ஒருவர் அணியும் ஆடை அவரை அழகாக தோற்றமளிக்க வைப்பது மட்டுமல்லாமல் அவர் எப்படி உணர்கிறார் என்பதையும் அவரைப் பற்றி பிறர் என்ன நினைக்கிறார்கள் என்பதையும் உணர வைக்கும். ஒரு மனிதனின் மனநிலைக்கும் அவன் தேர்ந்தெடுக்கும் ஆடை நிறங்களுக்கும் இடையே ஒரு வலுவான தொடர்பு உள்ளதாக உளவியல் சொல்கிறது.
உணர்ச்சி நிலைகள், ஆளுமைப் பண்புகள் மற்றும் மனதின் பிற வெளிப்பாடுகளை மனிதன் அணியும் ஆடையின் நிறங்கள் வெளிப்படுத்துகின்றன. நிறங்கள் நம் உணர்ச்சிகளில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பல்வேறு சூழ்நிலைகளில் நாம் எப்படி உணர்கிறோம், நடந்து கொள்கிறோம் என்பதை வடிவமைக்கின்றன.
சிவப்பு நிறம்:
ஆற்றல், ஆர்வம் மற்றும் உற்சாகம் போன்ற வலுவான உணர்ச்சிகளை தூண்டுகிறது. இந்த நிறத்தில் ஆடை அணிபவர்கள் தைரியம் மிக்கவர்களாகவும் உற்சாகமானவர்களாகவும் இருப்பார்கள். சிவப்பு நிற உடை, அணிந்திருப்பவர்களின் இதயத் துடிப்பு மற்றும் கிளர்ச்சியை அதிகரிக்க கூடும். ஆனால் சில சூழல்களில் ஆக்கிரமிப்பு மற்றும் மன அழுத்தத்தை தூண்டக்கூடும்.
ஆரஞ்சு:
உற்சாகம், அரவணைப்பு மற்றும் தூண்டுதலுடன் தொடர்புடையது. இந்த நிறத்தை விரும்பி அணிபவர்கள் எப்போதும் வேடிக்கை மனம் கொண்டவர்களாகவும் ஆற்றல் மிக்கவர்களாகவும் இருப்பார்கள்.
மஞ்சள்:
இந்த நிறமும் பெரும்பாலும் நம்பிக்கையுடன் தொடர்புடையது. மஞ்சள் நிற ஆடைகளை அதிகமாக விரும்பி அணிபவர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பார்கள். ஆனால் அதிகப்படியான அழுத்தமான மஞ்சள் நிற ஆடைகளை அணிபவர்கள் பதட்டமான மனநிலையுடன் இருப்பார்கள். நிறைய நேரங்களில் விரத்தியுடன் காணப்படுவார்கள்.
நீலம்:
அமைதி, நிலைத்தன்மை மற்றும் நம்பிக்கையை குறிக்கிறது இந்த நிறம். இந்த நிறத்தில் ஆடைகளை விரும்பி அணியும் மனிதர்கள் ஒருவிதமான அமைதியை மனதில் உணர்வார்கள். இது மன அழுத்தத்தை குறைத்து ரிலாக்ஸ்டாக வைக்கும்.
பச்சை:
இது சமநிலை, நல்லிணக்கம் மற்றும் புத்துணர்ச்சியை குறிக்கிறது. மருத்துவமனைகளில் பச்சை நிறத்தில் நோயாளிகளின் உடை, படுக்கை விரிப்பு போன்றவை இருக்கும். இது அவர்களது பதட்டமான மனநிலையை மாற்றி அமைதியான சாந்தமான மனநிலையைத் தரும். மேலும் இந்த நிறம் படைப்பாற்றல் மற்றும் நேர்மறை உணர்ச்சிகளை மேம்படுத்தும். மன அழுத்தத்தை வெகுவாக குறைக்கும்.
ஊதா:
ஆடம்பரம், படைப்பாற்றல் மற்றும் ஆன்மீகத்துடன் தொடர்புடையது. ஊதா நிறத்தில் ஆடைகளை விரும்பி அணிபவர்கள் மிகுந்த கற்பனை மிக்கவர்களாகவும் படைப்பாற்றலிலும் சிறந்து விளங்குவார்கள். ஆனால் சில நேரங்களில் மனச்சோர்வை உண்டாக்கும்.
கருப்பு:
சிலருக்கு கருப்பு நிறத்தில் ஆடை அணிய மிகவும் பிடிக்கும். இது சக்தி, நேர்த்தி மற்றும் மர்மத்தை குறிக்கிறது. கருப்பு நிற ஆடைகளை அதிகமாக அணிபவர்கள் சோகமான மனநிலையை கொண்டிருப்பார்கள். அச்சமூட்டும் மனதையும் கொண்டிருப்பார்கள்.ஆடை
வெள்ளை:
தூய்மை, எளிமையின் சின்னம் வெள்ளை. இந்த நிறத்தை தொடர்ந்து பயன்படுத்துபவர்களின் மனம் அவ்வப்போது வெறுமையில் ஆழ்ந்து விடும்.
சாம்பல் நிறம்:
இந்த நிறத்தில் ஆடைகளை விரும்பி அணியும் மனிதர்கள் எதிலும் பற்றற்ற நிலையில் இருப்பார்கள். நடுநிலைத்தன்மையோடு இருப்பார்கள்.
கூடுதல் தகவல்கள்:
பொதுவாக பிரகாசமான வண்ணங்களில் உடை அணிந்தால் அது மனதை உற்சாகப்படுத்துகிறது. வெளிர் நிறங்களை விட அதிக பிரகாசமான நிறங்கள் வலுவான உணர்ச்சிகளைக் கொண்டிருக்கின்றன.
கலைஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் போன்றவர்களுக்கு படைப்பாற்றல் திறன் அதிகமாக இருக்கும். இவர்கள் நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு போன்ற நிறங்களில் உள்ள ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும்.
நீல நிறம் நிதானத்தையும் கூட்டு சிந்தனையையும் ஊக்குவிக்கிறது. படைப்பாற்றலை அதிகரிக்கும். பச்சை நிறம் புதிய கண்ணோட்டங்களையும் உணர்ச்சிகளை புதுப்பித்தலையும் குறிக்கிறது; புதுமையான யோசனைகளையும் தரும். மஞ்சள் புத்துணர்ச்சி, உற்சாகம், மனத் தெளிவையும் தந்து கற்பனையை தூண்டுகிறது. எனவே இதை படைப்பாற்றலுக்கான வலுவான நிறமாக உளவியலாளர்கள் கருதுகிறார்கள். மஞ்சள் நிறம் புதுமை ஆய்வகங்களில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.