
கபடி என்பது இந்தியாவின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றாகும். இது சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக நம்பப்படுகிறது. இந்த விளையாட்டு தமிழ்நாட்டில் தோன்றி, பின்னர் இந்தியா முழுவதும் பரவியது. பண்டைய காலத்தில், போர்வீரர்களின் உடல் திறனை மேம்படுத்தவும், மன உறுதியை வளர்க்கவும் கபடி விளையாடினர். மக்கள் தங்கள் பலத்தை வெளிக்காட்ட ஆடிய ஆட்டம் இது. 'கபாடி' (kabadi) என்ற வார்த்தை 'கை-பிடி' என்ற தமிழ் வார்த்தையிலிருந்து உருவானது. இது சடு-குடு என்றும் அழைக்கப்படுகிறது.
ஆண்கள் மட்டுமே விளையாடி வந்த கபடி விளையாட்டில் தற்போது பெண்களும் கலந்து கொண்டு ஆண்களுக்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை பல இடங்களில் நிருபித்து வருகின்றனர் என்றே சொல்ல வேண்டும். அந்த வகையில் பெண்கள் கபடி அணி மாநில மற்றும் தேசிய அளவிளான போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று வருகின்றன.
வடமாநிலங்களில் தமிழகத்தை சேர்ந்தவர்களை மதராசி, சாம்பார் என்ற புனைப்பெயர்களை சொல்லி கேலி செய்யும் போக்கும் இன்று நடந்து கொண்டே தான் இருக்கிறது. தமிழக வீரர்களுக்கு வடமாநிலங்களில் பாதுகாப்பில்லாத நிலையே இருந்து வருகிறது. அந்த வகையில் பஞ்சாப்பில் பெண்கள் கபடி வீரர்களுக்கு நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் ஆண்டு தோறும் தேசிய அளவிலான கபடிப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தாண்டு நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள தமிழ்நாட்டில் இருந்து அன்னை தெரசா பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் அழகப்பா பல்கலைக்கழகத்தில் இருந்து 36 வீராங்கனைகள் பங்கேற்க சென்றனர். அவர்களுடன் ஒவ்வொரு அணிக்கும் ஒரு மேலாளர், ஒரு பயிற்சியாளர் என 3 மேலாளர்களும், 3 பயிற்சியாளும் சென்றனர்.
நேற்று நடைபெற்ற ஒரு போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அன்னை தெரசா பல்கலைக்கழகம் மற்றும் தர்பாங்கா பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களை சேர்ந்த வீராங்கனைகள் மோதினர். இந்த போட்டியின் போது திடீரென தமிழக வீராங்கனைகள் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இந்த போட்டி நடக்கும் போது, புள்ளிகள் தொடர்பாக ஒரு மனக்கசப்பு ஏற்பட்டு, இரு அணிகளுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. நடுவரிடம் தர்பாங்கா பல்கலைக்கழக வீராங்கனைகள் மீது அன்னை தெரசா பல்கலைக்கழக வீராங்கனைகள் முறையிட்டபோது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மேலும் வாக்குவாதம் முற்றி தமிழக வீராங்கனைகள் ஒன்று சேர்ந்து பதில் தாக்குதல் நடத்தி உள்ளனர். அதுமட்டுமின்றி தமிழ்நாடு அணியின் பயிற்சியாளர் பாண்டியராஜன் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவமும் நடந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பேட்டியளித்த தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தற்போது தமிழக வீராங்கனைகள் பாதுகாப்புடன் இருக்கின்றனர் என்றும் வரும் காலங்களில் மாணவிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. வட மாநிலத்தில் தமிழக பெண் வீராங்கனைகள் மீது நடந்த தாக்குதல் சம்பவத்திற்கு பல அரசியல் கட்சித்தலைவர்களும் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர்.