பீட்ரூட் மிகவும் ஆரோக்கியமான காய்கறி என்பது நாம் அனைவருக்குமே தெரியும். இருப்பினும், இது எல்லாருக்கும் ஏற்ற காய்கறி அல்ல. யாரெல்லாம் பீட்ரூட் சாப்பிடக்கூடாது என்பது பற்றி இந்தப் பதிவில் காணலாம்.
பொதுவாகவே, பீட்ரூட்டில் நமது உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான தாதுக்களும், விட்டமின்களும் அதிக அளவில் உள்ளன. இதிலிருந்து விட்டமின் சி, நார்ச்சத்து, புரதம் மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து போன்ற ஏராளமான சத்துக்களை நாம் பெறலாம். மேலும், இதில் குறைந்த அளவு கலோரி, அதிகப்படியான ஊட்டச்சத்தும், கொழுப்பும் உள்ளதால் பீட்ரூட் அனைவருக்கும் ஏற்ற உணவாகப் பார்க்கப்படுகிறது.
பீட்ரூட்டில் அதிக அளவு சத்து இருந்தாலும் சிலருக்கு இது தீங்கை விளைவிக்கலாம். குறிப்பாக, சிறுநீரகக் கல் பிரச்னை உள்ளவர்கள் பீட்ரூட் அதிகம் சாப்பிடக்கூடாது. சிறுநீரகக் கற்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று ஆக்சிலேட் கற்கள், மற்றொன்று கால்சியம் சார்ந்த கற்கள். இதில் ஆக்சிலேட் கற்கள் உடையவர்கள் பீட்ரூட் சாப்பிடக்கூடாது. ஏனென்றால், பீட்ரூட்டில் அதிக அளவில் ஆக்சிலேட் உள்ளதால், இதைச் சாப்பிடும்போது அவர்களின் பிரச்னை மேலும் அதிகரிக்கலாம்.
அதேபோல, உடலில் அதிகம் இரும்புச்சத்து உள்ளவர்களும் பீட்ரூட்டை குறைவாகச் சாப்பிட வேண்டும். பீட்ரூட்டில் அதிகப்படியான இரும்புச் சத்து இருப்பதால், ஏற்கெனவே உடலில் அதிகம் இரும்புச்சத்து உள்ளவர்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தலாம். உடலில் எவ்வளவு இரும்புச்சத்து உள்ளது என்பதை பரிசோதனை மூலம் தெரிந்துகொள்ள முடியும்.
பீட்ரூட் அதிகமாகச் சாப்பிடுபவர்கள் சிறுநீர் சிவப்பு நிறத்தில் வந்தால் அவர்கள் பீட்ரூட் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இது நிரூபிக்கப்படாத ஒன்று என்றாலும், பீட்ரூட் சாப்பிட்டவுடன் சிறுநீர் சிவப்பு நிறமாகக் காணப்பட்டால் அதைச் சாப்பிடுவதைக் குறைத்துக் கொள்வது நல்லது.