லோன் வாங்கப் போறீங்களா? அதற்கு முன்பு இதை கொஞ்சம் படிங்க!

Loan EMI
Loan EMI
Published on

‘கடன் கழுத்தையும் நெரிக்கும்’ என்று சொன்னால் அது மிகையல்ல. வங்கி அல்லது தனியார் நிறுவனங்களில் நாம் கடன் வாங்கும்போது, ‘எப்படியும் இந்தக் கடனை அடைத்து விட வேண்டும்’ என்ற நோக்கத்தில்தான் வாங்குவோம். ஆனால், ஏதோ ஒரு சூழ்நிலையில் அந்தக் கடனை அடைக்க முடியாமல் போய்விடும் அல்லது தாமதமாகும். கடன் வாங்கிய பலரும், ‘நான் கடன் வாங்கும்போது இந்த விதிகளையெல்லாம் அவர்கள் சொல்லவில்லையே’ என்று ஆதங்கப்படுவார்கள். ஆனால், அவர்கள் என்ன செய்வார்கள் என்றால், நாம் கையெழுத்துப் போட்டுக் கொடுத்த கடன் பத்திரத்தை நம்மிடம் காட்டுவார்கள். ‘இதோ இதற்கெல்லாம் சம்மதித்துதான் நீங்கள் கடன் வாங்கினீர்கள்’ என்று கூறுவார்கள். அதனால் நீங்கள் ஏதாவது கடன் வாங்கும் யோசனையில் இருந்தால் அதற்கு முன்பு இந்தப் பதிவில் உள்ளவற்றை சற்று படித்துக்கொள்ளுங்கள்.

வட்டி விகிதம், கடனை திரும்ப செலுத்தும் காலம் மற்றும் லோன் குறித்த பிற விஷயங்களை வங்கி அதிகாரிகள் பல சமயங்களில் அதிகப்படுத்திக் கூறுவார்கள். கடன் வாங்கிய பிறகு குழப்பம் அடையாமல் இருக்க வேண்டுமென்றால், முதலிலேயே லோன் ஒப்பந்தத்தை முழுமையாகப் படியுங்கள்.

‘லோன் வாங்குவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் முழுமையாகக் கூற வேண்டும்’ என விதிகள் இருந்தாலும், வாங்கிய கடனை அடைக்க முடியாவிட்டால் ஏற்படும் ஆபத்துகள் குறித்தும் அதிக வட்டியை கட்ட வேண்டிய சூழல் ஏற்படுவது குறித்தும் வங்கி அதிகாரிகள் எதுவும் கூறுவதில்லை. லோனை முன்கூட்டியே அடைக்க விரும்பினால் கட்ட வேண்டிய அபராதம் குறித்தோ அல்லது லோன் வாங்கும்போது கட்ட வேண்டிய பிராஸசிங் ஃபீஸ் குறித்த எந்த விவரங்களையும் அவர்கள் தெரிவிப்பதில்லை.

சில வங்கி அதிகாரிகள் கடன் வாங்கும் ஆவணங்களில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலான விதிகளை சேர்க்கிறார்கள். நம்மால் அதை எளிதில் புரிந்துகொள்ள முடியாத வகையில் அந்த ஆவணங்களை தயாரித்து நம்மிடம் கையொப்பம் வாங்குகிறார்கள். அதோடு, லோன் வாங்க வரும் வாடிக்கையாளர்களிடம், லோன் விவரங்கள் அடங்கிய ஒப்பந்தத்தை முழுமையாக வாசிக்க விடாமல் கையெழுத்து வாங்கும் வேலைகளில் சில வங்கி அதிகாரிகள் ஈடுபடுவார்கள். ஒப்பந்தத்தை வாசிக்க போதுமான நேரத்தை வழங்க மாட்டார்கள். ஆனால், நீங்கள் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், பொறுமையாக வாசித்து, ஏதாவது சந்தேகம் இருந்தால் அவர்களிடம் அதுகுறித்து கேளுங்கள்.

