
* வீட்டுச் சுவற்றில் சாய்ந்து எண்ணெய் கறை படிந்த இடங்களில் வினிகரை துணியில் நனைத்து சுவரில் கறையுள்ள இடத்தில் தேய்த்தால் எண்ணெய் கறைகள் போய் விடும்.
* இரவில் படுப்பதற்கு முன்பு சிறிது பிளீச்சிங் பவுடரை குளியலறையிலும் கிச்சன் சிங்கை சுற்றிலும் தூவி விட்டு அப்படியே விட்டுவிட வேண்டும். இதனால் இரவில் கரப்பான் பூச்சிகளின் தொல்லை இருக்காது.
* வீட்டில் எறும்பு தொல்லை அதிகம் இருந்தால் எறும்புகள் செல்லும் பாதையில் ஆங்காங்கே கொஞ்சம் பெருங்காயத்தூளை தூவி விட்டால் எறும்புகள் ஓடிப் போய்விடும்.
* லேசான சுடுநீரில் பேக்கிங் சோடா கொஞ்சம் கலந்து சிங்கின் துளையில் ஊற்றி பேப்பர் போட்டு மூடினால் கெட்ட வாடை வராது.
* வீட்டைக் கழுவும்போது தண்ணீரில் சிறிது உப்பை சேர்த்து பின்பு தரையில் ஊற்றி வீட்டை துடைத்தால் காய்ந்த பின் அங்கு ஈக்கள் வராது.
* வாஷ்பேசினில் உள்ள மஞ்சள் கறை நீங்க எலுமிச்சை சாறையோ அல்லது வினிகரையோ கொண்டு தேய்த்து ஊற வைத்து பின்னர் கழுவினால் மஞ்சள் கறை நீங்கி விடும்.
* சமையலறை சிங்கை கழுவும் முன்பு பழைய நியூஸ் பேப்பர்களைக் கொண்டு தேய்த்து விட்டு, பின்பு கழுவினால் அழுக்குகள் நீங்கி சுத்தமாகும்.
* சில சமயம் டைனிங் டேபிளில் கறைகளும், உணவுகளின் துர்நாற்றமும் ஏற்படும். அதற்கு சிறிது வினிகரும், பாரபின் எண்ணெயும் கலந்து துடைத்தால் துர்நாற்றம் நீங்குவதோடு, டைனிங் டேபிளும் பளபளப்பாக இருக்கும்.
* சிறிது நீரில் கடுகு எண்ணெய் கலந்து மிருதுவான துணியால் மரச் சாமான்களைத் துடைத்தால் வார்னிஷ் செய்தது போல பளிச்சிடும்.
* மின் விசிறியில் தூசி படிந்தால் ஒரு துணியை மண்ணெண்ணெயில் நனைத்து அழுத்தி துடைத்தால் பளிச்சென்று ஆகிவிடும்.
* முகம் பார்க்கும் கண்ணாடியின் மீது தேயிலையை பூசி சிறிது நேரம் கழித்து துடைத்தால் அழுக்கு நீங்கி கண்ணாடி பளபளவென்று இருக்கும்.
* கூர்மையான கத்திகளில் அடிக்கடி தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் அவற்றின் கூர்மை மழுங்காது.
* துணிகளில் ஹேர் டை பட்டு கறையானால் நெயில் பாலிஷ் ரிமூவரால் டை படிந்த பகுதியை துடைக்க, கறைகள் காணாமல் போய்விடும்.
* துணிகளில் எண்ணெய் கறையோ, கிரீஸ் கறையோ பட்டுவிட்டால் துணியை துவைக்கும்போது அந்தக் கறை படிந்த இடத்தில் சில சொட்டுகள் நீலகிரி தைலம் விட்டு கழுவினால் கறைகள் போய்விடும்.
* அரை பக்கெட் தண்ணீரில் நாலு டேபிள் ஸ்பூன் வினிகரை கலந்து ஜீன்ஸ் துணிகளை அலசினால் சாயம் போகாமல், வெளிறி நிறம் இழப்பதைத் தடுக்கலாம்.
* பருத்திப் புடைவைகளுக்கு கஞ்சி போடும்போது நீரில் சிறிது படிகாரத் தூளை கலந்து கொண்டால் புடைவை வெண்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.
* வெள்ளைத் துணிகளை முதல் நாள் துவைத்து காய வைத்து விட்டு, மறுநாள் நீலம் போட்டால் துணிகள் பளிச்சென வெண்மையாக இருக்கும்.