விழாக்களில் பரிசுப்பொருள் கொடுக்கப்போகிறீர்களா? சற்று யோசிக்கலாமே!

Gift
Gifthttps://manithan.com

சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னர் திருமணங்களில் மட்டுமே மொய் எழுதும் வழக்கம் இருந்தது. அக்காலத்தில் ஐந்து ரூபாய், பத்து ரூபாய், இருபது ரூபாய், ஐம்பது ரூபாய் என சக்திக்கேற்ப மொய் செய்வார்கள். ஐந்து ரூபாய் என்பது ஐம்பது வருடங்களுக்கு முன்னால் தற்போதைய ஐநூறு ரூபாய்க்குச் சமமான தொகை.

எண்பதுகளுக்குப் பிறகு திருமணங்களில் மொய் மட்டுமின்றி, பரிசுப் பொருட்கள் கொடுக்கும் வழக்கம் மெல்ல நடைமுறைக்கு வந்தது. பெரும்பாலும் கடிகாரங்கள், சுவற்றில் மாட்டும் இயற்கைக் காட்சிகள், எவர்சில்வர் பாத்திரங்கள், டீ கோப்பைகள் முதலான பொருட்கள் திருமணப் பரிசாக வழங்கப்பட்டன.

சுமார் இருபது வருடங்களுக்கு முன்னர் திருமணம் மட்டுமின்றி, நிச்சயதார்த்தம், சீமந்தம், பிறந்த நாள் விழா முதலான அனைத்து விழாக்களிலும் பணத்தையும், பரிசுப் பொருட்களையும் கொடுக்கும் வழக்கம் அறிமுகமானது. இது மட்டுமின்றி, விழா நடத்துபவர்கள், ‘ரிட்டர்ன் கிப்ட்’ என்ற பெயரில் டிபன் பாக்ஸ், எவர்சில்வர் தட்டுக்கள் முதலான சிறு சிறு பரிசுப் பொருட்களை விழாக்களுக்கு வருபவர்களுக்குக் கொடுத்து கௌரவிக்கும் வழக்கமும் நடைமுறைக்கு வந்துவிட்டது.

தற்காலத்தில் நடைபெறும் அனைத்து விழாக்களிலும் கலந்து கொள்ளுபவர்கள் பரிசுப் பொருட்களைத் தரும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. முன்பு போல இல்லாமல் விதவிதமான ஏராளமான பரிசுப் பொருட்களும் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இதுமட்டுமின்றி, ஆன்லைனிலும் ஏராளமான பரிசுப் பொருட்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

தற்போது வெள்ளியில் சிறுசிறு கிண்ணங்கள், தட்டுகள், காமாட்சி விளக்கு மற்றும் சிறு விளக்குகள் முதலானவற்றை வாங்கி பரிசளிக்கும் நடைமுறை வழக்கத்திற்கு வந்து விட்டது. ஆயிரம் ரூபாயிலிருந்து இத்தகைய வெள்ளிப் பொருட்கள் நமக்குக் கிடைக்கின்றன. வசதியான உறவினர்களும் நண்பர்களும் தங்க நாணயங்களையும் வாங்கி பரிசளிக்கிறார்கள்.

தற்போது நாம் விழாக்களுக்குச் செல்லும்போது விழாக்களுக்கு வருபவர்களில் ஐம்பது சதவிகித்தினருக்கு மேல் கையில் பரிசுப் பொருட்களைக் கொண்டு வருவதைக் காண முடிகிறது. பெரும்பாலும் சுவற்றில் மாட்டும் பிரேம்கள், சுவர் கடிகாரங்கள், ஹாட்பேக், வாட்டர் பாட்டில் மற்றும் ப்ளாஸ்க் முதலான பொருட்களே அனைவரின் தேர்வாக உள்ளது. காரணம் இருநூறு முதல் ஐநூறு ரூபாய்க்கு இத்தகைய பொருட்களே சுலபமாகக் கிடைக்கின்றன.

நண்பர்களும் உறவினர்களும் தங்களின் அன்பின் அடையாளமாக இவற்றை பரிசளிக்கிறார்கள். ஆனாலும், இத்தகைய பொருட்களை உரியவர்கள் பயன்படுத்த இயலாத சூழ்நிலை உள்ளது. காரணம், இதுபோன்ற பரிசுப் பொருட்கள் ஏற்கெனவே நம் வீடுகளில் உள்ளதால் இவற்றைப் பயன்படுத்த முடிவதில்லை. இப்படியாக வரும் பரிசுப் பொருட்களை ஒரு அறையில் பரண்களில் அடுக்கி வைக்கிறோம். சில சமயங்களில் திருமணம் முதலான விழாக்களுக்குச் செல்லும்போது அவற்றை பரிசளிக்கவும் செய்கிறோம். இது பெரும்பாலும் நமக்கு தர்மசங்கடத்தையே ஏற்படுத்துகிறது.

இதையும் படியுங்கள்:
ரோஜாக்கள் தரும் மனநிலை மாற்றங்களும், உடல் ஆரோக்கியமும்!
Gift

காலம் வெகுவாக மாறிவிட்டது. என்ன பரிசுப் பொருளைத் தருவது என்று யோசித்து யோசித்து கடைசியில் ஏதாவது ஒரு பொருளைத் தேர்வு செய்ய வேண்டியிருக்கிறது. அதை கடைக்குச் சென்று வாங்கி கிப்ட் பேக் செய்து சிரமப்பட்டு விழாக்களுக்குக் கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது. விழா நடத்துபவர்களும் வரும் பரிசுப் பொருட்களை தங்கள் இல்லத்திற்குக் கொண்டு செல்ல சிரமப்பட வேண்டியிருக்கிறது. இதையெல்லாம் நாம் சுலபமாகத் தவிர்க்கலாம்.

உறவினர்கள் மற்றும் நண்பர்களின் இல்ல விழாக்களுக்குச் செல்லும்போது நாம் நமது அன்பினை வெளிப்படுத்த பரிசுப் பொருளாகத் தருவதற்கு பதிலாக நமது சக்திக்கேற்ப பணமாகக் கொடுத்து விடலாம். சிறுதுளி பெருவெள்ளம் என்பார்களே. இது அப்படியாக அமையும்.

பரிசாக வரும் பணத்தைக் கொண்டு வீட்டிற்கு அன்றாட உபயோகத்திற்கு தங்களுக்குத் தேவையான பொருட்களை அவர்களே தேர்வு செய்து வாங்கிக் கொள்ளலாம். அல்லது வரும் கணிசமான பணத்தைக் கொண்டு தங்கத்தில் நகைகள் முதலானவற்றை வாங்கிக் கொள்ளலாம். தங்கத்தின் மதிப்பு நாளுக்கு நாள் உயர்வதால் இப்படி வாங்கும் தங்கத்தினாலான பொருளின் மதிப்பும் அன்றாடம் உயர்ந்துகொண்டே போகும். இது நல்லதுதானே? இப்படிச் செய்வதன் மூலம் பரிசாக வரும் கடிகாரம், போட்டோ பிரேம், ஹாட்பேக் முதலான பொருட்களை வீட்டில் வைத்து பாதுகாக்கத் தேவையும் ஏற்படாது. மேலும் ரிட்டர்ன் கிப்ட் தருபவர்கள் புத்தகங்களை பரிசாகத் தரலாம்.

இனி, நாம் விழாக்களுக்குச் செல்லும்போது பரிசுப் பொருட்களை வாங்கிச் செல்வதைத் தவிர்த்து பணத்தைப் பரிசளிப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com