அஜினமோட்டோ ஆபத்துகள் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

Ajinomoto
Ajinomoto

சாப்பிடும் உணவை நாம் கொஞ்சம் கொஞ்சமாக விஷமாக்கி வருகிறோம் என்று சொன்னால் அது மிகையாகாது. நல்ல ருசியோடு கைப்பக்குவத்தோடு சமைத்த காலங்கள் மலையேறி போய் இப்பொழுது ருசியை செயற்கையாகக் கொண்டு வர வேண்டும் என்பதற்காக பல ரசாயனங்கள் உணவில் கலக்கப்படுகின்றன. அதில் மிக முக்கியமானது அஜினமோட்டோ. இதைத் தொடர்ந்து சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்து என்ற எச்சரிக்கைகள் பல வந்தும், நாம் அதன் வீரியம் தெரியாமல் இன்னும் விளையாடிக் கொண்டிருக்கிறோம் என்றுதான் சொல்ல வேண்டும்.

கைப்பக்குவத்துடன் கலாசார முறையில் நாம் சமைக்கும் உணவுகளில் இருக்கும் ருசி இப்படிப்பட்ட ரசாயனங்களால் நிச்சயமாகக் கிடைக்கப்போவதில்லை. அப்படியே கிடைத்தாலும் அது நமக்குக் கேடுதான். அம்மாவின் கைப்பக்குவம் மனைவியின் கைப்பக்குவம் என்ற காலம் மலையேறி அஜினமோட்டோ கைப்பக்குவத்திற்கு வந்து நிற்கிறோம். அஜினமோட்டோவில் உள்ள ஆபத்துக்கள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

தமிழர்களின் உணவுக் கலாசாரம் மருத்துவ குணம் வாய்ந்தது என்பதை நாம் அறிவோம். அதிலும் உணவில் சேர்த்துக்கொள்ளப்படும் மசாலா பொருட்களான ஏலக்காய், மிளகு, கிராம்பு, இலவங்க பட்டை, கடல்பாசி, சுக்கு, இஞ்சி உள்ளிட்டவை உணவுக்கு சிறந்த சுவையூட்டியாகவும், மணமூட்டியாகவும் செயல்படுபவை என்றும் நமக்குத் தெரியும்.

ஆனால், தமிழர்களின் பாரம்பரிய உணவுப்பொருள் பட்டியலில் இல்லாத ஒன்றாக அஜினமோட்டோ என்ற பொருள் குறித்து நீங்கள் கேள்விப்பட்டிருக்கக் கூடும். ஆம், உண்மையாகவே நம் பாரம்பரிய உணவுப் பட்டியலில் அஜினமோட்டோ இல்லைதான். அப்படி என்றால் அஜினமோட்டோ எங்கிருந்து வந்தது, அது என்ன பொருள்? சமையலில் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது? என்ற கேள்விகளுக்கு நாம் தெளிவான விடையை தெரிந்து கொள்வது அவசியம்.

துரித உணவுகள், பதப்படுத்தப்படும் உணவுகள் போன்றவற்றின் சுவையை அதிகரிப்பதற்கும், மணமூட்டுவதற்கும் அஜினமோட்டோ பயன்படுத்தப்படுகிறது. அஜினமோட்டோ என்பது மோனோசோடியம் குளூகோமைட் என்னும் உப்புதான். இந்த அஜினமோட்டோ சீன உணவுக் கலாசாரத்தில் இருந்து உலகெங்கிலும் பரவியிருப்பதாக நம்பப்படுகிறது.

அஜினமோட்டோ ஆபத்தானது என்று பலரும், வெவ்வேறு தருணங்களில் சொல்லக் கேள்விப்பட்டிருப்போம். ஆமாம், உண்மையில் அது ஆபத்தானதுதான். எப்போது என்றால் ஒரு அளவுக்கு மீறி நம் இஷ்டத்திற்கு பயன்படுத்தும்போது. ஆனால், அளவோடு பயன்படுத்தினால் எந்தவித தீங்கும் இல்லை என்பதே ஊட்டச்சத்து நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

இதையும் படியுங்கள்:
குங்குமப்பூவின் விலை மட்டுமல்ல; அதன் மருத்துவ வீரியமும் அதிகம்தான்!
Ajinomoto

அஜினமோட்டோ பயன்படுத்தும்போது உணவின் மணம் அதிகரிக்கிறது. சாப்பிடும்போது, மென்மேலும் சாப்பிட வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது. இதுகுறித்து மும்பையைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் நிருபமா ராவ் கூறுகையில், “நாம் பொதுவாகப் பயன்படுத்தும் உப்பில் உள்ள சோடியம் அளவானது. அஜினமோட்டோவில் மிகுதியாக உள்ளது. சோடியம் அளவு மிகுதியாக இருந்தால் உயர் இரத்த அழுத்தம் அதிகரிக்கும் மற்றும் இதய நோய்கள் ஏற்படும்.

அந்த வகையில் ஹைப்பர்டென்ஷன் மற்றும் இதய நோய்கள் கொண்ட நபர்கள் இதனைத் தவிர்க்கலாம். சிலருக்கு அஜினமோட்டோ சேர்க்கப்பட்ட உணவுகளை சாப்பிட்ட பிறகு தலைவலி, வியர்த்தல், நெஞ்சு வலி போன்ற பிரச்னைகள் ஏற்படக் கூடும். அதேசமயம், அஜினமோட்டோவை மிதமான அளவில் பயன்படுத்தும் பெரும்பாலான மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுவது கிடையாது. மிக அதிகமான அளவில் இதனை உட்கொள்கின்ற மக்களுக்குத்தான் பிரச்னை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது’’ என்று தெரிவித்தார்.

அஜினமோட்டோவில் ஊட்டச்சத்து எதுவும் கிடையாது. இது செயற்கையான மணமூட்டி மட்டும்தான். ஊட்டச்சத்து தேவைகளுக்கு எப்போதும் போலவே நீங்கள் பிற உணவுகளை சார்ந்திருக்க வேண்டும். ஆகவே, சுவைக்காக மட்டுமே அஜினமோட்டோவை சேர்க்க வேண்டும் என்ற நிலையில், அது எந்த அளவுக்கு தேவை என்பதை நாமே முடிவு செய்து கொள்ளலாம் அல்லது மருத்துவரின் ஆலோசனையின் பேரில் முடிவு செய்து கொள்ளலாம்.

இனி, வீட்டில் எந்தவித ரசாயனமும் இல்லாது சமைக்க முயற்சி செய்வோம். ருசி குறைவாக இருந்தாலும் சரி அதை சாப்பிட்டு பழகினால் நம் ஆயுள் அதிகரிக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com