

நமது வீடுகளில் சமைப்பதற்கு முன்பாக அரிசி மற்றும் பருப்பை சிறிது நேரத்திற்காவது ஊற வைப்போம். ஏன் இப்படிச் செய்கிறோம் என்று எப்போதாவது யோசித்து இருக்கிறீர்களா? நமது முன்னோர்கள் தெரிந்தோ, தெரியாமலோ நமது உடலுக்கு ஆற்றலை அளிக்கும் வகையில் பல விஷயங்களை மேற்கொண்டு உள்ளார்கள். அவற்றில் ஒன்றுதான் சமைக்கும்போது அரிசி மற்றும் பருப்பை ஊற வைக்கும் நடைமுறைகளை இன்றைக்கும் நாம் செய்து கொண்டிருக்கிறோம். இதனால் என்னென்ன பலன்கள் என்பதை இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
அரிசியை ஊற வைப்பதன் நன்மைகள்: அரிசியை ஊற வைப்பதால் கிளைசெமிக் இண்டெக்ஸ் அளவு குறைவதால் மெலடோனின் ஹார்மோன் தூண்டப்பட்டு இரவில் நல்ல தூக்கம் கிடைக்கும். மேலும், அரிசியை ஊற வைத்து சமைப்பதால் அதிலுள்ள கெட்ட ஸ்டார்ச்சுகள் நீக்கப்பட்டு சத்துக்கள் நன்றாக உறிஞ்ச உதவுகிறது. இதனால் அரிசி மென்மையாக வெந்து வர நீண்டநேரம் எடுக்காது. அரிசி மற்றும் பருப்பை ஊற வைத்து சமைக்கும்போது குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் செரிமான பிரச்னை சீராக இருக்கும்.
அரிசியை ஊற வைத்து கழுவி சமைக்கும்போது, அதில் உள்ள பைடிக் அமிலத்தை அகற்ற உதவுகிறது. இதன் மூலம் நமது உடலுக்கு கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் தேவையான அளவு சேமித்துக்கொள்ள உதவுகிறது. இதில் ஒரு அளவு கூடினாலும் நமது உடலில் பல மாற்றங்களை சந்திக்க நேரிடும். அதோடு, அரிசியை ஊற வைத்து சமைக்கும்போது ஒட்டாமல் உதிரி உதிரியாக வருவதோடு, விரைவாக சமைக்கவும் முடிகிறது.
பருப்பை ஊற வைப்பதன் நன்மைகள்: பருப்பு வகைகள் சாப்பிடுவதற்கு அனைவருக்கும் ஒத்துக் கொள்ளாது. சிலருக்கு வயிறு உப்புசம் சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படும். இதைத் தவிர்க்க வேண்டும் என்றால் பருப்பை கழுவி ஊற வைத்து சமைக்க வேண்டும். நாம் ஒவ்வொரு முறையும் பருப்பை ஊற வைத்து சமைக்கும்போது உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும். பருப்பின் சுவையை அதிகப்படுத்துவதோடு, குழந்தைகள் மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னை உள்ளவர்களுக்கு இது நல்ல பலனைத் தரும்.
இதோடு மட்டுமின்றி, உடலுக்குத் தேவையான உறிஞ்சுதல், செரிமான மேம்பாடு, சமைப்பதன் சுவையை அதிகரிப்பது போன்ற பல நன்மைகளைத் தரும். பருப்புகளை ஊற வைப்பதால் அதில் இருக்கும் ஷைடிக் அமிலம் ஊட்டச் சத்துக்களை உறிஞ்ச விடாமல் தடுக்கும். அதோடு, கசப்பு சுவை தரக்கூடிய டானின்கள் நீக்கப்படுகின்றன. இதனால் வயிறு பிரச்னை, வாயு பிரச்னை ஏற்படாது.
ஊற வைக்கும் நேரம்: அரிசி, பருப்பை சமைப்பதற்காக ஊற வைப்பது உடலுக்கு ஆற்றலை அளிக்கும் என்றாலும், குறிப்பிட்ட நேரத்திற்கு மேலாக அதை ஊற வைக்கக் கூடாது. அப்படி அதிக நேரம் ஊற வைக்கும்போது அதில் உள்ள அனைத்து சத்துக்களும் வெளியேறி விடும். சாதத்திற்கு அரிசி ஊற வைக்கும்போது 20 நிமிடங்களில் இருந்து 30 நிமிடங்கள் ஊற வைத்தால் போதும். பருப்பை ஒரு மணி நேரத்திற்கு மேல் ஊற வைக்கலாம். சுண்டல், மொச்சை போன்ற பயிறு வகைகளாக இருந்தால் இரவில் ஊற வைப்பது நல்லது.
ஒவ்வொரு முறையும் அரிசி மற்றும் பருப்பை ஊற வைத்து சமைக்கும் முன்பாக அது எதற்கு என்பதைத் தெரிந்து கொண்டால் நல்லது. கொண்டைக்கடலை, ராஜ்மா பருப்புகளை 12 முதல் 18 மணி நேரம் ஊற வைக்கலாம். இதனால் சிறந்த பலன் கிடைக்கும். இனி அரிசி, பருப்புகளை ஊற வைத்து சமையுங்கள். உடலுக்குத் தேவையான சரியான சத்து கிடைக்கும்.