
ஒருவரைப் பார்க்கும்போது அவருக்கு 100 வயது என்று சொன்னவுடன் அனைவருமே ஆச்சரியப்படுவோம். சிலருக்கு மரபணு ரீதியாக நீண்ட ஆயுள் கிடைத்தாலும், பொதுவாக நீண்ட காலம் வாழ்வதற்கு அனைவருக்கும் தெரிந்த ஒரே எளிய வழி ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடிப்பதுதான். அந்த வகையில் ஒருவரின் ஆயுளை நீட்டிக்கச் செய்யும் 8 முக்கியமான பழக்க வழக்கங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
1. ஆரோக்கிய உணவுப் பழக்கம்: துரித மற்றும் சர்க்கரை, உப்பு அதிகம் கலந்த உணவுகளைத் தவிர்த்து, வேறுபட்ட உணவுகள் மற்றும் கலவையான உணவு முறையை கடைபிடிப்பது நீண்ட ஆயுளுக்கு சிறந்ததாக உள்ளது. அதேபோன்று, பொரித்த மற்றும் வறுத்த உணவுகளைத் தவிர்த்து தினந்தோறும் புரத உணவுகள், பழங்கள், காய்கறிகள் முழு தானியங்களை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
2. தினசரி உடற்பயிற்சி: ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு தினந்தோறும் மிதமான உடற்பயிற்சி செய்வது மிகவும் உதவி புரிகிறது. நாள்பட்ட நோய்கள் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைப்பதோடு, தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
3. நல்ல தூக்கம்: தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதால் தூக்கம் மேம்படுகிறது. பலவித வாழ்க்கை முறைகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையது என்பதை காட்டுவதாக இது உள்ளது. உடலை சமநிலைப்படுத்தி பல்வேறு வித உடல் கேடுகளிலிருந்து தினமும் 7 முதல் 9 மணி நேர தூக்கம் உங்களைக் காப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். காய்கறிகளை அதிகளவில் எடுத்துக்கொள்வது, காலை உணவை தவறாமல் சாப்பிடுவது, மது, புகையிலையை தவிர்ப்பது உடலின் இரும்புச்சத்தின் அளவை கண்காணித்து தூக்கத்திற்கான வழிகளாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.
4. மன அழுத்தத்தை கண்காணித்தல்: நம்முடைய உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கும் மன அழுத்தத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மன அழுத்தத்தை கட்டுப்படுத்துவது எளிதானது அல்ல என்றாலும், அதிலிருந்து விடுபடுவது நன்மை பயக்கும். இல்லையென்றால் இதய நோய்கள் போன்ற பல உடல் நல பாதிப்புகளுக்கு மன அழுத்தம் வழிவகுத்து விடும்.
5. வலுவான தனிப்பட்ட உறவுகள்: ஒருவரோடு ஒருவர் தொடர்பில் நீடிப்பதற்கு குடும்பம் மற்றும் நண்பர்களிடையே நாம் கொண்டிருக்கும் நெருக்கமான நட்புறவு முக்கியம். இத்தகைய நட்புறவு, பதற்றம், மன அழுத்தம் மற்றும் எதிர்மறை விளைவுகளில் இருந்து நம்மை காப்பதோடு தனிமையை தவிர்ப்பதற்கான மிகச் சிறந்த வழியாக இருக்கின்றன.
6. போதைப் பழக்கத்தை தவிர்த்தல்: ஆரோக்கியமான உடல் நலத்தை கெடுக்கக்கூடிய அனைத்து போதை பொருட்களையும் தவிர்ப்பதோடு, அடிமைப்படுத்தும் போதை பழக்கத்தையும் கைவிடுவது நீண்ட கால ஆயுளுக்குச் சிறந்ததாகும்.
7. அதிக மதுப்பழக்கத்தை தவிர்த்தல்: அதிகமாக மது அருந்துவதால் கல்லீரல் செயல் இழப்பு, உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய் போன்ற நோய்கள் ஏற்படும். மேலும், நாள்பட்ட கல்லீரல் சிரோசிஸ், அக்யூட் ஆல்கஹாலிக் ஹெபடைட்டிஸ் அல்லது அக்யூட் கல்லீரல் செயலிழப்பு, நாள்பட்ட கல்லீரல் நோய் போன்ற கல்லீரல் நோய்கள் மது அருந்துவதால் ஏற்படுகின்றன.
8. புகைப் பழக்கத்தை தவிர்த்தல்: புகைப்பிடிப்பதை தவிர்ப்பதே ஆயுள் நீட்டிப்புக்கு வழி வகுக்கும். 40 வயதிற்குள் புகை பிடிக்கும் பழக்கத்தை ஒருவர் கைவிட்டால் அவரது ஆயுள் 10 வருடங்கள் கூடும் என்பது மருத்துவர்களின் கருத்தாக உள்ளது. மேலும், அவரது உடலில் புகையால் ஏற்பட்ட பாதிப்புகள் 90 சதவிகிதம் குறைந்து ஆயுள் நீட்டிப்புக்கு வழிவகுக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.
நீண்ட ஆயுளுக்கு நிச்சயமாக உத்தரவாதம் அளிக்க முடியாது என்றாலும் மேற்கூறிய எட்டு வாழ்வியல் முறைகளும நீண்ட ஆயுளுக்கான வாய்ப்பாக அமையும்.