நீங்கள் வங்கியில் லோன் விண்ணப்பிக்க முடிவு செய்திருந்தால், இதுபோன்ற தடைகள் இருப்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். எந்தவொரு ஒப்பந்தத்திலும் கையெழுத்து போடுவதற்கு முன்பு அதை நன்றாக வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.

லோன் விண்ணப்பிப்பதற்கு முன்பாக, எத்தனை வகைகளில் லோன் வழங்கப்படுகிறது, ஒவ்வொரு லோனின் விதிகள் மற்றும் நிபந்தனைகள் என்ன போன்ற விவரங்களை ஆய்வு செய்யுங்கள். எந்த லோனை எடுத்தால் உங்களுக்கு சரியாக இருக்கும் என முடுவெடுக்க இது உதவியாக இருக்கும். லோன் வாங்குவதற்கு முன்பு அந்த வங்கி அல்லது நிதி நிறுவனம் ரிசர்வ் வங்கியின் கீழ் ஒழுங்குமுறை செய்யப்பட்டுள்ளதா என்பதை விசாரித்து தெரிந்து கொள்ளுங்கள். லோன் வாங்குவதற்கு நன்கு பிரபலமான வங்கியையே எப்போதும் நாடுங்கள்.

லோன் ஒப்பந்தம் குறித்து உங்களுக்கு எதுவும் தெரியவில்லை என்றால், நிதி ஆலோசகர் அல்லது வழக்கறிஞரிடம் ஆலோசனை கேளுங்கள். லோன் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள விதிகள் மற்றும் நிபந்தனைகள் குறித்து அவர்கள் உங்களுக்கு எளிமையாக விளக்குவார்கள்.

இதையும் படியுங்கள்:
ரசாயனம் கலக்கப்பட்ட தர்பூசணிகளை எப்படி கண்டறிவது?
Loan EMI

உங்களுக்கு வரும் முதல் லோன் சலுகையை அப்படியே ஏற்றுக்கொள்ளாதீர்கள். வட்டி விகிதம், கட்டணம், விதிகள், கடனைத் திரும்ப செலுத்தும் காலம் போன்றவை மற்ற வங்கிகளில் எப்படியிருக்கிறது என ஒப்பிட்டுப் பாருங்கள்.

எந்தவொரு லோன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முன்பும் அதை முழுமையாக படியுங்கள். அதில்தான் லோன் குறித்த விவரங்கள், விதிகள், நிபந்தனைகள், வட்டி விகிதம், திரும்ப செலுத்த வேண்டிய காலம் என அனைத்தும் இருக்கும். லோன் குறித்து உங்களுக்கு எதுவும் புரியவில்லை என்றால், வங்கியிடம் அதுகுறித்த விவரங்களை கேட்கத் தயங்காதீர்கள். வங்கி துறை உள்பட பல துறைகளில் தற்போது பலவிதமான மோசடிகள் நடந்து வந்தாலும், இந்தியாவில் உள்ள பெரும்பாலான வங்கிகள் சட்டத்திற்கு உட்பட்டும் அறநெறிகளுக்கு கட்டுப்பட்டும் இயங்கி வருவதை மறந்துவிடாதீர்கள். மோசடிகள் நடைபெறாத வகையில் ரிசர்வ வங்கியும் ஒழுங்குமுறை அமைப்புகளும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

லோன் வாங்கும்போது ஏதாவது சந்தேகப்படும்படியாகவோ அல்லது மோசடியாக நடந்து கொண்டால் அல்லது உங்களுக்கே தெரியாமல் வங்கியில் பரிவர்த்தனை செய்வது தெரியவந்தால், உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கியிடமும் மற்றும் ரிசர்வ வங்கி அல்லது காவல்துறையிடமும் புகார் தெரிவியுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com