நீங்கள் 50 பிளஸா? இனிமையான செகண்ட் இன்னிங்ஸ் உங்களுக்குத்தான்!

Are you 50 plus? Sweet second innings to you!
Are you 50 plus? Sweet second innings to you!https://www.pacificprime.sg

ந்தத் தொழில்நுட்பம், மருத்துவ வசதிகளும் இல்லாத அன்று 80 வயதாகியும் சுறுசுறுப்பான, ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்ந்தனர் நமது முன்னோர்கள். முக்கியமாக, கவலைகளைத் தள்ளிவிட்டு கூட்டுக் குடும்பத்தின் ஆணி வேராக விளங்கினர். ஆனால் எல்லா வசதிகளோடு வாழும் இன்று பெரும்பாலோர் 50 வயதைத் தொட்டவுடன், உடலளவிலும் மனதளவிலும் இனி தன்னால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது என்ற தவறான புரிதலுடன் வாழ்க்கையைக் கழிப்பதை பார்க்கிறோம்.

50 வயதிலேயே  ஓய்வு மனநிலையை நோக்கி பயணிக்கிறார்கள் பலரும். ஆனால், கடமைகளை முடித்து பொறுப்புகள் குறைந்த 50 வயதுக்கு பிறகுதான் ஒரு பலமான மூளையோடு நாம் பயணிக்கத் துவங்குகிறோம். காரணம், வாழ்வின் மேடு பள்ளங்களை அறிந்து, பல விஷயங்களில் அனுபவங்கள் தந்த புரிதலுடன் வாழ்க்கையைக் காணும் பருவம்தான் 50 வயதின் இரண்டாவது இன்னிங்ஸ் எனலாம். எப்போதும் முதல் இன்னிங்ஸில் செய்த தவறுகளைத் தவிர்த்து ஆடும் 2வது இன்னிங்ஸ் சுவாரஸ்யமானதுதானே?

எந்த வயதானாலும் அந்தந்த வயதுக்கு ஏற்ற செயல்களை செய்து வாழ்வதே புத்திசாலித்தனம். 50 வயதுக்கு மேல் செய்ய வேண்டிய ஐந்து அவசியமான விஷயங்கள் என்ன தெரியுமா?

1. தேடல்: 50 வயதில் பொருளாதாரத்தில் நிறைவு பெற்றவர்களுக்கு போதும் என்ற மனப்பான்மை வந்து விட்டால் கூடவே சோம்பலும் அதனுடன் ஆரோக்கியக் குறைவும் ஏற்படும் வாய்ப்பு அதிகம். எனவே, வாழும் வரை நமக்கு உந்து சக்தி தரும் ஒன்றைத் தேடி அதனுடன் பயணியுங்கள். உங்களுக்கு சுறுசுறுப்பு தரும் விஷயத்தைக் கையிலெடுத்து ஆனந்தமாக காலம் கழியுங்கள்.

2. வாசிப்பு: அடுத்து என்ன என்று யோசிக்க விடாமல் மூளைக்கு வேலை தாருங்கள். அதற்கு தகுந்த வழிதான் வாசிப்பு. மூளைக்கு தீனி போட நிறைய நல்ல கருத்துள்ள புத்தகங்களை தேடிப் படியுங்கள். நவீன சிந்தனையாளர்களின் புத்தகங்களை வாசியுங்கள். அவர்கள் பேச்சை கேளுங்கள். இதுபோன்ற அப்டேட்கள் நிச்சயம் உங்களுக்கு உற்சாகம் தரும்.

3. பயணம்: எல்லா வயதிலும் பயணம் அவசியம் என்றாலும், ஓய்வு கிடைக்கும் இந்த 50ல் நிறைய பயணிக்க முடியும். இப்படிப் போகும் பயணங்களில் உங்களை விட அதிக வயதுள்ளவர்கள் வேண்டாமே. வயது குறைந்த இளைஞர்களுடன்  வித்தியாசமான இடங்களுக்குச் செல்லுங்கள். மலைவாசஸ்தலங்களுக்கு அவர்கள் உங்களுக்கு வழி காட்டுவார்கள். உங்கள் அப்டேட்கள் அவர்களுக்கு உதவும். பயணங்களில் தனிமையில் இல்லாமல் வேறுபட்ட மனிதர்களோடு உரையாடுங்கள். புதிய இடத்தின் பயணங்கள் உங்கள் இளமையை மீட்கும்.

4. அழகான ஆடை:  ’வயதாகி விட்டது, இனி எதைப் போட்டால் என்ன?’ என்ற எண்ணத்தை மாற்றி அழகான உடைகளை தேர்வு செய்து அணியுங்கள். விரும்பிய உடை அணியக்கூட நேரமின்றி உழைத்தவர். இனி மிடுக்கான உடையில் கம்பீரமாக வலம் வாருங்கள். மற்றவர்கள் வியப்பதை விட, நம் சந்தோஷம் முக்கியம். முக்கியமாக 50 வயதில்  ஏற்படும் நரையும் வழுக்கையும் அழகு என்று உணருங்கள்! உலகின் அழகானவர்களை ஈர்க்கின்றவர்களில் 50 பிளஸ்தான் அதிகம் என்கிறது சர்வே.

இதையும் படியுங்கள்:
அற்புதம் செய்யும் நித்திய கல்யாணி.. இத்தனை நாள் இது தெரியாம போச்சே! 
Are you 50 plus? Sweet second innings to you!

5 . சிம்பிள் உடற்பயிற்சி: உடல் ஆரோக்கியம் பேண தகுந்த உணவு வகைகள் மற்றும் எளிதான உடற்பயிற்சிகளில் கவனம் செலுத்துங்கள். மிதமான நடைப்பயிற்சி, சைக்கிளிங், யோகா, மூச்சுப்பயிற்சி போன்றவற்றில் ஈடுபடுங்கள். மூட்டு ஆரோக்கியம், தசை வலிமை மற்றும் இருதய சகிப்புத் தன்மையை மேம்படுத்த இந்தப் பயிற்சிகள் உதவும்.

இதெல்லாம் ஒருபக்கம் என்றால் முக்கியமான இரண்டு விஷயத்தை மறக்காதீர்கள். ஒன்று ஆன்மிகம் மற்றொன்று வாய் விட்டு சிரிப்பது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் இவற்றை கடைபிடித்தால் 2வது இன்னிங்ஸும் சக்சஸ்தான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com