
அழுகை என்றால் பொதுவாக கண்ணீர் விட்டு அழுவதைக் குறிக்கும். அழுகையில் பல வகைகள் உள்ளன. விம்முதல், அலறுதல், கதறுதல், குமுறுதல், ஒப்பாரி வைத்தல் என்று அழுகை பலவித வடிவங்களில் வெளிப்படுகின்றன.
1. அழுதல்: அழுகையை குறிக்கும் பொதுவான சொல். இது ஒருவருடைய கண்ணீர் மற்றும் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதைக் குறிக்கும்.
2. கதறுதல்: உரக்க அழுவதும், சத்தமாக கத்துவதும், மிகுந்த வேதனையை அல்லது கஷ்டத்தை வெளிப்படுத்தும் ஒரு செயலாக உள்ளது. அதிகமான வலி உணர்வை ஏற்படுத்தும் துன்பத்தின்போது கதறி அழுவதை இது குறிக்கிறது.
3. சிணுங்குதல்: சிணுங்குதல் என்பது பெரும்பாலும் சோர்வு, பசி அல்லது கவனத்தை ஈர்க்கும் வகையில் வெளிப்படுத்தப்படுவது. குறிப்பாக, குழந்தைகள் பெற்றோரிடம் ஒரு கோரிக்கையை முன்வைக்கும்பொழுது அதை செய்வதற்காக உண்டாக்கும் கவன ஈர்ப்பாகும். விரும்பியதை பெறுவதற்காக பயன்படுத்தப்படுகிறது.
4. விசும்புதல்: விசும்புதல் என்பது அழுகையின்போது ஏற்படும் மூச்சு திணறலையும் மெதுவாக விம்மி அழுவதையும் குறிக்கும். அடக்க முடியாத அழுகையை குறிக்கும் சொல் இது.
5. கண் கலங்குதல்: கண் கலங்குதல் என்பது கண்களில் நீர் கோர்த்துக்கொள்ளுதல். வருத்தப்படும்பொழுது சோகத்தில் இருக்கும்பொழுது பெரிதாக அழத் தயங்கி கண் கலங்குவது இயல்பு. இது பொதுவாக அதிகமாக உணர்ச்சிவசப்படும்போது நிகழும்.
6. புலம்பல்: ஒருவரின் துயரம் அல்லது இழப்பை வெளிப்படுத்தும் செயல் அல்லது உணர்ச்சியாகும். இது பொதுவாக அழுகை, கண்ணீர் வடிவில் ஒருவரின் வேதனையையும், ஏக்கத்தையும், துக்கத்தையும் தெரியப்படுத்தும் வழியாகும். துன்பம் மற்றும் வலியை வார்த்தைகளால் வெளிப்படுத்தும் விதமாக புலம்பிக்கொண்டே உரக்க அழுவதைக் குறிக்கிறது.
7. அலறல்: கடுமையான துன்பம் அல்லது வேதனையால் ஏற்படும் கூச்சல் அல்லது அழுகையைக் குறிக்கிறது. இது ஒருவரின் பயம், வலி, எரிச்சல், அழுகை, மகிழ்ச்சி, கோபம் போன்ற உணர்ச்சிகள் ஏற்படும் சமயங்களில் வெளிப்படுத்தும் வலுவான உரத்த குரலின் வெளிப்பாடாகும்.
8. ஒப்பாரி வைத்தல்: ஒப்பாரி வைத்தல் என்பது ஒருவர் இறந்த பின் அவருடைய குடும்பத்தினர், உறவினர்கள் ஆகியோரால் இறந்தவரின் நினைவாகவும், துக்கத்தை வெளிப்படுத்தும் விதமாகவும் மனம் வருந்தி அவரின் இழப்புக்காக அழுவதைக் குறிக்கும். இது ஒரு சடங்காகவும் பின்பற்றப்படுகிறது. இறந்தவரின் உடலை அடக்கம் செய்யும் முன்பு அல்லது இறுதிச் சடங்கின்போது ஒப்பாரி வைப்பது என்பது வழக்கத்தில் உள்ளது.
9. குமுறல்: குமுறல் என்பது ஒருவருடைய மனதில் உள்ள வேதனை அல்லது கோபம் போன்ற உணர்ச்சிகள் அதிகரித்து வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத பொழுது உள்ளுக்குள் உருகி அழுகை வடிவில் வெளிவருவதைக் குறிக்கும்.