
1. ஃப்ரிட்ஜை சோப்பு நீர் கொண்டு சுத்தப்படுத்தக்கூடாது. ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் கால் ஸ்பூன் சமையல் சோடாவை சேர்த்து ஒரு மூடி எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். இதை சிறிய துணியால் தொட்டு ஃப்ரிட்ஜை துடைக்கவும். பிறகு நல்ல துணியால் ஈரம் போக துடைக்க, ஃப்ரிட்ஜ் பளிச்சென்று ஆகி விடும்.
2. ஒரு கப் தண்ணீரில் நாலு தேக்கரண்டி எலுமிச்சைச் சாறு சேர்த்து மைக்ரோ வேவ் அவன் உள்ளே ஐந்து நிமிடம் வைத்து எடுங்கள். இப்படிச் செய்வதால் அவனில் உள்ளே இருக்கும் துர்நாற்றம் நீங்கி விடும்.
3. அடுப்பிலிருந்து சமையல் பாத்திரங்களை எடுத்தவுடன் சிங்க் அடியில் வைத்து குழாயை திருப்பி விட்டால் பாத்திரங்களின் ஆயுள் குறையும். சூடு ஆறியதும்தான் பாத்திரங்களை குழாயின் அடியில் வைக்க வேண்டும்.
4. அதிக விலையில்லாத ஒரு புதிய டூத் பிரஷ்ஷை வாங்கி சமையலறையில் வைத்துக்கொள்ளுங்கள். இதை மிக்ஸி, கிரைண்டர் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை சுத்தம் செய்யப் பயன்படுத்தலாம். கைகளால் சுலபமாக எட்ட முடியாத இடுக்குகளிலும் டூத் பிரஷ் கொண்டு எளிதாகவும், நன்றாகவும் சுத்தம் செய்ய முடியும்.
5. ஓமம் கலந்த சுடுநீரை ஃப்ளாஸ்க்கில் ஊற்றி வைத்து, சிறிது நேரத்துக்குப் பிறகு கழுவினால் துர்நாற்றம் நீங்கி ஃப்ளாஸ்க் சுத்தமாகி விடும்.
6. வீட்டில் பயன்படுத்தும் மர அலமாரியை வெள்ளை வினீகர் கொண்டு, பருத்தித் துணியால் துடைக்க வேண்டும். பஞ்சில் வெள்ளை வினீகரைத் தோய்த்து அழுத்தி எடுத்தால், அலமாரி ஓரங்களில் இருக்கும் அழுக்கும் வந்து விடும்.
7. மங்கலாக இருக்கும் வைர நகைகளை மென்தால் கலந்த டூத் பேஸ்ட் கொண்டு துடைத்தால் பளிச்சென்று ஆகி விடும்.
8. எண்ணெய் பிசுக்குள்ள பாத்திரங்களை சுத்தம் செய்ய ஓர் எளிய வழி. பாத்திரத்தினுள் சில ஐஸ் க்யூப்களைப் போட்டு நன்றாகக் குலுக்குங்கள். பின்னர் க்யூப்களை கொட்டிவிட்டு, வழக்கம் போல் சிறிது லிக்விட் கொண்டு பாத்திரத்தைத் தேய்த்து விட்டால் எண்ணெய் பிசுக்கு இருந்த இடமே தெரியாது.
9. கடலை மாவு, சீயக்காய் தூள் இரண்டையும் கலந்து வெள்ளி, பித்தளை பாத்திரங்களை துலக்கினால் அவை பளபளக்கும்.
10. குக்கரில் உள்ள கேஸ்கட்டை உபயோகிக்கும் நேரம் போக, மற்ற நேரத்தில் தண்ணீர் உள்ள பாத்திரத்தில் போட்டு வைத்தால் கேஸ்கட் நீண்ட நாட்களுக்கு உழைக்கும்.
11. கண்ணாடி பாட்டில்கள் குறுகியதாக இருந்தால், அதை சுத்தம் செய்யும்போது கைவிரல்கள் உள்ளே போகாது. அத்தகைய பாட்டில்களை சுத்தம் செய்ய ஒரு எளிய வழி. எலுமிச்சம் பழத்தை சிறிதாக துண்டுகள் செய்து பாட்டிலில் போட்டு அதன் உள்ளே பாதியளவு தண்ணீர் விட்டு குலுக்கினால் கறைகள் நீங்கி விடும்.
12. ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில் ஒரு ஸ்பூன் டீத்தூள், கொஞ்சம் சோப்புத்தூள் போடுங்கள். அதில் வெள்ளிப் பாத்திரங்கள், வெள்ளி விளக்குகள் முதலியவற்றைப் போட்டு தண்ணீர் ஆறும் வரை ஊற வையுங்கள். பிறகு எடுத்து அழுத்தித் துடைத்தால் கறைகள் நீங்கி பளீரிடும்.