

குழந்தைகளுக்கு டீ, காபி போன்ற பானங்களை ஐந்து வயது வரை முற்றிலும் தவிர்க்க வேண்டும். வளரும் பிள்ளைகள் எனில் இந்த டீ,காபி குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பள்ளி செல்லும் வேளையில் ஏற்கெனவே சாப்பாட்டை ஒதுக்கும் பிள்ளைகள் டீ,காபி குடிக்க பழகினார்கள் எனில் சாப்பாட்டை வேண்டாமென்பார்கள்.
டீயில் உள்ள டானின் மற்றும் டேனிக் அமிலம் இரைப்பையில் அல்சர் எனப்படும் குடல் புண்ணை ஏற்படுத்தும். இது பசியைக் குறைக்கும். டீயில் 2சதவிகிதம் கேபின் உள்ளது. புகையிலையில் உள்ள நிகோடின் போலவே இதுவும் ஒரு அடிமைப்படுத்தும் பொருளாகும்.
நிகோடின் அளவுக்கு இல்லை என்றாலும் விடாமல் டீ குடிக்கும் பழக்கத்தை பழக தீங்குதான் ஏற்படும். கேபின் முதலில் நரம்பு மண்டலத்தை தூண்டி பின் அதனை அடக்குகிறது.எனவே இந்தப் பழக்கத்தை விட்டால் தலைவலி, சோர்வு, நடுக்கம் முதலியன ஏற்படலாம்.
டீ ஒரு டியூரெடிக் அதாவது அதிகமான அளவில் சிறுநீரை வெளியேற்றும் தன்மை கொண்டது. உடலில் நீர் அளவு குறைவாகவே இருந்தாலும் வலிந்து நீரை வெளியேற்றும். எனவே நீர் இழப்பு ஏற்படும். மேலும் இது சிறுநீரகங்களுக்கு வேலைப் பளுவைக் கொடுக்கிறது.
டீ நேரடியாகவும், மறைமுகமாகவும் மலச்சிக்கலை ஏற்படுத்தும் தன்மை வாய்ந்தது. டீயில் உள்ள ஆல்கலாய்டு பொருள்கள் நாம் உண்ணும் உணவில் உள்ள இரும்புச்சத்தை குடலால் உறிஞ்ச விடாமல் தடுப்பதால் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுகிறது.
காஃபி யில் உள்ள கேபின் அளவு டீயில் இருப்பதைப்போல இருமடங்கு உள்ளது. மேலே சொன்னவைகள் இருமடங்கு ஏற்படும். மேலும் டானின் என்ற பொருளும் காபியில் உள்ளது. எனவே டீயை விட காஃபி குடிக்க பழகும்போது முடி உதிர்வு, நெஞ்செரிச்சல், தலைவலி போன்ற பிரச்னைகளை உருவாக்கும்.
சிறு பிள்ளைகள் இவற்றை பழகாமல் பால், சத்துமாவு கஞ்சி அல்லது சூப் என பழக்க அவர்களது ஆரோக்கியம் மேம்படும்.
இவை எங்கள் வீட்டில் சிறு பிள்ளைகளுக்கு நாங்கள் செய்ததின் அனுபவம் இது. நீங்களும் உங்கள் குழந்தைகளுக்கு இவற்றை செய்து கொடுத்து குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதுகாத்திடுங்கள்.