நம் வாழ்வில் எத்தனையோ குணங்கள் கொண்ட எவ்வளவோ பேரை சந்தித்திருப்போம். சிலர் வெகுதொலைவு நம்முடன் பயணிப்பார்கள். சிலர் கைக்குலுக்கி விட்டு சென்றுவிடுவார்கள்.
இந்த உலகம் மிகப் பெரியது என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம். எப்படி கொத்தும் பாம்பும் கொஞ்சும் கிளியும் ஒரே காட்டில் உள்ளதோ, அதேபோல் பலவிதமான மனிதர்களையும் இவ்வுலகில் நாம் பார்க்கலாம். விலங்குகளுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசமே நாம் விலங்குகள் இல்லை என்பதுதான்.
இவ்வுலகில் நல்லவர், கெட்டவர் என்று யாரும் இல்லை. ஒருவரது குணத்தை நாம் புரிந்துகொள்வது அவசியம். அது அவர்களின் குணம் என்று எடுத்துக்கொண்டு அவரைக் குறை கூறாமல் இருக்க வேண்டும். விவாதம் வேறு, குறை சொல்லுதல் வேறு என்பதை மட்டும் நன்றாகப் புரிந்துக்கொள்ளுங்கள். நாம் எந்தத் தவறும் செய்யாமல் அதற்கான பழி மட்டும் நம் மீது விழும்பொழுது, ‘அந்தத தவறை நான் செய்யவில்லை’ என்று விவாதம்’ செய்வோம். இதுவே மற்றவர் அந்தத் தவற்றை செய்தாரா என்று நிச்சயமாக தெரியாமல் அவர்தான் செய்தார் என்று குறையும் கூறுவோம்!
ஒருவரை குறை கூறுவதற்கு முன்னர் இவற்றை கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்.
1. நல்லதொரு சூழ்நிலையை ஏற்படுத்தித் தரும் மனிதர்கள் நமக்கு சந்தோஷத்தைத் தருகிறார்கள்.
2. கெட்ட சூழ்நிலைகளைத் தரும் மனிதர்கள் நமக்கு அனுபவத்தைக் கொடுக்கிறார்கள்.
3. மிக மோசமான சூழ்நிலைகளைத் தரும் மனிதர்கள் நமக்கு ஒரு பாடத்தைக் கற்றுத்தருகிறார்கள்.
4. நம்மை விட்டுச் சென்றவர்கள் அழகான நினைவுகளைத் தருகிறார்கள்.
இப்படி நம்முடன் பழகிய மனிதர்களை மறந்தாலும், அவர்கள் கற்றுத்தந்தவற்றை மட்டும் மறக்கவே கூடாது.
‘அவர் என்னை ஏமாற்றிவிட்டார்’, ‘அவர்தான் தவறு செய்தார்’ என்று அவரைப் பற்றி பேசுவதால் ஒரு நல்லதும் ஏற்படாது. தேவையற்ற சண்டை சச்சரவுகளும் மன அழுத்தமும்தான் மிஞ்சும். நம்முடைய பொன்னான நேரங்களும் தேவையில்லாமல் வீணாகும்.
அதேபோல், அனைவரின் முன்னிலையிலும் உங்களை யாராவது புறக்கணித்தால் கோபம் கொள்ளாதீர்கள். ஒரு சிறு புன்னகையுடன் அந்த இடத்தை விட்டு விலகிவிடுங்கள்.
நீங்கள் தெரியாமல் செய்த ஒரு தவறுக்கு, உங்களை ஒருவர் திட்டிக்கொண்டே இருந்தால், அவரைப் பார்த்து பயப்பட எந்த அவசியமும் இல்லை. அதேபோல், ஒரு தவறுக்கு மற்றவர்கள் மீது குறை கூற வேண்டும் என்ற அவசியமும் இல்லை. எனவே, தவறைப் பார்த்து பயப்பட அவசியம் இல்லை. அதனை எப்படி சரி செய்வது என்று அறிய முற்பட்டாலே போதும்.
நம் தவறுகளை மன்னிக்கும் மனிதர்களும் உள்ளனர். பிறகு நாம் அதனை நினைத்து வருந்தாமல் இருக்க நம்மை சிரிக்க வைக்கும் மனிதர்களும் உள்ளனர். நாம் வேலை நேரத்தில் இருக்கும்போது நம்முடனே இருந்து தொந்தரவு செய்யும் மனிதர்களும் உண்டு. நமக்குத் தேவைப்படும் சமயங்களில் காணாமல் போகும் மனிதர்களும் உண்டு. அப்படி, அவர்கள் விட்டுசெல்லும்போது எந்தக் குறையும் கூறாமல் அவர்களை செல்ல அனுமதிக்க வேண்டும். அதேபோல் நம்மிடம் திரும்பி வரும்போது அவர்களை அணைக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
ஒன்றை மட்டும் நன்றாகப் புரிந்துக்கொள்ளுங்கள். தவறு செய்யாத மனிதனே இல்லை. ஆனால், மன்னிப்பு வழங்கும் மனிதர்கள் வெகு சிலரே. அந்த வெகு சிலரே மனிதம் அறிந்த மகத்துவமான மனிதர்கள். அந்த சிலரால் மட்டுமே பெரிய அளவில் சாதிக்க முடியும். இந்த மன்னிக்கும் குணம் இருந்தாலே குறை கூறும் பழக்கம் தானாக விலகிவிடும்.