அரிசி, பருப்பில் வண்டு தொல்லையா? ஒரு தீப்பெட்டி போதும்... பூச்சிகள் ஓடிவிடும்!

Rice weevil
Rice weevil
Published on

"அடடா... மழை பெய்யுதே" என்று ஜன்னல் ஓரம் உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பது மனசுக்கு என்னவோ இதமாகத்தான் இருக்கும். ஆனால், அப்படியே சமையலறைப் பக்கம் போனால் இல்லத்தரசிகளுக்குத் தலைவலி ஆரம்பித்துவிடும். காரணம், இந்த ஈரப்பதமான வானிலை. நாம் ஆசை ஆசையாக, விலை கொடுத்து வாங்கி வைத்திருக்கும் பாசுமதி அரிசியிலும், துவரம் பருப்பிலும் கறுப்பு கறுப்பாக வண்டுகள் மொய்ப்பதைப் பார்த்தால் யாருக்குத்தான் வயிறு எரியாது? 

ஒருமுறை வண்டு வைத்துவிட்டால், அந்தப் பொருளைச் சுத்தம் செய்வதே பெரும்பாடு. சில சமயம் தூக்கிப் போடும் நிலைமை கூட வரும். ஆனால் கவலைப்படாதீர்கள், நம்ம வீட்டு அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் சாதாரணப் பொருட்களை வைத்தே, இந்தப் பூச்சிகளுக்கு ஒருநாளும் நுழைய முடியாதபடி 'செக்-மேட்' வைக்கலாம். அது எப்படி என்று பார்ப்போம்.

ஈரப்பதத்தை விரட்டுங்கள்!

முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டியது, பூச்சிகளின் முதல் எதிரி சூரிய வெளிச்சம். மழைக்காலத்தில் எப்போதாவது வெயில் எட்டிப்பார்க்கும் இல்லையா? அந்த கேப்பில், வண்டு வந்த அரிசியையோ அல்லது பருப்பையோ ஒரு பெரிய தாம்பாளத்தில் கொட்டி, நல்ல வெயிலில் காய வையுங்கள். 

அந்தச் சூட்டில் புழுக்கள் தாாகவே செத்துவிடும் அல்லது ஓடிவிடும். அதேபோல, மளிகைப் பொருட்களைச் சில்வர் டப்பாக்களில் வைப்பதை விட, காற்று புகாத கண்ணாடி பாட்டில்கள் அல்லது கடினமான பிளாஸ்டிக் டப்பாக்களில் போட்டு இருக்கமாக மூடி வைப்பது ரொம்ப முக்கியம்.

மஞ்சள் மற்றும் வேப்பிலை!

நமது பாரம்பரியத்தில் மஞ்சள் இல்லாத இடமே இல்லை. துவரம் பருப்பு, கடலை பருப்பு போன்றவற்றை டப்பாவில் கொட்டும் முன்பு, அதில் கொஞ்சம் மஞ்சள் தூளைத் தூவி விடலாம் அல்லது விளக்கெண்ணெய் (Castor oil) சில துளிகள் விட்டுப் பிசரி வைக்கலாம். மஞ்சளின் நெடி பூச்சிகளுக்குப் பிடிக்காது.

அதேபோல, அரிசி மூட்டை அல்லது அரிசி டிரம்மில், நன்கு காய்ந்த வேப்பிலைகளை உருவிப் போட்டு வையுங்கள். வேப்பிலையின் கசப்புத் தன்மையும், வாசனையும் வண்டுகளை அண்டவே விடாது. இது கிராமங்களில் இன்றும் கடைபிடிக்கும் ஒரு டெக்னிக்.

இதையும் படியுங்கள்:
தமிழக தீப்பெட்டி தொழிற்சாலைகள் மூடல்: இன்று முதல் உற்பத்தியாளர்கள் அதிரடி!
Rice weevil

காரம் மற்றும் மசாலா வாசனை!

பூச்சிகளுக்குக் காரமான வாசனையும் ஆகாது. அதனால், பருப்பு டப்பாக்களில் நான்கைந்து காய்ந்த மிளகாயைக் காம்பு கிள்ளாமல் அப்படியே போட்டு வையுங்கள். மிளகாய் நெடிக்கு வண்டு வராது. அதேபோல, பிரியாணிக்கு பயன்படுத்தும் பிரிஞ்சி இலை (Bay leaf), லவங்கம் (கிராம்பு) ஆகியவற்றையும் போட்டு வைக்கலாம். இந்த மசாலா வாசனை நமக்கு 'கமகம'வென்று இருக்கும், ஆனால் பூச்சிகளுக்கு அது அலர்ஜி.

இன்னொரு சூப்பர் ஐடியா, பூண்டுப் பற்களைத் தோலுரிக்காமல் அப்படியே அரிசி அல்லது பருப்புக்குள் புதைத்து வைப்பது. பூண்டின் காரமான மணம் பூச்சிகளை விரட்டும். ஆனால், பூண்டு காய்ந்து போனால் அவ்வப்போது மாற்ற வேண்டும்.

இதையும் படியுங்கள்:
தீப்பெட்டி ஈரமாகி போச்சா? - பயனுள்ள வீட்டு குறிப்புகள் இதோ !
Rice weevil

தீப்பெட்டி!

இது பலருக்கும் தெரியாத ஒரு டிப்ஸ். தீப்பெட்டியில் மருந்து இருக்கும். அதில் 'கந்தகம்' (Sulphur) உள்ளது. இந்தப் பூச்சிகளுக்குக் கந்தகத்தின் வாசனை சுத்தமாகப் பிடிக்காது. எனவே, ஒரு தீப்பெட்டியை அப்படியே பருப்பு டப்பாவுக்குள் போட்டு வையுங்கள். இது விசித்திரமாகத் தோன்றினாலும், மிகச் சிறப்பாக வேலை செய்யும் ஒரு வழிமுறை.

மழைக்காலம் முடியும் வரை கொஞ்சம் விழிப்புணர்வுடன் இருந்தால் போதும். ஆயிரக்கணக்கில் பணம் செலவு செய்து வாங்கிய மளிகைப் பொருட்களை வீணாக்காமல் பாதுகாக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com