
சில சமயங்களில், நாம் செய்யும் உணவின் சுவையை மேம்படுத்த அல்லது அதன் அளவை அதிகரிக்க எளிய குறிப்புகள் இருந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றும். அதன்படி, உங்கள் அன்றாட சமையலை இன்னும் சுவையாகவும், புதுமையாகவும் மாற்ற உதவும் சில அற்புதமான சமையல் குறிப்புகளை இங்கே காணலாம். இனி உங்கள் குடும்பத்தினர் உங்கள் சமையலுக்கு அடிமையாவது உறுதி.
குருமாவின் அளவை அதிகரிக்க: சப்பாத்தி அல்லது பூரிக்குத் தேவையான குருமா சில சமயம் பற்றாக்குறையாக இருக்கலாம். இந்த நேரத்தில், சிறிதளவு வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து குருமாவுடன் சேர்க்கலாம். இது குருமாவின் அளவை அதிகரிப்பதோடு, அதன் சுவையையும் கூட்டிக் கொடுக்கும். அதேபோல், சுடவைத்த பசும்பால் சிறிது சேர்த்தால், குருமாவின் அடர்த்தியும் அளவும் கூடும்.
தேநீரில் ஏலக்காய் மணம்: பொதுவாக ஏலக்காயின் தோலை நாம் குப்பையில் எறிந்துவிடுவோம். ஆனால், இனிமேல் அப்படிச் செய்யாதீர்கள். ஏலக்காய் தோல்களைச் சேகரித்து, அவற்றை நன்கு காயவைத்து, மிக்ஸியில் அரைத்துப் பொடியாக்கி வைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பொடியை உங்கள் டீத்தூளுடன் கலந்து வைத்து, தேநீர் போடும்போது பயன்படுத்தினால், தேநீரில் நறுமணமிக்க ஏலக்காய் சுவை கூடும்.
சுவையான கிச்சடிக்கு: எளிதில் தயாரிக்கக்கூடிய உணவுகளில் கிச்சடிக்கு தனி இடமுண்டு. அடுத்த முறை கிச்சடி செய்யும்போது, வழக்கமான தண்ணீருக்குப் பதிலாக, அரை பங்கு தண்ணீரையும், அதற்குச் சமமான தேங்காய் பாலையும் சேர்த்து சமைத்துப் பாருங்கள். இது கிச்சடிக்கு ஒரு தனித்துவமான சுவையையும், மென்மையையும் அளிக்கும்.
ஜீரா ரைஸ் சுலபமாக்க: விரைவாக ஜீரா ரைஸ் செய்ய வேண்டுமானால், சிறிதளவு சீரகம் மற்றும் மிளகை நெய்யில் வறுத்து பொடியாக்கி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர், சிறிது வெங்காயத்தை பொடியாக நறுக்கி, சமைத்த சாதத்துடன் வறுத்து அரைத்த பொடியையும், நறுக்கிய வெங்காயத்தையும் கலந்து பரிமாறினால் சுவையான ஜீரா ரைஸ் தயாராகிவிடும்.
பஜ்ஜிக்கு புது சுவை: மாலை நேர ஸ்நாக்ஸாக பஜ்ஜி செய்வீங்க. அடுத்த முறை பஜ்ஜி மாவு கலக்கும்போது, அரைத்த புதினா மற்றும் தக்காளியை மாவுடன் சேர்த்துப் பிசைந்து பஜ்ஜி சுடுங்கள். இது பஜ்ஜிக்கு அற்புதமான சுவையையும், தனித்துவமான நறுமணத்தையும் கொடுக்கும்.
வத்தக் குழம்புக்கு ஆரஞ்சு வாசம்: வத்தக் குழம்புக்கு பிடிக்காத ஆட்களே இல்லை. நீங்கள் வத்தக் குழம்பு செய்யும்போது, ஆரஞ்சுப் பழத் தோலையும், பச்சை மிளகாயையும் பொடியாக அரைத்து, சிறிதளவு எண்ணெயில் வதக்கி, குழம்புடன் சேர்த்தால், வத்தக் குழம்பின் சுவை இன்னும் அதிகமாகும்.
இந்த எளிய சமையல் குறிப்புகளை உங்கள் சமையலறையில் பின்பற்றி, உங்கள் உணவு வகைகளின் சுவையை அதிகரித்து, குடும்பத்தினரை அசத்துங்கள்.