
‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’தான். ஆனால், அப்படியா வாழ முடிகிறது? மருந்து, மாத்திரைகள் மூலமே வாழ்க்கை ஓடுகிறது. அப்படி நோய்களுக்கு மருந்து சாப்பிடும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய உண்டு. அவற்றில் சிலவற்றைக் குறித்து இங்கே பார்க்கலாம்.
எப்போதும், எக்காரணத்தைக் கொண்டும், எந்த நேரத்திலும் டாக்டர்களின் ஆலோசனை இன்றி சுயமாக மருந்துகளை வாங்கி சாப்பிடக் கூடாது. நோயின் தாக்கம் குறைவாக இருந்தாலும், சாதாரண நோயாக இருந்தாலும் இதில் அலட்சியம் வேண்டாம். அடிக்கடி வலி மத்திரைகளை எடுத்துக் கொள்பவரா நீங்கள்? இதனால் உங்கள் உடல் எடை அதிகரிக்க இரு மடங்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கிறார்கள் இங்கிலாந்தில் உள்ள நியூகோஸ்டில் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். அது மட்டுமல்ல, வலி நிவாரணி மாத்திரைகள் இரவுத் தூக்கத்தையும் கெடுக்கிறது என்கிறார்கள்.
டாக்டரிடம் தயக்கமின்றி உங்களுக்கு இருக்கும் நோய் பற்றி பேசுங்கள். அவராகவே உணர்ந்து கொண்டு உங்களிடம் கேட்பார் என்று நினைத்துக் கொண்டு இருக்காதீர்கள். டாக்டர் எழுதித் தரும் மருந்து சீட்டைப் பார்த்து எந்தெந்த மருந்து என்னென்ன நோய்க்கு, அதை எப்படிச் சாப்பிட வேண்டும் என்று விவரமாகக் கேட்க வேண்டும். மருந்துகளை வாங்கிவிட்டு பில்லை மட்டும் அங்கு செக் செய்யாமல் மருந்து சீட்டில் உள்ளபடி மருந்துகள் உள்ளனவா என்று சரிபார்த்து விட்டு வீட்டிற்கு வாருங்கள். இதையெல்லாம் வீட்டில் வைத்து சரிபார்க்க வேண்டாம்.
சில டாக்டர்கள் எழுதிக் கொடுக்கும் மருந்துகள் அந்த மருத்துவமனை அல்லது அருகில் உள்ள கடைகளில் மட்டுமே கிடைக்கும். எனவே, அவற்றை அங்கேயே வாங்கி விடுங்கள். இல்லை என்றால் அதற்குரிய மாற்று மருந்துகளை டாக்டரிடம் தயக்கமின்றி கேட்டு எழுதி வாங்குங்கள்.
எப்போதும் மருத்துவர்கள் எழுதித் தரும் முழு அளவிலான மருந்துகளை மொத்தமாக வாங்கி விடாதீர்கள். முதலில் மூன்று நாட்கள் இருக்கும் அளவுக்கு வாங்கி அவற்றை சாப்பிட்டுப் பாருங்கள். எந்த பக்க விளைவுகளும் இல்லை என்றால் முழுவதும் வாங்கிப் பயன்படுத்துங்கள். காரணம், சில மருந்துகள் சிலருக்கு ஒத்துக் கொள்ளாது. அப்படி வாங்கிய மருந்துகள் ஒத்துக்கொள்ளாவிட்டால் உடனே மருத்துவரை அணுகி வேறு மருந்து கேட்டு எழுதி வாங்குங்கள்.
சில நேரங்களில் மருந்து மீதம் இருக்கும்போதே நோய் தீர்ந்து விடும் நிலை ஏற்படும். அப்போதும் அந்த மருந்துகளை டாக்டர் பரிந்துரை செய்தது போல அத்தனை நாட்களும் சாப்பிட்டு அதனை முடிக்க வேண்டும். வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்கள் பார்வையில் படும்படி மருந்து, மாத்திரைகளை வைக்காதீர்கள். மருந்துகளுக்கும், மதுவுக்கும் ஆகாது. எனவே, மது பிரியர்கள் அது பற்றி நேரடியாக மருத்துவரிடம் பேச வேண்டும். அவர்கள் நல்ல ஆலோசனைகளைத் தருவார்கள்.
சர்க்கரை அளவை குறைக்க மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்படும் மாத்திரைகளை அதிகளவில் பயன்படுத்துவோருக்கு இருதய கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பு 14 சதவீதம் அதிகரிக்கும் என்கிறார்கள் கனடா டெரோன்டோ மருத்துவப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். மகப்பேறு மற்றும் ஹார்மோன் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அந்த சிகிச்சை எடுத்துக்கொள்ளும்போது அது அவர்களின் மார்பக செல்களின் அடர்த்தியை அதிகரிக்கின்றது. அதனாலேயே அவர்களுக்கு மார்பக புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கும் என்கிறார்கள் சுவீடன் நாட்டு ஆராய்ச்சியாளர்கள்.
பல்லில் ஓட்டை என்றால் தற்போது பல் டாக்டர்கள் அந்த ஓட்டையை சில மெட்டல் கலவையைக் கொண்டு அடைக்கிறார்கள். அந்தக் கலவையில் பாதரசம், வெள்ளி, ஈயம் மற்றும் சில தனிமங்கள் சேர்கின்றன. இந்தக் கலவையின் வீரியம் நம்முடைய ரத்தத்தில் கலந்து மூளை, இருதயம் மற்றும் சிறுநீரகத்தை பாதிக்கிறது என்கிறார்கள். அதுவும் 8 பற்களுக்கு மேல் என்றால் பாதிப்பு கடுமையாக இருக்கும் என்கிறார்கள் அமெரிக்க ஜார்ஜியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.
நோயாளிகளுக்கு நோய்வாய்ப்பட்டு இருக்கும்போது நோய் எதிர்ப்புச் சக்தியைக் அதிகரிக்க ஆன்டி ஆக்ஸிடென்ட் மாத்திரைகளை எடுத்துக்கொள்ள மருத்துவர்கள் சிபாரிசு செய்வார்கள். ஆனால், அதற்கும் ஒரு அளவு உண்டு. அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளும் பீட்டா கரோட்டின், வைட்டமின் ‘இ’ சத்து மாத்திரைகள் புற்றுநோயை 17 சதவீதம் உருவாக்கும் வாய்ப்பு உண்டு என்கிறார்கள் நாஸ்டர்டாம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.
சில நோய்களை குணப்படுத்த தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சிகிச்சை எடுத்துக் கொள்ளும் நோயாளிகளில் பலர் தீவிரமான மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும் அதன் தாக்கம் இரண்டு ஆண்டுகள் வரை கூட நீடிக்கும் என்கிறார்கள். எனவே, அவர்களை நன்கு கவனித்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் என்கிறார்கள் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.