
பொதுவாக பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் மெல்லிய மனம் படைத்த பெண்களுக்கு வீட்டின் சமையலறை ஸ்டோர்ரூம், குளியலறை போன்ற இடங்களில் சிறிய சைஸ் முதலை போல உள்ள பல்லியைக் கண்டாலே பாம்பைக் கண்டது போல அஞ்சுவார்கள். பல்லி விழுந்த உணவை உண்டு மயக்கம், வாந்தி என்ற செய்திகளை கேட்டிருப்போம். நிஜத்தில் வீட்டுப் பல்லிகளுக்கு விஷமுண்டா இல்லையா என்பது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
வீட்டுப் பல்லிகளுக்கு விஷம் உண்டா?
உலகளவில் இரண்டு பல்லி இனங்கள் மட்டும் விஷம் உடையவை. இவை மனிதர்களுக்கு ஆபத்தை உண்டாக்குபவை. கிலா மான்ஸ்டர் மற்றும் மெக்சிகன் மணி பல்லி இரண்டும் தான் கொடிய விஷமுள்ளவை. ஆனால் இவை வட அமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் மட்டும் காணப்படுகின்றன இந்தியாவில் இவை இல்லை.
வீட்டுச் சுவர்கள் மற்றும் கூரைகளில் உள்ள பல்லிகளுக்கு பொதுவாக விஷமில்லை. நச்சுக்களை கொண்டிருக்கும் சிறப்பு சுரப்புகள் மற்றும் கோரைப்பற்கள் பல்லிகளிடத்தில் இல்லை. உண்மையில் வீட்டில் இருக்கும் பல்லிகள் மனிதர்களுக்கு நன்மை பயக்கின்றன. அவை மனிதர்களுக்குத் தொல்லை தரும் கொசுக்கள், ஈக்கள், கரப்பான் பூச்சிகள் மற்றும் எறும்புகள் போன்ற உயிரினங்களை உண்ணுகின்றன. இதனால் வீட்டை சுத்தமாக வைத்திருப்பதுடன் மனிதர்களை பல ஆரோக்கிய கேட்டிலிருந்து காக்கின்றன என்பதுதான் உண்மை.
பல்லி விழுந்த உணவு விஷமா ?
உண்மையில் பல்லி விழுந்த உணவு விஷமல்ல. இது மரணத்தை ஏற்படுத்தாது. ஆனால் சில ஆரோக்கியக் கேடுகளை உண்டாக்கும். பிற விலங்குகளைப் போலவே பல்லிகள், பாக்டீரியாக்கள் மற்றும் ஒட்டுண்ணிகளை அவற்றின் உடலில் சுமந்து சென்று மலத்தின் மூலமாக வெளியேற்றுகின்றன. அதனால் பல்லி ஒரு நோய் பரப்பும் காரணியாக இருக்கலாம். மேலும் அது இறந்து போன கரப்பான்பூச்சி அல்லது வேறு ஏதாவது உயிரினங்களை உண்ணும் போது பாக்டீரியாக்களை மேலும் பரப்பும்
அதனால் பல்லி விழுந்த உணவை உண்ணும் போது வயிற்றுப்போக்கு, வயிற்றுப் பிடிப்புகள், காய்ச்சல், குமட்டல், வாந்தி, தலைவலி போன்றவை ஏற்படும். ஒவ்வாமை உள்ள சிலருக்கு கடுமையான பாதிப்புகளை கூட ஏற்படுத்தும். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வேண்டி இருக்கும்.
பல்லி விழுந்த உணவை உண்ணும் இளம் குழந்தைகள், குறிப்பாக ஐந்து வயதுக்கு உட்பட்டவர்கள், முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு அமைப்பு உள்ள நபர்கள், எச்.ஐ.வி, எய்ட்ஸ், புற்றுநோய் சிகிச்சை எடுத்துக் கொள்பவர்கள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்த நபர்கள் போன்றவர்களுக்கு கடுமையான ஆபத்தை உண்டாக்கலாம்.
உளவியல் ரீதியான விளைவுகள்:
பெரும்பாலும் வெறுப்பு, பயம் அல்லது பல்லியின் மீது உள்ள அருவருப்பு போன்றவற்றால் குமட்டல் மற்றும் வாந்தி தூண்டப்படுகிறது. பல்லி விழுந்த உணவை உண்டு விட்டோமே என்ற பதட்டத்திலும் பீதியிலும் தலை சுற்றலும் மயக்கம் போன்ற அறிகுறிகளும் வரும்.
எனவே வீட்டில் உணவு சமைத்து முடித்துவிட்டு அவற்றை முறையாக மூடி வைப்பது அவசியம். காய்கறிகள், பழங்கள், தானியங்கள் போன்றவற்றையும் மூடி வைக்க வேண்டும். பாத்திரங்கள் மீது பல்லி ஏறிவிட்டால் அவற்றை சோப்பு போட்டு நன்றாக கழுவ வேண்டும்.
வீட்டுப் பல்லி கடித்துவிட்டால்?
பல்லிகள் மிக மிக அரிதாகவே மனிதர்களைக் கடிக்கும். அச்சுறுத்தப்பட்டால், தப்பிக்க முடியாமல் போனால், தன்னை தற்காத்துக் கொள்ள மனிதர்களை கடிக்கும்.
இதன் பற்கள் சிறியதாகவும் தாடைகள் பலவீனமாகவும் இருக்கும். பொதுவாக தோலில் சில சிராய்ப்புகள் மற்றும் சிறிய கீறலை மட்டுமே ஏற்படுத்தும். இதனால் ஆபத்து ஏதுமில்லை. லேசான வலி, தோல் சிவத்தல், வீக்கம், உண்டாகும். ரத்த ஓட்டத்தில் அதன் நச்சுப் பொருளையோ அல்லது விஷத்தையோ செலுத்துவதில்லை. ஆனால் பல்லிகடித்தாலோ ,மேலே விழுந்து விட்டாலோ உடனே அந்த இடத்தை சோப்புப் போட்டுக் கழுவுவது மிக அவசியமாகும். இல்லாவிட்டால் பாக்டீரியா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. வலி அதிகமாக இருந்தால் ஐஸ்கட்டியை பயன்படுத்தி ஒத்தடம் கொடுக்கலாம். தொற்று ஏற்பட்டால் மருத்துவ உதவி நாடலாம்.