பாத்ரூம் கேம்பிங்: தனிமையின் தேடலா? மன அழுத்தத்தின் வெளிப்பாடா?
பாத்ரூம் கேம்பிங் (Bathroom Camping) என்பது தனிமையைத் தேடி கழிவறையில் ஒதுங்கும் புதிய போக்கு. அதாவது, மக்கள் கழிவறைக்குள் அதிக நேரத்தை செலவிடும் போக்கை குறிக்கும் வார்த்தை இது. மன அழுத்தம் அல்லது அதிகப்படியான தூண்டுதலில் இருந்து தப்பிக்கவும், மன அமைதி பெறவும் கழிவறையில் நீண்ட நேரம் செலவழிக்கும் ஒரு போக்காக சமூக ஊடகங்களில், குறிப்பாக ஜெனரல் இசட் தலைமுறையினரிடையே பரவி வரும் ஒரு மனநல உத்தியாகும் இது.
கழிவறையை ஒரு தனிப்பட்ட மற்றும் அமைதியான இடமாகப் பயன்படுத்தும் மக்கள் உலகத்திலிருந்து விலகி, தங்கள் எண்ணங்களுக்கு அல்லது மன அமைதிக்கு நேரம் ஒதுக்குவதாக எண்ணுகிறார்கள். இது மன அழுத்தம், பதற்றம் போன்றவற்றிலிருந்து ஒரு தற்காலிக தப்பிக்கும் வழியாகக் கருதப்படுகிறது. மக்கள் குளியலறையில் இருந்து கொண்டு தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு ஓய்வு எடுக்கிறார்கள்.
இந்தப் போக்கு சமூக ஊடகத் தளங்களிலும் பரவலாக பகிரப்படுகிறது. மக்கள் தங்கள் அனுபவங்களையும், குளியலறைக்குள் தனிமையை அனுபவிக்கும் நேரத்தையும் வீடியோக்களாக பகிர்கின்றனர். இதை விளையாட்டு போக்காக செய்தாலும் இதில் ஏற்படும் பிரச்னைகள் பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை. அதன் பின்விளைவுகளைப் பற்றி எண்ணுவதில்லை.
சிலர் கழிவறையை தனது உணர்ச்சி வெளிப்பாட்டிற்கான பாதுகாப்பான இடமாக கருதுகின்றனர். இன்னும் சிலரோ கழிவறையை மன அமைதி தரும் இடமாக கருதுகின்றனர். பொறுப்புகள், எதிர்பார்ப்புகள் மற்றும் அதிகப்படியான தூண்டுதல்களில் இருந்து தப்பிக்கக்கூடிய இடமாக கழிவறையை எண்ணுகின்றனர். பெரும்பாலானவர்களுக்கு கழிவறை மட்டுமே அவர்கள் உண்மையிலேயே தனியாக இருக்கக்கூடிய இடமாக மாறுகிறது.
இந்த ‘தப்பிக்கும் செயல்கள்’ அடிக்கடி ஏற்பட்டாலோ அல்லது நீண்ட காலம் நீடித்தாலோ, அது மன உளைச்சலின் அறிகுறியாகக் கூட இருக்கலாம் என்று டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். குறுகிய இடைவெளி எடுப்பது ஆரோக்கியமானது என்றாலும், அடிக்கடி அல்லது நீண்ட நேரம் கழிவறையில் இருப்பது என்பது ஆரோக்கியமற்ற செயலாகும். சிலர் கழிவறையை ஆக்கபூர்வமான இடமாக நம்புகின்றனர்.
அங்குதான் சிறந்த யோசனைகள் பிறப்பதாகவும் எண்ணுகின்றனர். கழிவறை போன்ற ஈரப்பதமான சூழலில் நீண்ட நேரம் செலவிடுவது சரும நோய் தொற்றுகள் முதல் சிறுநீர் பிரச்னைகள் வரை பலவிதமான உடல்நலப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
சிலர் இதை பாதிப்பில்லாத சுய கவனிப்பாக பார்த்தாலும், உளவியல் நிபுணர்கள் இது ஆழமான உணர்ச்சி பிரச்னைகளின் அடையாளமாக இருக்கலாம் என்று எச்சரிக்கின்றனர். ‘பாத்ரூம் கேம்பிங்’ நம்முடைய பிரச்னைகளில் இருந்து தற்காலிக நிவாரணத்தை வழங்கினாலும், இது சரியான போக்கல்ல. எனவே, நம் பிரச்னைகளைத் தீர ஆராய்ந்து முடிவு தேடுவதே மன ஆரோக்கியத்திற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.