நீங்கள் எழுதுவதில் விருப்பமுள்ளவரா? இந்த பத்து டிப்ஸ் உங்களுக்குத்தான்!

Are you fond of writing? These ten tips are for you!
Are you fond of writing? These ten tips are for you!https://telanganatoday.com

ழுத்து மிகவும் வலிமையான ஆயுதம். மனதில் இருப்பதை வார்த்தைகளாக மாற்றுவது ஒரு கலை. அது உங்கள் வாழ்க்கையை மாற்றிவிடும் தன்மை கொண்டது. எண்ணங்கள், சிந்தனைகளை வார்த்தைகளாக வடிக்கும்போது உங்களுடைய தனிப்பட்ட வளர்ச்சிக்கும் தொழில் வளர்ச்சிக்கும் மிகவும் உதவியாக இருக்கும்.

சிலருக்கு கதை, கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் இருக்கும். ஆனால், எப்படி தொடங்குவது என்று தயக்கம் இருக்கும். சிலர் தொடங்கி விட்டு மேலே அதை முடிக்க முடியாமல் தடுமாறுவார்கள். இன்னும் சிலருக்கு மனதில் ஆசை இருந்தாலும் செயல்படுத்த மாட்டார்கள். எழுத்து என்பதை தினந்தோறும் செய்யும் ஒரு பழக்கமாக மாற்ற வேண்டும். தினந்தோறும் எழுதினால் மட்டுமே உங்களுக்கு எழுத்து வசப்படும்.

எழுதுவதற்கான பத்து உத்திகள்:

1. சிறிய அளவில் தொடங்குங்கள்: ப்ளாக்கிலோ முகநூலிலோ எழுதுவதில் விருப்பம் இருக்கலாம் அல்லது பத்திரிகைகளுக்கு கூட எழுத விருப்பம் இருக்கலாம். தினந்தோறும் ஆயிரம் வார்த்தைகள் அல்லது ஒரு பக்கம் எழுத வேண்டும் என்று இலக்கு வைத்துக் கொள்ளக்கூடாது. சில வார்த்தைகள் எழுதலாம் என்று தொடங்க வேண்டும். தினந்தோறும் ஒரு அரைப் பக்கம் எழுதலாம் என்று நினைத்து இன்றே தொடங்கி விடுங்கள். எழுத எழுத எழுத்து கைகூடும்.

2. உங்கள் விருப்பம்: காகிதத்தில்தான் எழுத வருகிறது என்றால் அதில் எழுதலாம் அல்லது லேப்டாப்பில் டைப் செய்ய பிடித்தால் அதை செய்யலாம். லேப்டாப்பில் அல்லது கணினியில் தட்டச்சு செய்ய ஆரம்பிக்கும்போது மற்ற புரோக்ராம்களை க்ளோஸ் செய்து விட வேண்டும்.

3. தொந்தரவுகளைத் தவிர்க்கவும்: எழுத உட்காரும் முன் உங்கள் போன் மற்றும் லேப்டாப்பில் இருக்கும் நோட்டிபிகேஷன்களை அணைத்து விட வேண்டும். வாட்ஸ் அப், முகநூலில் இருந்து வரும் மெசேஜ்கள் உங்களை தொந்தரவு செய்யாமல் இருக்க வேண்டும்.

4. எழுத்தை பற்றிய சிந்தனை: என்ன எழுத வேண்டும் என்பதை சரியாக தீர்மானித்துக்கொள்ள வேண்டும். எடுத்தவுடன் கதையோ கட்டுரையோ எழுத ஆரம்பிக்காமல் அதைப் பற்றிய கருவை மனதில் நன்றாக எண்ணிக்கொள்ள வேண்டும். பின்பு அதை பேப்பரிலோ அல்லது லேப்டாப்பிலோ எழுத ஆரம்பிக்கலாம்.

5. விளைவை எண்ணி கவலைப்படக்கூடாது: நமக்கு நன்றாக எழுத வருமா? இதைப் படித்து விட்டு யாராவது புறக்கணித்து விடுவார்களா என்றெல்லாம் யோசித்து குழம்பிக் கொள்ளாமல் எழுத ஆரம்பிக்க வேண்டும். நீங்கள் எடுத்த எடுப்பிலேயே உங்களுடைய தலைசிறந்த படைப்பை (மாஸ்டர் பீஸ்) எழுதப்போவதில்லை. இப்போதுதான் எழுத ஆரம்பிக்கப்போகிறீர்கள். அதனால் எதைப் பற்றியும் கவலை வேண்டாம்.

6. ஏன் எழுதுகிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்: ஏன் எழுதுகிறோம் என்பதற்கான காரணத்தைத் தெரிந்து கொள்ளுங்கள். எழுதுவது உங்கள் சிந்தனையை சீர் செய்யவும் நல்ல வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் உதவுகிறது. வருங்காலத்தில் ஒரு மிகச்சிறந்த எழுத்தாளராக உங்களால் உருவாக முடியும் என்பதை நினைவில் கொண்டு எழுத ஆரம்பித்தால் அதில் ஆர்வம் கூடிவிடும்.

இதையும் படியுங்கள்:
கர்ப்பப்பை புற்றுநோய் வராமல் தடுக்கும் உணவுகள் எவை தெரியுமா?
Are you fond of writing? These ten tips are for you!

7. இப்போதே ஆரம்பியுங்கள்: ஒரு மணி நேரம் அல்லது அரை மணி நேரம் எழுத வேண்டும் என்று அவசியம் இல்லை. முதலில் எழுதத் தொடங்க வேண்டும். முதலடி எடுத்து வைக்க வேண்டும் என்று எந்தவித அழுத்தமும் இன்றி ஆரம்பத்தில் ஆர்வத்துடன் ஐந்து நிமிடம் எழுதினாலே போதும்.

8. எழுதும் நேரம்: தினமும் எழுதுவதற்கென்று ஒரு நேரத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். அது காலை, மாலை அல்லது இரவாகவோ இருக்கலாம். அது உங்களுடைய விருப்பம். ஆனால். அந்த நேரத்தில் கட்டாயம் எழுத வேண்டும் என்கிற பழக்கத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

9. இடம்: எழுதுவதற்காக ஒரு தனிப்பட்ட இடத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். அந்த இடத்தில் தினமும் வந்து அமர்ந்ததும் உங்களுடைய மூளை எழுதத் தூண்டும்.

10. பொறுமை காக்கவும்: ஒரு பழக்கத்தை உருவாக்குவதற்கு சற்று காலம் பிடிக்கும். ஆரம்பத்தில் வார்த்தைகள் சிக்காமல் எழுதுவதற்கு சிரமப்பட நேரலாம். ஆனால். தினமும் தொடர்ந்து அந்த செயலை செய்துகொண்டே இருந்தால் அது பழக்கமாகி எழுத்து உங்கள் வசமாகிவிடும்.

ஆயிரம் மைல்களுக்கான பயணம் ஒரு சிறிய அடியில்தான் தொடங்குகிறது என்ற சீன பழமொழியை நினைவில் கொள்ளுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com