
நாம் நம் வீடுகளில் அன்றாடப் பயன்பாட்டிற்காக பழங்களும் காய்கறிகளும் வாங்குவது வழக்கம். அவற்றைப் பயன்படுத்திய பின் தோல் போன்ற கழிவுகளை அந்தக் காலம் போல் தூக்கி எறிந்து விடாமல், வீட்டுத் தோட்டத்தில் சேரும் இலை தழைகளுடன் கலந்து கம்போஸ்ட் உரம் தயாரிக்க வைத்திருக்கும் கன்டைனரில் போட்டு உரமாக்கி விடுவது இன்றைய விழிப்புணர்வு. குறிப்பாக, இதில் எலுமிச்சம் பழத்தின் தோலைப் பயன்படுத்தி கிச்சன் கார்டனை என்னென்ன நன்மையடையச் செய்யலாம் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. எலுமிச்சம் பழத்தின் தோலை செடிகளின் அடியிலும், தோட்டத்திலும் ஆங்காங்கே போட்டு வைப்பதால் அதன் அழுகிய வாசனையை தாங்க முடியாமல் எறும்புகள், கொசு மற்றும் அசுவினிப் பூச்சிகளை நெருங்க விடாமல் விரட்ட உதவும். எலுமிச்சம் தோலை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி காய வைத்து தோட்டத்தில் தூவி விட்டால், மண்ணில் உள்ள அமிலத் தன்மையின் அளவு சமன்படும்.
2. எலுமிச்சம் தோலை நறுக்கி தண்ணீரில் இரண்டு நாட்கள் ஊற வைத்துப் பின் தோலை கசக்கி, நசுக்கிப் பிழிந்தெடுத்து விட்டு, அந்த நீரை நேரடியாக செடிகளுக்கு திரவ உரமாக ஊற்றலாம். அதிலுள்ள வைட்டமின் மற்றும் பிற ஊட்டச் சத்துக்கள் செடிகள் செழித்து வளர உதவும்.
3. எலுமிச்சம் தோலை சிறு சிறு தட்டுகளில் பரத்தி தோட்டத்தில் ஆங்காங்கே வைக்கலாம். இதன் அசிடிட்டி கலந்த வாசனை பட்டாம் பூச்சிகளைக் கவர்ந்திழுக்கும். இதனால் தோட்டத்துப் பூக்களிடையே மகரந்தச் சேர்க்கை நல்ல முறையில் நடைபெறும். தோட்டத்தில் அவ்வப்போது நாம் நடந்து செல்கையில் மற்ற பூக்களின் வாசனையுடன் லெமன் வாசனையும் கலந்து மனதை அமைதிப்படுத்தி ஸ்ட்ரெஸ் குறைய உதவும்.
4. தோட்ட வேலைக்குப் பயன்படுத்தும் உபகரணங்களை சுத்தப்படுத்தவும் எலுமிச்சை தோல் உதவி புரியும். இத்தோலைக் கொண்டு துரு ஏறிய பகுதிகளைத் தேய்க்கும்போது, அதிலுள்ள ஆசிட் தன்மை, துரு நீங்கி கருவிகள் புதுப் பொலிவு பெறச் செய்யும். மேலும், அதிலுள்ள கிருமிகளும் நீங்கி விடும்.
5. கோயில்களில் தீபம் ஏற்றுவது போல், ஒரு பக்கத்துத் தோலின் அடியில் ஒரு துளை போட்டு, மண் நிரப்பி ஒரு விதையைப் போட்டு முளைக்க வைக்கலாம். முளை வந்ததும் அப்படியே அதை மண்ணில் புதைத்து விட்டால், தோல் மக்கி அந்த இடத்து மண்ணை வளமாக்கும். செடியும் நன்கு வளரும். குழந்தைகளுக்கு இது ஒரு வேடிக்கை கலந்த அனுபவத்தையும் தந்து கற்றுக்கொள்ளவும் உதவும்.
6. கம்போஸ்ட் உரம் தயாரிக்க வைத்திருக்கும் கொள்கலனில் எலுமிச்சை தோல்களை உரமாக்கி சேர்க்கும்போது, கிடைக்கும் உரம் கெட்ட வாசனையின்றி, ஒரு நறுமணமுள்ளதாக இருக்கும்.
எலுமிச்சை தோல்கள் சீக்கிரம் காய்ந்துவிடும் என்பதால், மண் வளமாகவும் அமிலத் தன்மையுடனும் இருக்க, தொடர்ந்து இந்தத் தோல்களைப் பரவலாகப் போட்டுக்கொண்டிருப்பது அவசியம்.