

விமானத்தில் முதன்முறையாகப் பயணம் செய்பவர்களுக்குப் பல ஆச்சரியங்கள் காத்திருக்கும். மேகங்களுக்கு நடுவே பறக்கும் அனுபவம் ஒரு பக்கம் இருந்தாலும், விமானக் கழிப்பறைக்குள் சென்று Flush பொத்தானை அழுத்தியவுடன் வரும் அந்தப் பயங்கரமான உறிஞ்சும் சத்தம் பலரையும் ஒரு கணம் திடுக்கிட வைக்கும்.
நம் வீட்டில் பயன்படுத்தும் டாய்லெட்டுகளில் பல லிட்டர் தண்ணீர் பாய்ந்து கழிவுகளை வெளியேற்றும். ஆனால், விமானத்தில் மிகக் குறைந்த அளவு தண்ணீரை வைத்துக்கொண்டு, அல்லது தண்ணீரே இல்லாமல் எப்படி இதைச் சுத்தமாக்குகிறார்கள்?
ஈர்ப்பு விசை இங்கு வேலை செய்யாது!
வீட்டில் உள்ள கழிப்பறைகள் 'ஈர்ப்பு விசை' மற்றும் தண்ணீரின் அழுத்தத்தை நம்பிச் செயல்படுகின்றன. ஆனால், வானத்தில் பறக்கும் விமானம் மேகக் கூட்டங்களுக்கிடையே குலுங்கும்போதும், வளைந்து திரும்பும்போதும் இந்த முறை எடுபடாது. தண்ணீர் வெளியே சிதற வாய்ப்புள்ளது. அதனால்தான் விமானங்களில் 'Vacuum Toilet’ என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறார்கள். இதை ஜேம்ஸ் கெம்பர் என்பவர் கண்டுபிடித்தார்.
காற்றுதான் இங்கே ஹீரோ!
விமானக் கழிப்பறைக் கோப்பைகள் ஒருவித வழுவழுப்பான பூச்சால் செய்யப்பட்டிருக்கும். இதனால் கழிவுகள் அதில் ஒட்டாது. நீங்கள் உங்கள் வேலையை முடித்துவிட்டு 'ஃப்ளஷ்' பட்டனை அழுத்தியவுடன்,
முதலில், மிகச் சிறிதளவு நீர் அல்லது கிருமிநாசினி திரவம் கோப்பையைச் சுற்றி வந்து ஈரமாக்கும்.
அடுத்த நொடியே, கழிப்பறையின் அடியில் உள்ள ஒரு வால்வு திறக்கும்.
விமானத்தின் வெளிப்புறத்தில் இருக்கும் காற்றழுத்தத்திற்கும், உட்புற அழுத்தத்திற்கும் இடையே உள்ள வித்தியாசத்தாலும், விமானத்தில் உள்ள பிரத்யேக Vacuum Pump மூலமாகவும் ஒரு சூறாவளி போன்ற காற்று உள்ளே இழுக்கும்.
வீட்டில் நாம் Vacuum Cleaner வைத்துத் தூசியை உறிஞ்சுவது போல, இங்கே காற்றானது கழிவுகளை அசுர வேகத்தில் உறிஞ்சி உள்ளே இழுத்துச் செல்லும்.
கழிவுகள் எங்கே செல்கின்றன?
பலர் நினைப்பது போல, விமானிகள் ஒரு பட்டனை அழுத்தியதும் கழிவுகள் நடுவானில் கீழே கொட்டப்படுவதில்லை. அப்படிச் செய்வது சட்டவிரோதம் மற்றும் ஆபத்தானது. அதிவேகத்தில் உறிஞ்சப்படும் இந்தக் கழிவுகள், குழாய்கள் வழியாகப் பயணித்து, விமானத்தின் பின்பகுதியில் இருக்கும் ஒரு ராட்சதத் தொட்டியில் போய்ச் சேகரிக்கப்படும். இந்தத் தொட்டி மிகவும் பாதுகாப்பாக மூடப்பட்டிருக்கும்.
விமானம் தரையிறங்கிய பிறகே, கழிவு அகற்றும் லாரிகள் வந்து, ஒரு பெரிய குழாய் மூலம் அந்தத் தொட்டியில் உள்ள கழிவுகளை உறிஞ்சி எடுத்துச் சென்று சுத்திகரிக்கும்.
விமானப் பயணத்தின்போது ஒவ்வொரு கிலோ எடையும் எரிபொருளைத் தீர்மானிக்கும். பழைய முறைப்படி தண்ணீரைப் பயன்படுத்தினால், டன் கணக்கில் தண்ணீரைச் சுமந்து செல்ல வேண்டும். அது விமானத்தின் எடையை அதிகரித்துவிடும். ஆனால், இந்த 'வெற்றிடத் தொழில்நுட்பம்' தண்ணீரை மிச்சப்படுத்துவது மட்டுமல்லாமல், சுகாதாரத்தையும் பேணுகிறது.