

நம்ம வீட்ல மத்த ரூம் கதவெல்லாம் பத்து வருஷம் ஆனாலும் புதுசு மாதிரி ஜொலிக்கும். ஆனா, இந்த பாத்ரூம் கதவு மட்டும் பாவம், எப்பவும் தண்ணியில நனைஞ்சு நனைஞ்சு, அடிப்பகுதி கருத்துப்போய், வீங்கி, ஒரு கட்டத்துல உடைஞ்சே போயிடும். குறிப்பா மரக்கதவு வெச்சிருக்கறவங்களுக்கு இது பெரிய தலைவலி. கவலையை விடுங்க. உங்க பாத்ரூம் கதவைத் தண்ணீரிலிருந்து காப்பாற்ற, ரொம்பவே சுலபமான, செலவு குறைந்த சில ஐடியாக்களைப் பார்ப்போம்.
கதவுக்கு ஒரு 'ரெயின்கோட்'!
மழைக்கு நாம ரெயின்கோட் போட்டுக்கற மாதிரி, கதவுக்கும் ஒரு கோட் போடலாம். சாதாரண பெயிண்ட் அடிக்காம, கடையில கேட்டு 'பிளாஸ்டிக் பெயிண்ட்' வாங்குங்க. இதை கதவோட அடிப்பகுதியில, அதாவது தண்ணி படுற இடத்துல ஒரு ரெண்டு மூணு தடவை நல்லா அடிச்சு விட்டுருங்க. இது மரத்துக்கு மேல ஒரு பிளாஸ்டிக் கவர் மாதிரி ஒட்டிக்கிட்டு, தண்ணியை உள்ளே இறங்கவே விடாது. வருஷக்கணக்கா கதவு சூப்பரா இருக்கும்.
எண்ணெய் மற்றும் வார்னிஷ்!
பெயிண்ட் அடிக்க நேரம் இல்லையா? பரவாயில்லை. உங்க வீட்ல இருக்கிற நல்ல கெட்டியான எண்ணெய் அல்லது மெக்கானிக் ஷாப்பில் கிடைக்கும் கிரீஸ் எடுத்து, கதவின் அடிப்பகுதியில் நல்லா தேய்த்து விடுங்க. எண்ணெய் இருக்கும் இடத்தில் தண்ணீர் ஒட்டாது, அந்த டெக்னிக்தான். இது தற்காலிகத் தீர்வுதான். நிரந்தரமா வேணும்னா, ஆறு மாசத்துக்கு ஒருமுறை மரத்துக்கு அடிக்கிற வார்னிஷ் வாங்கி அடிங்க. இது 80 சதவீதம் வரை கதவை அழுகவிடாமல் பாதுகாக்கும்.
டின் ஷீட்!
இது ஒரு பழைய முறை, ஆனா ரொம்ப எஃபெக்டிவ். பாத்ரூம் கதவோட அடிப்பகுதியில, உட்பக்கமா ஒரு அலுமினியம் அல்லது டின் ஷீட் வாங்கி ஆணி அடிச்சுடுங்க. நாம குளிக்கும்போது தெறிக்கிற தண்ணி, மரத்துல படாம, அந்த ஷீட் மேல பட்டு வழுக்கிட்டு தரைக்கு வந்துடும். மரக்கதவு தப்பிச்சுக்கும்.
ஏற்கனவே கதவுல சின்னதா ஓட்டை விழுந்துட்டாலோ, விரிசல் இருந்தாலோ, உடனே 'எம்-சீல்' அல்லது மரத்துக்குப் போடுற பட்டி வாங்கி அந்த ஓட்டையை அடைச்சுடுங்க. இல்லைன்னா, அந்த ஓட்டை வழியா தண்ணி உள்ள போய், கதவை மொத்தமா காலி பண்ணிடும்.
ஒருவேளை, "இனிமேதான் வீடு கட்டப்போறேன்" அல்லது "பழைய கதவை தூக்கிப் போடப்போறேன்"னு முடிவு பண்ணிட்டீங்கன்னா, தயவுசெஞ்சு மரக்கதவை வாங்காதீங்க. கண்ணை மூடிக்கிட்டு பிவிசி (PVC) பிளாஸ்டிக் கதவோ அல்லது அலுமினியம் கதவோ வாங்கி மாட்டிடுங்க. அது எவ்வளவு தண்ணி பட்டாலும் ஒண்ணுமே ஆகாது.
பாத்ரூம் கதவுதானேன்னு அலட்சியமா இருந்தா, அது மொத்தமா மக்கிப்போய், மாத்தும்போது பல ஆயிரம் செலவு வைக்கும். அதுக்கு பதிலா, மேல சொன்ன இந்த சின்ன சின்ன பராமரிப்பு வேலைகளை அப்பப்போ செஞ்சுட்டா, உங்க பர்ஸும் பத்திரமா இருக்கும், கதவும் பல வருஷத்துக்கு உழைக்கும்.