
ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்படும் பண்டிகை தீபாவளி. சிலர் உள்ளுர்வாசிகள், பலரும் வெளியூர்வாசிகள். அவர்கள் இந்த பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்குச் செல்வார்கள். அப்படிச் செல்பவர்களுக்கு சில பயனுள்ள ஆலோசனைகளை இந்தப் பதிவில் காண்போம்.
வீட்டு முன் கதவு, பின் கதவு ரெண்டையும் பெரிய திண்டுக்கல் பூட்டா போட்டுடுங்க. இப்பத்தான் டிஜிட்டல் லாக், ஆட்டோமேடிக் லாக் எல்லாம் வந்திடுச்சே. அதில் ஏதாவது ஒன்றை போட்டுட வேண்டியதுதான்.
வீட்டில் உறுப்பினர்கள் இருந்தால் கூட, வீட்டு முன் கதவு, பின் கதவு மூடியே இருக்கட்டும். ஊருக்குப் போவதை ரகசியமா செய்யாதீங்க. அதுக்காக ஊருக்கெல்லாம் தம்பட்டமும் அடிக்காதீங்க. பக்கத்து வீடு, எதிர்த்த வீட்டுல இருக்கறவங்ககிட்ட ஏற்கெனவே சண்டையா இருந்தா கூட ஊருக்குப் போவதற்கு முன்பு அவங்ககிட்ட தோழமையோடு பேசிப்பழகி, ஊருக்குப் போகும்போது ‘கொஞ்சம் நம்ம வீட்டையும் பார்த்துக்கோங்க’ன்னு அன்பா கேட்டுக்கோங்க.
கதவிற்கு அருகிலோ அல்லது ஜன்னலுக்கு அருகிலோ வீட்டுசாவி, பீரோ சாவி போன்றவற்றை வைப்பது புத்திசாலித்தனமல்ல. வைச்சீங்கன்னா வீட்டில் எந்தப் பொருளும் இருக்காது. அம்புட்டுதான்.
அநாவசியமாக முகம் தெரியாத சந்தேகப்படும் நபர்கள் வாசலுக்கு அருகே நின்றால், ‘வாங்க தம்பி, என்ன வேணும்’ என்று தைரியமாக விசாரியுங்கள். ‘ஊர்ல யாராவது வந்துட்டு போறாங்க, நமக்கென்ன?’ என்று அலட்சியமாக இருக்காதீர்கள். ‘தம்பி யாருப்பா நீ’ என்று விசாரித்தாலே போதும் அவர்கள் உடனே நழுவி விடுவார்கள்.
ஏணி போன்ற தோட்ட வேலைக்குப் பயன்படும் பொருட்களை வீட்டுக்கு வெளியே போட்டுவிட்டுப் போகாதீர்கள். அவை உங்கள் வீடுகளில் நுழைவதற்கு நீங்களே நுழைவுச் சீட்டை வழங்கி இருப்பதாக திருடுபவர்கள் எண்ணிக் கொள்வார்கள்.
உங்க வீடு அபார்ட்மெண்டா? அப்படியென்றால் அபார்ட்மெண்ட் காவலாளியிடம் தகவல் தெரிவித்து உங்கள் வீட்டை தனி கவனத்தோடு பாதுகாக்க சொல்லுங்கள். கூடுதல் செலவைப் பார்க்காமல், தனியாக, ‘அண்ணே! பிள்ளைகளுக்கு ஏதாவது வாங்கிக் கொடுங்க’ என்று கொஞ்சம் பணத்தையும் அவர்களிடம் கொடுத்து விட்டுச் செல்லுங்கள். அது நீங்கள் ஊர் திரும்பும் வரை வேலை செய்யும்.
தொலைவில் இருந்து பார்த்தால் உங்கள் வீடு காலியாக இருப்பதைப் போன்ற தோற்றத்தை உருவாக்கி விடாதீர்கள். உங்க வீட்டுல இருந்துட்டு, அடுத்தவங்க வீட்டை நோட்டம் விட பயன்படுத்திக் கொள்வார்கள் சில பலே கில்லாடி ஆசாமிகள்.
நீண்ட நாள் ஊர் பயணமாக இருந்தால், ‘பால் பாக்கெட், செய்தித்தாள் போன்றவற்றை நிறுத்தி விடலாம் என்று சிக்கன பேர்வழிகள் அதைச் செய்தால் தவறு. நீங்கள் ஊர் திரும்பும் வரை பால் பாக்கெட்டையும், செய்திதாளையும் நண்பர் வீட்டில் டெலிவரி கொடுக்க சொல்லுங்கள்.
மேற்சொன்னவற்றை எல்லாம் செய்துவிட்டுப் போனால் நீங்கள் உங்கள் சொந்த ஊரில் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் தீபாவளியை கொண்டாடிவிட்டு ஊர் திரும்பலாம்.