
நம் முன்னோர்கள் பழக்க வழக்கங்கள் எதற்கும் ஒரு அர்த்தம் இருக்கும். சாம்பிராணி தூபம் போடும்போது சாம்பிராணி புகையை சுவாசிக்க, அது உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தையும் எந்த வியாதியும் அணுகாமல் பாதுகாக்க உதவுகின்றது. அதனால்தான், நம் முன்னோர் அன்றே வீடுகளில் வாரமிருமுறை சாம்பிராணியை புகைக்கச் சொல்லி அறிவுறுத்தி வந்தனர். சாம்பிராணி புகை நச்சுக் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் மிக்கது. இது சுவாசக் கோளாறுகளை சீர் செய்வதுடன் நுரையீரலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்தது.
மேலும், குளித்தவுடன் தலைக்கு சாம்பிராணி புகையைக் காட்டி வர, தலை முடி கருமையாக வளர்வதுடன், நீண்ட நாட்கள் வரை தலை முடி நரைக்காமல் இருக்கும். தற்போதைய ஆய்வுகளில் குங்கிலிய, சாம்பிராணி மரப் பிசின்களில் உள்ள வேதிப்பொருட்கள் புற்றுநோயை சரியாக்கக்கூடிய மருத்துவத் தன்மை மிக்கவை எனக் குறிப்பிடுகின்றன.
பெண்களின் கருப்பை சார்ந்த அனைத்து பாதிப்புகளையும் இது சரி செய்வதாகவும் கூறுகிறார்கள். வீடுகளில் சாம்பிராணி புகை போடும் பழக்கம் மனச்சோர்வை நீக்கி, புத்துணர்வைத் தருவதுடன், நேர்மறை எண்ணங்களையும் கொடுக்கிறது.
குடலில் சேரும் வாயுவை அகற்றுவதற்கும், கபத்தை வெளியேற்றுவதற்கும், மூலம், வாத நோய்களை போக்கவும் சாம்பிராணி பயன்படுத்தப்படுவதாக ஆயுர்வேதம் கூறுகிறது. தாவரவியலின்படி சாம்பிராணியானது, ‘சாய் மரூபே சேயி’ என்ற குடும்பத்தைச் சேர்ந்தது. ‘சாய் மரூபா' என்ற கிரேக்கச் சொல்லுக்கு ‘கசப்புச் சுவையுடைய மரத்துண்டு’ என்று பொருள்.
இசையால் மனதை ஒருநிலைப்படுத்தவும், அமைதிப்படுத்தவும் எப்படி முடிகிறதோ அதுபோலவே, சாம்பிராணி தூபத்தின் நறுமணத்தினால் மனதை ஒருநிலைப்படுத்த முடியும். தினமும் நாம் செய்யும் வீட்டு வழிபாடுகளிலும், ஆலய வழிபாடுகளிலும் தூபத்துக்கு மிக முக்கியமான பங்கு உண்டு. இந்த தூப வழிபாடு குறித்து நம் முன்னோர்கள் நிறைய சொல்லியிருக்கிறார்கள்.
வீட்டில் தொடர்ந்து நோய்கள் வந்தவண்ணம் இருந்தாலோ, எப்போது பார்த்தாலும் வீட்டில் சண்டை சச்சரவு என்று இருந்தாலோ தூப வழிபாடு அவற்றை நீக்கும் என்கிறார்கள் பெரியோர்கள். காரணம், நேர்மறை எண்ணங்களை உருவாக்கவல்லது தூபம்.
ஆன்மிக ரீதியாக தூபம், தீய சக்திகளிடமிருந்து நம்மைக் காக்கிறது. அறிவியல் ரீதியாக தூபம் சிறிய பூச்சிகள் மற்றும் கிருமிகளிடமிருந்து நமக்குப் பாதுகாப்பு அளிக்கிறது. மேலும் மனம், உடல் மற்றும் ஆன்மாவின் ஆரோக்கியத்திற்கும் இது உதவுகின்றன.
தூபம் என்றாலே நம் நினைவிற்கு உடனே வருவது சாம்பிராணிதான். சாம்பிராணி கொண்டு தூபம் போடுவதால் நமக்கும், நம் வீட்டிற்கும் ஏற்பட்டிருக்கும் கண் திருஷ்டி, நம் மீதான பிறரின் பொறாமை உள்ளிட்டவை நீங்கும். சாம்பிராணி போடும்போது அதில் எதை எல்லாம் சேர்த்து தூபமிட்டால் என்னென்ன நன்மை உண்டாகும் என்பதைப் பார்க்கலாம்.
சாம்பிராணியோடு தூதுவளை சேர்த்து தூபமிடும்போது வீட்டில் இறைவனின் அருள் நிலைத்து நிறைந்திருக்கும். சாம்பிராணியில் சந்தனத்தை சேர்த்து தூபமிட்டால் மகாலட்சுமி கடாட்சம் ஏற்படும். அருகம்புல் பொடியை சாம்பிராணியில் சேர்த்து தூபமிடும்போது சகல தோஷங்களும் நீங்கும். சாம்பிராணியுடன் வெட்டிவேரை போட்டு தூபமிட்டால் நினைத்த காரியம் வெற்றி அடையும்.
சாம்பிராணியில் வேப்பிலையை போட்டு தூபமிட்டால் பல நோய்களிலிருந்து நிவாரணம் பெறலாம். சாம்பிராணியில் ஜவ்வாது போட்டு தூபமிட்டால் திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். சாம்பிராணியில் காய்ந்த துளசியை போட்டு தூபமிடும்போது செயல்களில் வெற்றி உண்டாகும். திருமணத்தடை நீங்கும்.
சாம்பிராணியில் கரிசலாங்கண்ணி பொடியைத் தூவி தூபமிடும்போது மகான்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். சாம்பிராணியில் நன்னாரி வேர் பொடியை சேர்த்து தூபமிட்டால் சகல ஐஸ்வர்யங்களும் உண்டாகும். சாம்பிராணியில் மருதாணி இலைப் பொடியை சேர்த்து தூபமிடும்போது மகாலட்சுமி அருள் கிடைக்கும்.