திருமணமான பிள்ளைகளுடன் வசிக்கும் பெற்றோரா நீங்கள்?

பிள்ளைகளுடன் வசிக்கும் பெற்றோர்
பிள்ளைகளுடன் வசிக்கும் பெற்றோர்https://stock.adobe.com
Published on

கிராமங்களை விட்டு நகரங்களில் வசிக்கும் பிள்ளைகளின் தேவைகளுக்காக தற்போது அவர்களுடன் பெற்றோரும் வசிக்க வேண்டிய சூழல் பெருகி வருகிறது. தாங்கள் வாழ்ந்து வந்த சூழல்களை விட்டுவிட்டு, புதிதாக ஒரு இடத்திற்கு செல்லும்போது அந்தப் பெற்றோர்கள் நிறைய விஷயங்களை சகித்துக்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படுகிறது. பெற்றோர்களின் இந்த சகிப்புத்தன்மை சில சமயங்களில் பிள்ளைகளுக்கும் அவர்களுக்குமிடையே சில மனஸ்தாபங்களுக்கும் வழிவகுக்கிறது.

புதிய இடங்கள் மட்டுமல்ல, இன்றைய வேகமான நாகரிக வாழ்க்கைக்கும் பெற்றோரால் எளிதில் பழக முடியாமல் போவதால், ஒரு வகையில் தங்களின் சுதந்திரத்தை இழந்து விட்டதாகவும் பல பெற்றோர்கள் மனதில் சிறு சஞ்சலம் இருப்பதும் உண்மைதான். பிள்ளைகளுடன் வசிக்கும் பெற்றோர்கள் அவர்களுடன் சுமூகமாக இருக்க சில ஆலோசனைகளை இந்தப் பதிவில் காண்போம்.

1. திருமணம் ஆகும் வரைதான் அவர்கள் நம் பிள்ளைகள். திருமணம் ஆகிவிட்டால் அவர்களுக்கு என்று குடும்பம் இருக்கிறது என்பதை நம் மனதில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும்.

2. உரிமை என்ற பெயரில் அதீத ஆர்வத்தில் அவர்கள் குடும்பத்துக்குள் நமது ஆலோசனைகளைத் திணிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

3. அலுவலக நெருக்கடி மற்றும் பொருளாதார பிரச்னைகளில் பிள்ளைகள் இருந்தால் அவர்களுக்கு ஆறுதலாக இருக்க வேண்டுமே தவிர, அவர்களை குத்திக்காட்டுவது போல் பேசக் கூடாது.

4. பேரக் குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் அதிக செல்லம் தருகிறேன் என்ற பெயரில் பெற்றோர் கண்டிக்கும்போது தலையிடாமல் இருப்பது மிக மிக முக்கியம்.

5. அவர்கள் செலவு செய்யும் விஷயத்தில் கேள்வி கேட்டு, அவர்களை எரிச்சல் படுத்தக் கூடாது. அவர்களுக்குத் தெரியும், அவர்கள் வருமானம் என்ன? எப்படி செலவு செய்ய வேண்டும் என்பது.

6. அவர்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வரும்போது நமது பிரதாபங்களை சொல்லாமல் நகர்ந்து செல்வது நாகரிகம்.

7. அவர்கள் அழைத்தால் மட்டுமே அவர்களுடன் வெளியே செல்ல வேண்டும். அழைக்காதபோது புலம்பாமல் வேறு காரணங்கள் இருக்கலாம் என புரிந்துகொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
இளவயது நரை முடியை தடுக்க உண்ண வேண்டிய 5 வகை உணவுகள்!
பிள்ளைகளுடன் வசிக்கும் பெற்றோர்

8. வயதாகி விட்டது என அறைக்குள்ளேயே முடங்காமல், நம் வேலைகளை நாமே பார்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, எதற்கெடுத்தாலும் அவர்களை சார்ந்து இருக்கக் கூடாது.

9. குழந்தைகளை பள்ளியிலிருந்து அழைத்து வருவது, மளிகைக் கடைக்குச் செல்வது, துணிகளை மடித்து வைப்பது போன்ற நம்மால் முடிந்த சின்னச் சின்ன உதவிகளை செய்ய வேண்டும்.

10. தெரியாத இடங்களுக்குச் செல்லும்போதும், அறியாத மனிதர்களிடம் பழகும்போதும் அவர்களைக் குறித்த எச்சரிக்கை அவசியம்.

‘நம் கால வசதிகள் வேறு, அவர்கள் கால வசதிகள் வேறு’ என்பதை ஏற்றுக்கொண்டு புரிதலுடன் அன்பை செலுத்தினால் நாளடைவில் பிள்ளைகளே நம் நிலை தெரிந்து தேவையான சுதந்திரம் மற்றும் அரவணைப்பை நமக்கு வழங்குவார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com