
எண்பதாம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் ஃப்ளாட்ஸ் எனப்படும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் அவ்வளவாக உருவாகவில்லை. அதுவரை ஓட்டுவீடுகள் மற்றும் மெட்ராஸ் டெரஸ் எனப்படும் ஒற்றை மாடி வீடுகளே பெரும்பாலும் கட்டப்பட்டன. இதன் பின்னர் ஆர்சிசி எனப்படும் காங்க்ரீட் வீடுகள் கட்டப்பட்டன. நிலங்களின் விறுவிறு என்ற விலை ஏற்றத்தின் காரணமாக அனைவராலும் வீட்டு மனைகளை வாங்கி தனி வீடு கட்ட முடியாத சூழல் உருவானது.
இதன் பின்னரே ஃப்ளாட்ஸ் எனப்படும் அடுக்குமாடி வீடுகள் கட்டுமான நிறுவனங்களால் கட்டி விற்பனை செய்யப்பட்டன. இரண்டாயிரம் ஆண்டிற்குப் பின்னரே பலமாடிகள் கொண்ட மல்ட்டி ஸ்டோரீடு பில்டிங் என்ற பத்து அல்லது பதினைந்து மாடிகள் கொண்ட பிரம்மாண்டமான குடியிருப்புகள் கட்டப்பட்டன. இனி நாம் இந்த பதிவில் ஃப்ளாட்ஸ் எனப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள நன்மைகள் சிக்கல்கள் இவற்றைப் பற்றி சற்று பார்ப்போம்.
காலிமனையை வாங்கி அதில் ஒரு தனி வீடு கட்டுவதென்பது பலருக்கும் பெரும் சவாலான காரியமாகும். மேலும் இதற்கு அதிக அளவில் பணம் தேவைப்படும். ஆனால் ஃப்ளாட்டைப் பொறுத்தவரை அவரவர் வசதிக்கேற்ப தகுந்த இடத்தில் வாங்கிக் கொள்ளலாம். வங்கிக் கடனும் சுலபமாகக் கிடைக்கும்.
மாடிப்படி, லாபி முதலான பொதுப் பயன்பாட்டுப் பகுதிகளை அனைவரும் பங்கிட்டுக் கொள்ளுவதால் தனி வீடுகளின் விலையைவிட ஃப்ளாட்களின் விலை சற்று குறைவாகவே உள்ளது.
தனி வீடுகளில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள அவ்வப்போது ஆட்களை நாம் தேட வேண்டும். செலவும் அதிகம் ஆகும். ஆனால் ஃப்ளாட்களில் அசோசியேஷன் உள்ளதால் மாதாமாதம் நாம் செலுத்தும் பராமரிப்புத் தொகையைக் கொண்டு அவர்களே பழுதுகளை அவ்வப்போது சரிசெய்து தந்து விடுவார்கள்.
ஃப்ளாட்களில் 24 மணி நேர செக்யூரிட்டி வசதிகள் இருக்கும். இதனால் திருட்டு பயம் என்பது அவ்வளவாக இருக்காது. ஆனால் தனி வீடுகளில் பாதுகாப்பு என்பது சற்று குறைவுதான்.
ஃப்ளாட்களில் தண்ணீர், கழிவுநீர்த் தொட்டிகள் முதலான பிரச்சினைகள் ஏற்பட்டால் அசோசியேஷன் நிர்வாகிகள் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து விடுவார்கள்.
சற்று பெரிய குடியிருப்புகள் என்றால் அதில் நீச்சல் குளம், கோவில், உடற்பயிற்சிக் கூடம் முதலான வசதிகள் இருக்கும். தேவைப்படுபவர்கள் அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். சிறுவர்கள் விளையாட சிறிய பூங்காக்களும் விளையாட்டு சாதனங்களும் நிறுவப்பட்டிருக்கும். பல சிறுவர்களும் ஒன்றாக விளையாடும் சூழல் உள்ளதும் ஒரு வசதிதான்.
ஃப்ளாட்களில் ஒவ்வொரு உரிமையாளருக்கும் தனித்தனியே கார் பார்க்கிங் வசதி தரப்படுகிறது. ஆனால் பெருநகரங்களில் இடப்பற்றாக்குறை காரணமாக தனி வீடுகளில் பெரும்பாலும் இந்த வசதி இருக்காது.
தனிவீடுகளுக்கு செலவாகும் பராமரிப்புச் செலவு ஃப்ளாட்டுகளை விட சற்று அதிகமாகவே இருக்கும்.
இனி ஃப்ளாட்களில் உள்ள சிக்கல்களைப் பற்றி சற்று பார்ப்போம்.
தனிவீடுகளில் வசிப்பிடத்தின் அளவு (Living Space) சற்று அதிகமாகவே இருக்கும். ஆனால் ஃப்ளாட்களில் வசிப்பிடத்தின் அளவு பொதுவாக குறைவாகவே இருக்கும்.
ஃப்ளாட்களில் உள்ள ஒவ்வொரு வீடும் ஒரு தனித்தீவு போலத்தான் அமைந்திருக்கும். ஃப்ளாட்களில் குடியிருப்பவர்கள் பெரும்பாலும் அக்கம்பக்கத்து வீட்டில் உள்ளோரிடம் அவ்வளவாகப் பழகுவதில்லை என்’று கூறப்படுகிறது.
தனி வீடுகளில் வசிப்பவர்கள் எதிர்வீடு அக்கம் பக்கத்து வீடுகளில் உள்ளோரிடம் பழக வாய்ப்புகள் அதிகம். ஆனால் ஃப்ளாட்களில் இந்த வாய்ப்புகள் மிகவும் குறைவு.
பெருமழைக் காலங்களில் பொதுவாக தனி வீடுகளில் வசிப்போரை விட ஃப்ளாட்களில் வசிப்போரே அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள்.
தீ விபத்து, பூகம்பம் முதலான இயற்கைச் சீற்றங்கள் நிகழும் போது தனி வீடுகளில் இருந்து வெளியேறுவது சுலபம். ஆனால் ஃப்ளாட்டில் வசிப்பவர்கள் லிப்ட்டை நம்பி இருப்பதால் ஒரே சமயத்தில் அனைவரும் வெளியேறுவது என்பது மிகவும் சவாலான காரியமாகும்.
ஃப்ளாட்களில் சாதகமான அம்சங்களும் உள்ளன. பாதகமான அம்சங்களும் உள்ளன. அவரவர் மனநிலை மற்றும் வசதிப்கேற்ப ஃப்ளாட்டா அல்லது தனி வீடா என்பதைத் தீர்மானித்துக் கொள்ளலாம்.