
நாம் உண்ணும் உணவுக்குக் காலாவதி தேதி உண்டு என்பதை அறிவோம். ஆனால், அந்த உணவைச் சமைக்கப் பயன்படுத்தும் பாத்திரங்களுக்கும் ஒரு ஆயுள் காலம் உண்டு என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? ஆம், சமையலறைப் பாத்திரங்களின் மீது தயாரிப்பு நிறுவனங்கள் எந்தவொரு காலாவதி தேதியையும் குறிப்பிடுவதில்லை.
ஆனால், காலப்போக்கில் அவற்றின் பயன்பாடு, தரம் மற்றும் பாதுகாப்புத் தன்மை குறைந்து, மறைமுகமாக நமது ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கத் தொடங்குகின்றன. எந்தெந்தப் பாத்திரங்களை, எப்போது, ஏன் மாற்ற வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்வது, நோயற்ற வாழ்விற்கான முதல் படியாகும்.
கவனிக்கத் தவறும் ஆபத்துகள்:
நமது சமையலறையில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல பொருட்கள், அவற்றின் ஆயுட்காலம் முடிந்த பின்னரும் பயன்பாட்டில் இருக்கின்றன. உதாரணமாக, காய்கறிகளை நறுக்கப் பயன்படுத்தும் கத்திகள் மற்றும் பீலர்கள் மழுங்கிப் போனால், அவற்றை மாற்றுவதே சிறந்தது.
கூர்மை இழந்த கத்தியால் வெட்டும்போது, அதிக அழுத்தம் கொடுக்க வேண்டியிருப்பதால், கைகளில் காயம் ஏற்படும் அபாயம் பன்மடங்கு அதிகரிக்கிறது. அதேபோல், உடைந்த கைப்பிடி கொண்ட கருவிகள் எந்நேரமும் விபத்தை ஏற்படுத்தலாம். பொதுவாக, காய்கறித் தோல் சீவும் கருவிகளை ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றிவிடுவது நல்லது.
பாத்திரம் கழுவப் பயன்படுத்தும் ஸ்பாஞ்சுகள் மற்றும் ஸ்க்ரப்பர்கள், பாக்டீரியாக்களின் கூடாரமாக மாற அதிக வாய்ப்புள்ளது. அவற்றில் தங்கும் ஈரப்பதம், கிருமிகள் வளர்வதற்கு ஏற்ற சூழலை உருவாக்குகிறது. அவை நிறம் மாறி, துர்நாற்றம் வீசத் தொடங்கினால், அது அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்பதற்கான எச்சரிக்கை மணி.
சமையல் பாத்திரங்களில் மறைந்திருக்கும் அபாயம்:
அலுமினியப் பாத்திரங்களை நீண்ட காலம் பயன்படுத்துவது உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கும். பாத்திரத்தின் அடிப்பகுதி வளைந்து, சமமற்ற முறையில் சூடானால், உணவு சரியாக வேகாது. அதுமட்டுமின்றி, தேய்ந்துபோன அலுமினியப் பாத்திரங்களிலிருந்து வெளிவரும் உலோகத் துகள்கள், உணவில் கலந்து உடலுக்குள் சென்று, அல்சைமர் போன்ற நரம்பியல் நோய்கள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கக்கூடும்.
அதேபோல், பிளாஸ்டிக் கட்டிங் போர்டுகள் மற்றும் சிலிகான் கரண்டிகளின் முனைகள் சேதமடைந்தால், அதைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். அந்த உடைந்த சிறு துகள்கள் 'மைக்ரோபிளாஸ்டிக்'களாக உணவில் கலந்து, நமது செரிமான அமைப்பிற்குள் சென்று பாதிப்புகளை ஏற்படுத்தும்.
ஒவ்வொரு சமையலறையின் அத்தியாவசியப் பொருளான பிரஷர் குக்கர், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு கடினமானதாக மாறும். குக்கரை சராசரியாக ஐந்து முதல் எட்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும். விசில் சரியாக வராதது, வால்வில் கசிவு ஏற்படுவது போன்றவை, குக்கர் வெடித்துப் பெரிய விபத்து ஏற்படக் காரணமாகலாம்.
ஆரோக்கியமான வாழ்க்கை என்பது சத்தான உணவைத் தேர்ந்தெடுப்பதில் மட்டும் இல்லை; அதைச் சமைக்கும் பாத்திரங்களின் தரத்தைப் பராமரிப்பதிலும் இருக்கிறது. பாத்திரங்களைச் சுத்தமாகப் பராமரிப்பதும், உரிய நேரத்தில் மாற்றுவதும், குடும்பத்தின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் ஒன்றாகும்.