அன்று நடந்தவை அர்த்தமுள்ளவை!

Andru Nadanthavai Arthamullavai
Andru Nadanthavai Arthamullavaihttps://twitter.com

சில நேரங்களில் நாம் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். இதை எப்படி சமாளிப்பது என்று கூட திகைப்பு வரும். ஆனால், அதை சமாளிக்கும் திறனை கடவுள் நமக்கு அளித்திருப்பார். காரணமின்றி எதுவும் நம் வாழ்க்கையில் நடக்காது. அப்படி  நடந்த சில வித்தியாசமான விஷயங்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.

என் தோழி அடிக்கடி வருத்தப்படும் விஷயம், ‘தன் பிள்ளைகள் கிச்சனுக்குள் வந்தால் சமைக்கும்பொழுது சமையல் உபகரணங்களை எடுப்பதற்காக டிராயரை திறக்கிறார்கள். திறப்பவர்கள் அதை மூடாமல் போய் விடுகிறார்கள். பல முறை சொல்லி விட்டேன். திறந்ததை சரியாக மூடி விட்டு வேலையைக் கவனியுங்கள் என்று. ஆனால், அவர்கள் கேட்பதே இல்லை. ஒரு முறை அரைகுறையாக திறந்திருந்த டிராயரில் துணி மாட்டிக் கொண்டு நடக்கும்போது கீழே விழுந்து அதற்கு வைத்தியம் செய்யவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதன் பிறகுதான் அவர்கள் எதைத் திறந்தாலும் மூட வேண்டும் என்பதை புரிந்து கொண்டார்கள்’ என்று கூறினார்.

அதைக் கேட்டபோது, ஆசிரியரோ பெற்றோரோ போதிக்கும்போது புரியாதது எல்லாம் பாதிக்கும்போதுதான் புரியும். படித்து கற்றுக்கொள்வதை விட, பட்டு தெளிவதே வாழ்க்கை என்பதை உணர முடிந்தது.

எனது உறவினர் பெண்ணிடம் ஒரு பழக்கம் உண்டு. அவளுக்கு உடல்நிலை சரியில்லாதபொழுது உறவினர்கள் யாரையும் உதவிக்கு என்று அழைக்க மாட்டாள். தானாகவே எல்லாவற்றையும் சமாளித்து விடுவாள். ஆனால், நல்ல ஆரோக்கியமாக இருக்கும்பொழுது உறவினர்களை வருந்தி வருந்தி அழைப்பாள். பார்த்து பார்த்து செய்து பரிமாறுவாள். அவளின் உயர்வான பண்பு அனைவருக்கும் பிடிக்கும். அவளை நினைக்கும் பொழுது, ‘மகிழ்ச்சியையும் திருப்தியையும் உங்களுடைய உறவுகளாக வைத்துக் கொள்ளுங்கள்; துக்கமும் கவலையும் விருந்தாளிகள். அதை வழியனுப்பி வைத்து விடுங்கள்’ என்ற செய்தி என்னுள் பரவியது.

நான் பள்ளியில் படித்தபொழுது ஒரு வகுப்பு தோழி வரலாறு, புவியியல் பாடப் பரீட்சைக்கு வரலாற்றை மட்டும் முழுவதுமாக படிப்பாள். புவியியல் புத்தகத்தை தொடவே மாட்டாள். புவியியல் என்றால் அவளுக்கு பிடிக்காது. ஆதலால் வரலாறு புத்தகத்தை முழுவதுமாக மனப்பாடமே செய்து வைத்து அதில் 35 மதிப்பெண் பெற்று பாஸ் ஆகிவிடுவாள். ஆசிரியர் இப்படிப் படிக்காதே. இரண்டையும் சேர்த்துப் படி. இன்னும் நிறைய மதிப்பெண் வாங்குவாய் என்று கூறினாலும் கேட்க மாட்டாள். அவளை ஒரு முறை கல்லூரியில் சந்தித்தபொழுது, ‘என்ன பாடம் எடுத்திருக்கிறாய்’ என்று கேட்டேன். புவியியல் என்று கூறினாள். தூக்கிவாரிப் போட்டது எனக்கு. ‘நீயா?! எப்படி இப்படி ஒரு மாற்றம்?’ என்றேன். ‘கல்லூரியில் சேர வரும்பொழுதே வரலாறு படிக்க வேண்டும் என்றுதான் வந்தேன். வழியில் ஒரு கிழிந்த புத்தகம் கிடந்தது. அதைப் பிரித்து படித்த பொழுது முழுவதும் புவியியல் செய்திகளாகவே இருந்தது. அது எனக்கு புதுமையாகவும் இருந்தது. ஆதலால் புவியியல் பாடத்தை எடுத்து விட்டேன்’ என்றாள்.

