டீனேஜரா நீங்க? அப்போ கட்டாயமாக இதை தெரிந்துகொள்ள வேண்டும்!

டீனேஜரா நீங்க? அப்போ கட்டாயமாக இதை தெரிந்துகொள்ள வேண்டும்!

ன்றைய டீனேஜர்கள் திரைப்படங்களில் வரும் கதாபாத்திரங்களையும், சமூக வலைத்தளங்களில் வரும் ஒருசிலரையும் முன் உதாரணமாக எடுத்துக்கொண்டு அவர்கள் வாழ்வதுதான் வாழ்க்கை, அவர்கள் சொல்வதுதான் வேதவாக்கு என்று எண்ணி, அதனையே நம்பி வாழ்கிறார்கள். ஆனால், உண்மையில் வாழ்வின் எதார்த்தத்தைப் புரிந்துகொள்ள ஒருகாலம் நமக்கு வரும். அதனை அனுபவித்துத் தெரிந்துகொள்வதற்கு முன்பாக இப்போதே தெரிந்துகொள்வோம்.

உங்களுக்கு இப்போது 20 வயது தாண்டுகிறது எனில், நீங்கள் சில விஷயங்களுக்குத் தயாராக இருக்க வேண்டும். அது ஆணாகட்டும், பெண்ணாகட்டும் இருவருக்கும் பொதுவானதே. ஒரு ஆணோ, பெண்ணோ 20 வயதைக் கடந்துவிட்டால் வீட்டிலிருந்து பணம் வாங்காமல் இருக்கத் தெரிய வேண்டும். அல்லது சுயமாக வேலைக்குச் சென்று சம்பாதித்து பணத்தைப் பெறத் தெரிய வேண்டும்.

அப்படி என்னால் செய்ய முடியாது என்று நீங்கள் நினைத்தால் உங்களை சங்கடப்படுத்த வெளியில் இருந்து வேறு யாரும் வரத் தேவையில்லை. உங்களின் பெற்றோர்களே உங்கள் நிலையைக் கண்டு உங்களைக் காயப்படுத்தத் தயாராகி விடுவார்கள். அதனை உங்கள் முகத்துக்கு நேராக இல்லை என்றாலும் மனதுக்குள் நிச்சயமாக நினைப்பார்கள். சில பெற்றோர்கள் சொல்லிவிடுவார்கள். சில பெற்றோர்கள் நினைப்பதோடு நிறுத்தி விடுவார்கள்.

நீங்கள் விரும்பக்கூடிய நபர் அது ஆணாகட்டும், பெண்ணாகட்டும் உங்கள் உறவை முறித்துச் செல்வதற்கு அதிக வாய்ப்பு உண்டு. உங்கள் அன்பைப் பற்றி எதிர்மறையாகச் சொல்லவில்லை. இதுதான் இயல்பான உண்மை.

20 வயதைக் கடக்கும்போது நீங்கள் கல்லூரி பருவத்தை நிச்சயமாக முடித்திருக்க மாட்டீர்கள். அப்படி முடித்து இருந்தாலும் உடனடியாக வேலைக்குச் செல்ல வாய்ப்புகள் குறைவு. ‘அப்படியெல்லாம் இல்லை, எங்களுக்குப் பணம் தேவையில்லை. அன்பு மட்டும் போதும்’ என்று நீங்கள் சொன்னீர்கள் எனில், ‘பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்று அய்யன் வள்ளுவரே கூறியிருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

20 வயதைக் கடக்கும்போது எல்லோருக்கும் எழும் ஒரு பொதுவான சந்தேகம் உங்களுக்கும் தோன்றும். அடுத்து வாழ்க்கையில் என்ன செய்யப் போகிறோம்? இந்த வினாவுக்கான விடையைச் சீக்கிரம் தேர்ந்தெடுத்து விடுங்கள். இல்லை என்றால் அந்த வினா உங்களை ரொம்ப வருத்தப்பட வைக்கும். உங்களை நிம்மதியாகவே இருக்க விடாது.

நீங்கள் 20 வயதைத் தாண்டும்பொழுது உங்களுக்குள்ளே ஒரு பயம் வரும். ‘நம் வாழ்க்கை இப்படியே சென்று விடுமா? நம் வாழ்க்கையில் உருப்படுவோமா? மாட்டோமா?’ என்ற பயம் வரும். இந்த பயம் வந்தால் மட்டுமே உங்கள் வாழ்க்கையில் எதையாவது நீங்கள் செய்வீர்கள்; சாதிப்பீர்கள்!

திரைப்படங்களையும், சமூக வலைத்தளங்களையும் நம்பி, பின்தொடர்ந்து வாழ்வதை விட்டுவிட்டு 20 வயதுக்குப் பிறகு வரும் உங்கள் வாழ்க்கையின் எதார்த்தத்தைப் புரிந்து வாழக் கற்றுக்கொள்ளுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com