாதிக்கும் பணத்தில் ஒரு சிறுதொகையை மாதந்தோறும் சேமித்துவிட்டு மீதமுள்ள பணத்தை இப்படியாக பலரிடமும் வியாபாரம் செய்தால் பணப்புழக்கம் அதிகரிக்கும். பலருடைய வாழ்வும் பிரகாசிக்கும். யோசிப்போமா நண்பர்களே!