

ஒரு துண்டு ஸ்வீட் கீழே விழுந்தா போதும், அடுத்த அஞ்சாவது நிமிஷம் அங்க எறும்புகள் வரிசைகட்டி நிக்க ஆரம்பிச்சுடும். இது நம்ம எல்லார் வீட்லயும் நடக்குற கதைதான். சர்க்கரை டப்பா, பிஸ்கட் பாக்கெட்னு எதையும் விட்டுவைக்காது. இதற்காகக் கடையில் விற்கும் எறும்புப் பொடியையோ, ஸ்ப்ரேக்களையோ பயன்படுத்தினால், வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கோ அல்லது செல்லப் பிராணிகளுக்கோ ஆபத்தாக முடியலாம்.
அதனால, எந்தவித ரசாயனமும் இல்லாமல், நம் சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்தே இந்த எறும்புகளை எப்படி நிரந்தரமாக விரட்டுவது? இதோ பாட்டி வைத்தியம் சொல்லும் 10 சூப்பர் டிப்ஸ்.
வாசனைக்கு ஓடும் எறும்புகள்!
எறும்புகளுக்கு மோப்ப சக்தி அதிகம். அவை ஒருவருக்கொருவர் வாசனையை வைத்துதான் பாதையை அமைக்கும். அந்த வாசனையைக் குழப்பினால் போதும், எறும்புகள் வழிதவறி ஓடிவிடும்.
எலுமிச்சை சாறு: எறும்புகள் வரும் பாதையில் எலுமிச்சைச் சாற்றைப் பிழிந்து விடுங்கள் அல்லது எலுமிச்சைத் தோல் கலந்த நீரால் தரையைத் துடையுங்கள். அந்த 'சிட்ரஸ்' வாசனை எறும்புகளுக்குச் சுத்தமாகப் பிடிக்காது.
வினிகர்: சம அளவு தண்ணீர் மற்றும் வெள்ளை வினிகரை கலந்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் வைத்துக்கொள்ளுங்கள். எறும்பு வரும் ஜன்னல் ஓரங்கள், சமையலறை மேடைகளில் இதைத் தெளித்தால், எறும்புகள் அந்தப் பக்கம் எட்டிக்கூட பார்க்காது.
பட்டை: பிரியாணிக்கு போடும் பட்டை இருக்கிறதல்லவா? அதை பொடி செய்து எறும்பு வரும் பாதையில் தூவி விடலாம். அதன் காரமான வாசனை எறும்புகளுக்கு ஒரு தடுப்புச் சுவர் போலச் செயல்படும்.
புதினா எண்ணெய்: ஒரு பஞ்சில் சில சொட்டு புதினா எண்ணெயை நனைத்து, எறும்புகள் வரும் மூலைகளில் வையுங்கள். வீடு வாசனையாகவும் இருக்கும், எறும்புகளும் வராது.
சாக்பீஸ்: இது பலருக்கும் தெரிந்த டெக்னிக். எறும்புகள் வரும் வழியில் சாக்பீஸ் கொண்டு ஒரு கோடு போடுங்கள். சாக்பீஸில் இருக்கும் கால்சியம் கார்பனேட், எறும்புகளுக்கு ஒரு தடையாக இருக்கும்.
பேபி பவுடர்: சாக்பீஸ் இல்லை என்றால், வீட்டில் இருக்கும் டால்கம் பவுடரைத் தூவி விடலாம். இதுவும் எறும்புகளின் பாதையைத் துண்டிக்கும்.
உப்பு: சாதாரண சமையல் உப்பை எறும்பு வரும் வாசலில் தூவி விடுவது ஒரு எளிய மற்றும் சிறந்த பரிகாரம்.
கிராம்பு: சர்க்கரை டப்பாவுக்குள் எறும்பு வராமல் இருக்க, உள்ளே நான்கைந்து கிராம்புகளைப் போட்டு வையுங்கள்.
மிளகுத் தூள்: எறும்புகளுக்குக் காரம் என்றால் அலர்ஜி. எறும்புப் புற்றின் மீதோ அல்லது வரும் வழியிலோ மிளகுத் தூளைத் தூவினால், அவை உடனடியாக இடத்தை காலி செய்யும்.
வெள்ளரிக்காய் தோல்: கசப்புத் தன்மை கொண்ட வெள்ளரிக்காய் தோல்களை எறும்பு வரும் இடத்தில் வைத்தால், அந்த வாசனைக்கு எறும்புகள் வராது என்று கூறப்படுகிறது.
மேலே சொன்ன வழிகள் எறும்புகளை விரட்டினாலும், அவை மீண்டும் வராமல் இருக்க முக்கியமானது 'சுத்தம்'. வீட்டை எப்போதும் ஈரம் இல்லாமலும், சுத்தமாகவும் வைத்துக்கொண்டாலே பாதி எறும்புத் தொல்லை குறைந்துவிடும். மீதிக்கு இந்த இயற்கை வைத்தியங்களைப் பயன்படுத்துங்கள்.