‘கிழிந்த புத்தகம் என்று தூக்கி எறிந்து விடாதீர்கள்.  அதில் கூட நீங்கள் உயர்ந்து வாழ ஒருசில வரிகள் இருக்கும்.  ஒரு முறையேனும் படித்துப் பாருங்கள்!’ இந்த வரிகள் அவளின் செயலுக்கு அப்படியே பொருந்திப் போகிறதா இல்லையா?

என் தோழி இரண்டு வீட்டு பெண்மணிகளை வேலைக்குக் கூப்பிட்டு இருந்தாள். இரண்டு பேரிடமும் காய்கறி வாங்கிவரக் கூறினார். ஒரு பெண்மணி  சட்டென்று கிடைத்ததை வாங்கி வந்தாள். இன்னொரு பெண்மணி ஒவ்வொரு காயையும் பற்றி விசாரித்துக் கொண்டு  தரமானதாகவும், சரியான விலை படியுமாறும் பார்த்து வாங்கி வந்து மீதி பணத்தை தோழியிடம் கொடுத்தாள். அவளின் கவனத்தை கவனித்த தோழி, அவளுக்கு வேலை வாய்ப்பை வழங்கினாள். பிறகு அப்பெண்மணி பல்வேறு கலைகளை கற்றுத் தேர்ந்து  நன்கு சம்பாதிக்க ஆரம்பித்தாள்.

‘கடினமாக உழைத்தவர்களை விட, கவனமாக  உழைத்தவர்கள்தான் வாழ்க்கையின் உச்சத்தை அடைந்துள்ளனர்’ என்ற பொன்மொழியை இது புரிய வைத்தது.

இதையும் படியுங்கள்:
தலைவலி தீர்க்கும் ஐந்து வகை டீ!
Andru Nadanthavai Arthamullavai

பள்ளியில் படித்தபொழுது எனது தோழி ஒரு கதை சொல்லுவாள். ஒரு திருமணத்தில் அவளது பாட்டியை சிறுமியாக பார்த்த தாத்தா, தான் பார்த்த அவரையே திருமணம் செய்து கொண்டார். காரணம் கேட்டதற்கு, ‘ஒரு பெண் குடும்பம் நடத்த ஒரு படி நெல்லும், ஒரு ரூபா பணமும் இருந்தால் போதும்’ என்று கூறினாராம். ஆதலால் இவளையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று முடிவு எடுத்து நடந்ததாம். நடந்ததும் அவர் தாத்தாவும் ஒரு படி நெல்லையும், ஒரு ரூபா பணத்தையும் கொடுத்துவிட்டு குடும்பம் நடத்து பார்க்கலாம் என்றாராம். பாட்டியும் அசராமல் ஒரு ரூபாயில் 10 பைசாவை சேமித்துக் கொண்டு 90 பைசாவை வீட்டு செலவுக்கும், ஒரு படி நெல்லில் அரைப்படியை வீட்டுக்கு வைத்துக்கொண்டு, அரைப்படியை பொரித்து பொரியாக விற்றும் தினசரி பணத்தை சேமித்து வாழ்க்கையில் வெற்றி நடை போட்டார்களாம்.

‘சிறு சிறு கற்கள் இணைந்து ஒரு சுவராக மாறி பின்பு வீடாக உருவாவதைப் போலவே நமது சிறு சிறு முயற்சிகள் இணைந்து வெற்றியாக மாறி, பின்பு சாதனையாக மாற்றம் பெறுகிறது’ என்பதை இதன் மூலம் உணரலாம்.

ஆதலால் காரணம் இல்லாமல் நம் வாழ்க்கையில் எதுவும் நடப்பதில்லை. வெறும் காரணமே சொல்லிக்கொண்டு இருந்தால் வாழ்க்கையில் எதுவும் நடக்கப் போவதில்லை என்பதை நினைவில் கொண்டு, செய்ய வேண்டியவற்றை திருத்தமுடன் செய்து வெற்றி பெறுவோம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com