‘ஆண்டொன்று போனால் வயதொன்று கூடும்!’ வயது கூடுகிறதே என்று வருத்தம் அடைபவர்களும் உண்டு. வயதாகவில்லையே என்று ஆதங்கப் படுபவர்களும் உள்ளனர். எல்லாம் அக்கரைப் பச்சை கதைதான். வாழ்வில் நமக்கென இறைவன் அளித்ததை முழுதாக அனுபவிக்காமல், இல்லாத ஒன்றுக்காக ஏங்கியே வாழ்வை இழப்பவர்கள் எண்ணிக்கையே அதிகம். என்ன செய்வது? மனித இயல்பு அதுதான்!
பணியிலிருக்கும் பலர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற உடனேயே உலக வாழ்வு முடிந்து விட்டதாக எண்ணி விடுகிறார்கள். உண்மையில், பணி ஓய்வில்தான் சுதந்திர வாழ்வின் முழுமையை அனுபவிக்க முடியும் என்பதை சிந்திப்போர் உணர்வர்!
-அடித்துப் பிடித்து குறிப்பிட்ட நேரத்திற்குள் அலுவலகம் செல்ல வேண்டாம்.
-கொடுக்கப்பட்டுள்ள இலக்குகளை அடைய முயற்சிக்க வேண்டாம்.
-கோபக்கார உயரதிகாரிகளுடனோ, ஓபியடிக்கும் கீழிருக்கும் பணியாளர்களுடனோ போராட வேண்டாம்.
-காலையில் மெதுவாக எழும்பி ஹாய்யாக, விருப்பப்படி அன்றாட நிகழ்வுகளை மேற்கொள்ளலாம்.
-உறவினர்கள், நண்பர்கள் வீட்டு நிகழ்ச்சிகளில் விருப்பப்படி கலந்து கொள்ளலாம்.
இப்படி இன்னும் பலவற்றை அடுக்கிக் கொண்டே போகலாம்...
என்ன?சிலருக்கு மனது இளமையாக இருக்கும். ஆனால் உடல் அதற்கு ஒத்துழைப்பு வழங்காமல் சத்தியாக்கிரகம் செய்யும். உடலையும் மனதையும் ஒன்றிணைக்கும் கலை நம் கைவசந்தானே உள்ளது. அதனைப் பயன்படுத்தி வாழ்வை வளமாக்கலாம்; சந்தோஷமாக்கலாம்; அமைதியாக்கலாம்; நிம்மதியாக்கலாம்!
முதியவர்கள் கீழ்க்கண்டவற்றைப் பின்பற்றுவது அவர்களுக்கும், அவர்களைச் சேர்ந்தவர்களுக்கும் நன்மை பயக்கும் என்கிறது தேசீய மூத்த குடிமக்கள் நலச்சங்கம்.
அவை:
-தனியாகப் பயணிக்க வேண்டாம். துணையுடன் பயணியுங்கள்.
-பீக் அவரில் வெளியிற் செல்வதைத் தவிர்க்கவும்.
-ஆர்வ மிகுதியால் அதிக உடற்பயிற்சியோ, நடைப் பயிற்சியோ தேவையில்லை.
-படித்தல், மொபைலில் பேசுதல், டிவி பார்ப்பது, எல்லாம் அளவாக இருக்கட்டும்.
-அதிக மருந்துகள் வேண்டாம்.
-அதே சமயம், மருத்துவர்களை உரிய நேரத்தில் சந்திக்கவும், அவர்கள் தருகின்ற மருந்துகளை முறையாகச் சாப்பிடவும் மறக்க வேண்டாம்.
-பணி ஓய்வுக்குப் பிறகு சொத்துப் பிரித்தலைத் தவிர்க்கலாம்.
-உங்கள் ஐடி கார்டும், முக்கிய போன் நம்பர்களும் எப்பொழுதும் உங்களுடனேயே இருக்கட்டும்.
-இறந்த கால வருத்தமோ, எதிர்காலப் பயமோ வேண்டாம்.
-பிடித்த உணவை, அளவாக நிதானமாக மென்று சாப்பிடுங்கள்.
-குளியலறை, கழிவறை செல்கையில் இரட்டிப்பு கவனம் தேவை.
-மதுவையும், புகையையும் ஒதுக்குங்கள்.
-தற்பெருமை பேசாதீர்கள்.
-சுற்றுலாப் பிரியர் என்றால், பணி ஓய்வு பெற்றதும் ஊர், உலகத்தைச் சுற்றிப்பார்த்துவிட்டு, பின்னர் கூட்டம் கூடும் இடங்களைத் தவிர்த்திடுங்கள்.
-சொத்து, சுகங்களைப் பற்றி அறிமுகமற்றவர்களிடம் பேசாதீர்கள்.
-உங்கள் உடல் ஆரோக்கியத்துக்குத் தக்கவாறு உடற் பயிற்சிகளைச் செய்யுங்கள்.
-இதய நோய்கள் இருக்குமானால் சிரசாசனம் போன்றவற்றைச் செய்யாதீர்கள்.
-நேர்மறை எண்ணங்களுடன், அதிகமாக உணர்ச்சி வசப்படுவதைத் தவிருங்கள்.
-உண்டதும் உறங்காதீர்கள்.
-கடன் கொடுப்பதைத் தவிருங்கள்.
-இளந்தலைமுறையினருக்கு அறிவுரை வழங்க வேண்டாம்.
-பிறர் நேரத்திற்கும் மதிப்பளியுங்கள்.
-பணி ஓய்வில், தேவையில்லையெனில், ஆசைப்பட்டு சம்பாதிக்க முயல வேண்டாம்.
-இரவில் நன்கு உறங்க, பகலில் தூங்க வேண்டாம்.
-நெருங்கியவர்களின் தனிமையை மதியுங்கள்.
-துணையுடன் பேசி உயில் எழுதுங்கள்.
-உங்கள் சேமிப்பை சந்ததியினருக்குக் கொடுக்க எண்ண வேண்டாம்.
-உங்கள் வயதினருடன் பிரச்னையற்ற நட்பு கொள்ளுங்கள்.
-உங்களுக்கு உறக்கம் வரவில்லையென்பதற்காக பிறரைச் சிரமப்படுத்தாதீர்கள்.
-மாற்றுக் கட்சியில் இருப்போருடன் அரசியல் பேசினாலும், அவர்கள் கருத்துக்களுக்கும் மதிப்பளியுங்கள்.
-எல்லா நேரமும் உடல் நலமில்லையென்று அங்கலாய்க்காதீர்கள்.
-துணையுடன் சண்டை வேண்டாம்.
-மத விஷயங்களில் கலந்து கொள்ளுங்கள்; அதே சமயம், பகுத்தறிவுக்கு ஒவ்வாததை ஏற்கவேண்டாம்.
-புன் சிரிப்புடன் வாழ்வை அனுபவித்து வாழுங்கள்!