தலைவலி என்பது நம்மில் பலருக்கும் அடிக்கடி வரும் ஓர் உபாதை ஆகும். இதற்கு நூற்றுக்கும் மேற்பட்ட காரணங்களைக் கூறலாம். தலைவலி வரும்போது உடல் வலிமை குன்றி, பலவீனமான உணர்வு ஏற்படும். அதன் தீவிரத் தன்மையைக் குறிப்பிட, 'தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும்' என்று தமிழில் ஒரு பழமொழி கூட உண்டு. அப்படியான தலைவலி வரும்போது சிலர் மாத்திரைகளைப் போட்டு நிவாரணம் பெற முயல்வர். மாத்திரைகளை அடிக்கடி உபயோகிக்கும்போது அதனால் பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும். அதனால் இயற்கையான முறையில், காஃபின் (caffeine) இல்லாத ஐந்து வகையான டீயை அருந்தி தலைவலிக்கு எப்படி தீர்வு காணலாம் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
பெப்பர்மின்ட் டீ அருந்துவதால் அதிலுள்ள மென்த்தால், தன்னிடமுள்ள இனிமையான ஆறுதல்படுத்தும் குணத்தினால் தலைவலியிலிருந்து விடுபட வழி வகுக்கும்; தசைகளை தளர்வுறச் செய்து, வலியைக் குறைக்கும்.
டென்ஷனால் வரும் தலைவலிக்கு அதன் அறிகுறி தோன்றும்போதே இஞ்சி டீ அருந்திவிட்டால், இஞ்சியிலுள்ள ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணமானது தலைவலி தீவிரமடையும் முன்பே குணமடையச் செய்துவிடும்.
ஸ்ட்ரெஸ் மற்றும் மனக்கவலை மூலம் உண்டாகும் தலைவலிக்கு கெமோமில் (chamomile) டீ அருந்தினால் நல்ல நிவாரணம் கிடைக்கும். கெமோமில்லில் உள்ள அமைதி தரும் குணமானது, உடலை நன்கு தளர்வுறச் செய்து வலியைக் குறைத்துவிடும்.
லாவண்டர் (Lavender) டீ நரம்புகளுக்கு தளர்வும் அமைதியும் தரவல்லது. இதிலிருந்து வரும் சுகந்தமான வாசனை டென்ஷனைக் குறைத்து தலைவலியையும் குணப்படுத்திவிடும் வலிமை உடையது.
ப்ளூ டீயில் எல் தியானைன் (L.Theanine) என்றொரு கூட்டுப்பொருள் அதிகளவில் உள்ளது. இது உடலை கவலைகளிலிருந்தும் ஸ்ட்ரெஸ்ஸிலிருந்தும் விடுபட்டு சௌகரியமான மனநிலைக்கு கொண்டுவரச் செய்யும். இதனால் தலைவலியும் நீங்கிவிடும்.
இவ்வாறு உடலுக்குள் நச்சுக் கலப்பு எதுவும் சேர்ந்துவிடும் அபாயமின்றி இயற்கை முறையில் தயாரிக்கப்படும் டீயை அருந்தி தலைவலிக்கு நிவாரணம் காண்பது சிறந்த தீர்வாகும்.