

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும், மலிவான விலையில் கிடைக்கும் ஒரு சிறந்த சத்தான பழம் தான் வாழைப்பழம். ஆனால், அதிக லாப நோக்கத்திற்காக சில வியாபாரிகள் காயாக இருக்கும் வாழைப்பழங்களை கார்பைடு கற்கள் மற்றும் ரசாயனங்களை பயன்படுத்தி ஒரே ராத்திரியில் பழுக்க வைக்கிறார்கள்.
இப்படி செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழங்களை சாப்பிடுவது நமது குடல் மற்றும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு பெரும் கேட்டை விளைவிக்கும். எனவே, சந்தையில் விற்கும் பளபளப்பான பழங்களை பார்த்து ஏமாறாமல், நிஜமாகவே மரத்தில் அல்லது இயற்கையாக பழுத்த வாழைப்பழத்தை எப்படி சுலபமாக அடையாளம் காண்பது என்பதை பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
காம்புப் பகுதியை கவனிக்கவும்!
பழத்தின் காம்புப் பகுதியை கவனிப்பதே முதல் படியாகும். இயற்கையாகப் பழுத்த வாழைப்பழத்தின் காம்பு பகுதி கருப்பு அல்லது அடர் பழுப்பு நிறத்தில் சுருங்கி இருக்கும். ஆனால், ரசாயனத்தில் பழுக்க வைக்கப்பட்ட பழத்தின் உடம்பு முழுவதும் நல்ல மஞ்சள் நிறத்தில் இருந்தாலும், அதன் காம்பு பகுதி மட்டும் பச்சையாகவே இருக்கும். இதை வைத்து அந்த பழம் கார்பைடு கல்லில் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்டது என்பதை நாம் மிக எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம்.
தோலில் இருக்கும் கரும்புள்ளிகள்!
அடுத்ததாக பழத்தின் தோலை உற்று கவனிக்க வேண்டும். இயற்கையாகப் பழுத்த பழத்தின் மீது ஆங்காங்கே சிறு சிறு கருப்பு அல்லது பழுப்பு நிற புள்ளிகள் வந்திருக்கும். அதுதான் பழம் நன்றாக கனிந்து உண்மையான இனிப்பு சுவையுடன் இருப்பதற்கான அடையாளம். ஆனால் கெமிக்கலில் பழுத்த பழங்கள் எந்த ஒரு புள்ளியும் இல்லாமல், பார்க்கவே ரொம்ப பெர்ஃபெக்ட்டாக, ஒரே சீரான மஞ்சள் நிறத்தில் பளபளப்பாக இருக்கும். இப்படி பிளாஸ்டிக் பழம்போல பளபளக்கும் பழங்களை தவிர்ப்பது மிகவும் நல்லது.
சுவை மற்றும் கடினத்தன்மை!
பழத்தை தொட்டு பார்க்கும்போதே அதன் உண்மைத்தன்மை பாதி தெரிந்துவிடும். இயற்கையாக பழுத்த பழம் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி மென்மையாக இருக்கும். ஆனால் செயற்கை பழங்கள் வெளியே பார்ப்பதற்கு நன்றாக பழுத்தது போல இருந்தாலும், தொட்டு பார்த்தால் ஆங்காங்கே கல்லு போல மிகவும் கடினமாக இருக்கும். உள்ளே சாப்பிடும் போது அதன் மையப்பகுதி லேசான நறுக்கென்ற தன்மையுடன் முழுமையாக பழுக்காமல் இருப்பதை நம்மால் உணர முடியும். அதோடு இயற்கையான வாழைப்பழத்தின் அந்த அசலான இனிப்பு சுவையும் வாசனையும் அதில் அறவே இருக்காது.
பழங்கள் வாங்கும்போது அதன் வெளித்தோற்றத்தை மட்டும் பார்த்து நாம் ஏமாந்து விடக்கூடாது. அழகான தோற்றத்திற்குப் பின்னால் பல ஆபத்தான ரசாயனங்கள் மறைந்திருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. இனிமேல் கடைகளுக்கு சென்று வாழைப்பழம் வாங்கும்போது மேலே சொன்ன இந்த விஷயங்களை கட்டாயம் நினைவில் வைத்துக்கொண்டு வாங்குங்கள்.