
வாழையிலை போலவே, மண் பாண்டத்தில் சமைத்து உண்பதால் ஆரோக்கியம் மேம்படும். அக்காலத்தில் மண் பாண்டங்களை இயற்கையான முறையில் தயாரித்தார்கள். தற்போது அவை அழகுக்காகப் பயன்படும் டெரகோட்டா வகை பொருட்கள் போல் சமையல் பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன.
உணவின் சத்து கெடாமல் அப்படியே கிடைக்க மற்ற பாத்திரங்களை விட மண் பாத்திரமே சிறந்த்து. நம் உடல் காரத்தன்மையுடையது. மண் பானை இயல்பாகவே காரத்தன்மை கொண்டது. இது உணவுப் பொருட்களின் அமிலத்தன்மையை சமநிலைப்படுத்தும். இதில் சமைப்பதால் உணவின் நுண் சத்துக்கள் அழியாது. உணவின் முழுமையான சுவை கிடைக்கும்.
மண் பானை வாங்கும்போது அது எந்த மாதிரியான மண்ணில், எங்கிருந்து செய்து வருகிறது என விசாரியுங்கள். ஏனென்றால்,விஷத்தன்மை வாய்ந்த மண் கொண்டு தயாரித்து சுடப்படும் பானைகள் உடலுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியது.
கிராமங்களில் செய்யப்படும் மண் பானைகள் இளம் கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். ஆனால், பானைகள் பார்க்க, அழகாக பளிச்சென்று இருப்பதற்காக, மண்ணுடன் சில நிறமிகளை சேர்த்து பானைகளைச் செய்கிறார்கள். தவிர, பானையின் பளபளப்பிற்காக சில கெமிக்கல் வேக்ஸும் சேர்க்கப்படுகின்றன.
நாம் அழகுக்காக பளிச்சென இருப்பதையே வாங்க விரும்புவதால் செயற்கை பொருட்களைக் கலந்து அழகான பூந்தொட்டிகளை போலவே மண் பாண்டங்களையும் உருவாக்குகிறார்கள். இம்மாதிரியான மண் பாத்திரங்களை உபயோகிப்பதைத் தவிர்ப்பதே நல்லது.
மண் பாண்டத்தில் சமைப்பதற்கு முன்பு ஒரு பாத்திரத்திற்குள் பானையை வைத்து தண்ணீரில் 20 நிமிடங்கள் நன்கு ஊற வைத்து பயன்படுத்த வேண்டும். கிராமங்களில் சிலர் புதிதாக மண் பாத்திரம் வாங்கினால் பூண்டை அரைத்து பானையில் தடவி காய வைப்பார்கள். பின்னர் உள்ளுக்குள் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரை ஊற்றி விடுவர். இப்படிச் செய்யும்போது மண் பானையின் விஷத்தன்மை போய்விடும்.
இதேபோல், மண் பாத்திரத்தை பழக்கப்படுத்த எண்ணையை உள்ளே தடவி விட்டு ஊற வைத்து பின்னர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைப்பார்கள். இதனால் பானையின் திடத்தன்மை கூடும். அதேபோல், மண் பானையை கழுவும் முறையும் உள்ளது. சைவ, அசைவ உணவுக்கென தனித்தனி பானைகள் வைப்பது நல்லது. அசைவ உணவு சமைத்த பானையை சுத்தம் செய்ய குளிர்ந்த நீரில் உப்பைக் கரைத்து இரவு முழுவதும் அந்த தண்ணீரில் பானையை வைத்திருந்து மறுநாள் காலையில் கழுவினால் அசைவ வாடையே இருக்காது.
இயற்கையான சொரசொரப்புத் தன்மையோடு இருக்கும் மண் பாண்டங்களே பயன்படுத்த சிறந்தது.