
நம் சமையலறையில் நாம் பல வகையான உணவுப் பொருட்களை சேமித்து வைத்திருப்பது வழக்கம். அவற்றுள் நாம் தினசரி தொடர்ந்து உபயோகிக்க எடுப்பது அரிசி. எனவே அதை கொஞ்சம் அதிகமாகவே வாங்கி டின்களில் நிரப்பி வைத்திருப்போம். சில நாட்களில், டின்னைத் திறந்தவுடன் கருப்பு நிறத்தில் சிறு சிறு வண்டுகளும், சிறு புழுக்களும் கண்ணில் பட ஆரம்பிக்கும். அரிசியின் நுனியில் ஒரு சிறு ஓட்டையும் இருக்கும். அதற்குள்தான் வண்டு குடியிருந்து அரிசியை சாப்பிட்டபடி வாழ்ந்து கொண்டிருக்கும். அது அரிசிக்குள் இடும் முட்டையிலிருந்து லார்வாக்கள் உற்பத்தியாகும்.
சமையல் அறையின் கத கதப்பும் ஈரத் தன்மையும் இந்த அரிசி அந்துப் பூச்சி (Rice Weevil) களுக்கு பிடித்தமானதாயிருப்பதால், அவை, அரிசி, பருப்பு, ஆட்டா, ரவை போன்றவற்றை சேமித்து வைத்திருக்கும் டின்களுக்குள் குடியேறி மாதக் கணக்கில் அங்கு வாழ்ந்து கொண்டிருக்கும். அந்தப் பொருட்களை அப்படியே உபயோகித்தால் ஜீரணக் கோளாறுகள் உண்டாகும் வாய்ப்பு உருவாகும். எனவே அந்தப் பூச்சிகளை அடியோடு அழிக்க ஆறு ஆலோசனைகளை இப்பதிவில் பார்க்கலாம்.
1.குறிப்பிட்ட இடைவெளிகளில் கன்டைனர்களை செக் பண்ணுவது அவசியம். ஒரு டப்பாவிலுள்ள பொருளில் வண்டுகள் காணப்பட்டால் மற்றவைகளிலும் அவை இருப்பதற்கான வாய்ப்பு அதிகம். புதிதாக ஒரு பொருள் வாங்கி வந்து டப்பாவில் போடும்போது முன்பு வாங்கினதில் மீதி இருந்தால் இரண்டையும் கலக்காமல் தனித் தனியா வைத்துக்கொள்வது நன்மை தரும்.
2.வண்டு வந்த பொருளை ஒரு ஷீட்டில் கொட்டிப் பரத்தி ஒரு நாள் முழுக்க வெயிலில் காய வைத்து எடுத்தால், வண்டுகள் சூடு தாங்காமல் ஊர்ந்து ஓடிவிடும். புழுக்களும் முட்டைகளும் சூட்டில் இறந்துவிடும்.
3.வெயிலில் காயவைப்பது சாத்தியப்படவில்லை யெனில், வண்டு வந்த பொருளை ஃபிரீசரில் 3-4 நாட்கள் வைத்து எடுத்தால் புழுக்களும் முட்டைகளும் இறந்துவிடும்.
4.பொருள்களைப் போட்டு வைக்கும் கொள்கலன் (Containers) களை அவ்வப்போது காலி பண்ணிவிட்டு சூடான சோப்பு நீரால் நன்கு கழுவிக் காயவைத்துப் பின் மீண்டும் உபயோகிப்பது பாதுகாப்பு தரும்.
5.பொருள்களை சேமித்து வைத்திருக்கும் டப்பாக்களுக்குள் சில வேப்பிலைகள், பிரிஞ்சி இலைகள், லவங்கம் அல்லது சில பூண்டுப் பற்களைப் போட்டுவைத்தால், வண்டு அவற்றின் வாசனையால் குழப்பமடைந்து அங்கு முட்டை இடுவதைத் தவிர்த்துவிடும்.
6.பொருட்களை எப்பவும் உலோகப் பாத்திரம் அல்லது கண்ணாடி ஜார்களில் போட்டு வைப்பது பாதுகாப்பு. பிளாஸ்டிக் பாக்கெட்களில் அப்படியே வைப்பது அல்லது சரியான மூடி இல்லாத கன்டைனர்களை உபயோகிப்பது ஆரோக்கியமானதல்ல. நன்கு உலர்ந்த காற்றுப் புகாத கன்டைனர்கள் இல்லாதவர்கள் தானியங்களை மொத்த மாக வாங்குவதைத் தவிர்த்து கொஞ்சம் கொஞ்சமாக வாங்கி உபயோகித்துக் கொள்ளலாம்.
உணவுப் பொருட்களை பாதுகாப்பாக சேமித்து உடல் நலம் காப்போம்!