

சாக்பீஸ் என்பது கரும்பலகையில் எழுதுவதற்கு மட்டுமே பயன்படும் ஒரு பொருள் என்பது அனைவரும் அறிந்ததே. சாக்பீஸின் மற்ற பயன்பாடுகள் பற்றி அறிந்தால் பலருக்கும் மனதில் வியப்பு ஏற்படும் என்பதில் சற்றும் ஐயமில்லை. சாக்பீஸின் முக்கியமான சில பயன்பாடுகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
* டூல் பாக்ஸில் ஒரு சாக்பீஸ் கட்டியைப் போட்டு வைத்தால், அது ஈரப்பசையை உறிஞ்சி, டூல்ஸ் துருப்பிடிக்காமல் இருக்க உதவும்.
* சாக்பீஸில் கால்சியம் கார்பனேட் இருப்பதால் எறும்புகள் வராது. எனவே, எறும்புகள் இருக்கும் இடத்தில் சாக்பீஸால் கோடு போட்டால் எறும்புகள் நெருங்காது.
* காடா துணியால் சாக்பீஸை நன்கு சுற்றி, அதனை வெள்ளிப் பொருட்கள் இருக்கும் இடங்களில் வைத்து விட்டால், வெள்ளிப் பொருட்கள் கருத்துப் போகாமல் பளிச்சென மின்னும்.
* மொசைக் தரையிலும், டைல்ஸ்களிலும் அழுக்கு படிந்து கறையாக இருந்தால் வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு சாக்பீஸ் தூளும், சலவைச் சோடாவும் சேர்த்து ஸ்பாஞ்சை வைத்து அழுந்தத் துடைக்க வேண்டும். பிறகு நல்ல தண்ணீரில் தரையைத் துடைத்தால் பளபளப்பாகி விடும்.
* மஞ்சள் தூளுடன் சிறிது சாக்பீஸ் தூள் சேர்த்து, உஷ்ணத்தால் நம் உடலில் ஏற்படும் கட்டிகள் மீது தடவி வர, கட்டி விரைவில் பழுத்து உடைந்து விடும்.
* பழைய கட்டடங்களில் விழும் விரிசல்களை மறைக்க இதுபோல் சுவற்றில் சாக்பீஸ் கொண்டு நன்கு தேய்த்து விடலாம். சிறு சிறு பிரிவுகள், கோடுகள், ஓட்டைகள் போன்றவற்றை மறைக்கவும் சாக்பீஸை பயன்படுத்தி பயன் பெறலாம். அது மட்டுமின்றி, ஆங்காங்கே சுவர்களில் குழந்தைகள் கிறுக்கி வைக்கும் பென்சில் கறைகளைப் போக்கவும், கொஞ்சம் சாக்பீஸ் தடவி பின்னர் ரப்பர் வைத்து அழித்தால் சுலபமாக அந்தக் கறை நீங்கிவிடும்.
* துணிகளில் எண்ணெய்க் கறை, இங்க் கறை பட்டால், துணியால் துடைத்து எடுத்துவிட்டு குழந்தைகள் பயன்படுத்தும் வெள்ளை சாக்பீஸ் எடுத்துக்கொண்டு கறையில் சில வினாடிகள் தேய்த்தால் கறைகள் மறையும்.
* நெய் பொங்கல், அல்வா போன்ற உணவுப் பண்டங்களால் கையில் ஏற்படும் பிசுபிசுப்பு நீங்க, சாப்பிட்டதும் ஒரு சாக்பீஸை தூளாக்கி கையில் தடவி, ஒரு நிமிடம் கழித்து, கையை சோப் போட்டு கழுவுங்கள். பிசுபிசுப்பு காணாமல் போய்விடும்.