இந்த விஞ்ஞான வளர்ச்சி காலத்தில் முன்பு போல் பெரும்பாலும் யாரும் வங்கிகளுக்குச் சென்று வரிசையில் நின்று பணம் எடுப்பதும் இல்லை, போடுவதும் இல்லை. பணம் போடுவது என்றாலும், எடுப்பது என்றாலும் ATM மெஷின்களையே பயன்படுத்திக் கொள்கிறார்கள். இது வங்கியில் காத்திருக்கும் நேரத்தை மிச்சப்படுத்துவதோடு, அவசரத் தேவைக்கு எந்நேரத்திலும் பணப் பரிமாற்றத்தை செய்துகொள்ள வசதியாக இருக்கிறது. ஆனாலும், இதிலும் சில கஷ்டங்கள் உள்ளன. ATM மெஷினில் பணம் எடுக்கச் செல்பவர்கள் மனதில் அவசியம் வைத்துக்கொள்ள வேண்டிய சில ஆலோசனைகளை இந்தப் பதிவில் பார்ப்போம்.
* அடிக்கடி ATM செல்லாமல், தேவையான பெரிய தொகையை ஒரே சமயத்தில் எடுத்து வைத்துக்கொள்வது சிறந்தது.
* ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் உள்ள ATMகளில் பணம் எடுப்பதை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது.
* மிகவும் அவசியம் என்றால் மட்டுமே விடியற்காலை, இரவு நேரங்களில் ATMகளில் பணம் எடுக்கலாம். வழக்கமாக மாதச் செலவுக்கு பணம் எடுப்பது என்றால் அந்த நேரங்களைத் தவிர்ப்பது சிறந்தது.
* செக்யூரிட்டி இருக்கும் ATMகளில் பணம் எடுப்பது பாதுகாப்பானதாக இருக்கும்.
* ATMல் எடுத்த பணத்தை அங்கேயே எண்ணிப் பார்ப்பது ஆபத்தானது. இன்னும் சொல்லப்போனால் எண்ணிப் பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. நிச்சயம் சரியாகத்தான் இருக்கும்.
* மாற்று வங்கி ATMல் பணம் எடுப்பதை முடிந்த அளவு தவிர்ப்பது நல்லது. காரணம், ஏதாவது சிறு பிரச்னை என்றால் கூட தீர்வு கிடைக்க வாரக் கணக்கில் ஆகும்.
* ATM கார்டின் ரகசிய எண்ணை சீட்டில் எழுதி ATM கார்டுடன் சேர்த்து வைத்துக்கொள்வது மிகவும் தவறு.
* ATMல் பணம் எடுக்க முன் பின் தெரியாத நபர்களிடம் உதவி கேட்பது நல்லதல்ல. அதேபோல, முன்பின் தெரியாத நபர்களுக்கு ATMல் பணம் எடுக்க உதவி செய்வதும் ஆபத்தானதே.
* ATMஐ விட்டு வெளியே வரும் முன், முழுமையாக உங்கள் கணக்கிலிருந்து வெளியே வந்து விட்டீர்களா என்பதை உறுதி செய்து கொள்வது அவசியம்.