ஒரு கதவு மூடினால் இரண்டு கதவுகள் திறக்கும் தெரியுமா?

டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்
டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்

வாழ்க்கையில் உயர நினைப்பவர்கள் வாய்ப்பிற்காக காத்திருப்பார்கள். தாங்கள் நினைத்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற சூழ்நிலை வரும்போது மனம் உடைந்து போவார்கள். ஆனால் ஒரு கதவு மூடினால் இரண்டு கதவுகள் திறக்கப்படும் என்பது விதி.

நம் நாட்டின் முன்னாள் ஜனாதிபதியான டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களுக்கு விமானியாக வேண்டும் என்பதுதான் சிறுவயது முதல் கொண்டே கனவாக இருந்தது. அவர் விமானத்தில்  பறக்க வேண்டும் என்கிற தனது கனவை வளர்த்துக் கொண்டே இருந்தார். மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றார். பொறியியல் படிப்பை முடித்த பின்பு இந்திய விமானப்படையில் விமானியாக சேர விண்ணப்பித்தார். ஆனால் இறுதிச்சுற்றில் குறுகிய நேரத்தில் வாய்ப்பை இழந்தார்.

மிகவும் மனம் வருந்தினார் கலாம். தன்னுடைய ஆசை ஏன் நிராகரிக்கப்பட்டது என்று எண்ணி கலக்கம் அடைந்தார். அதே சமயத்தில் தான் ஆசைப்பட்ட ஒன்று கிடைக்காவிட்டால் அதைவிட சிறந்ததாக கடவுள் வேறு ஏதாவது கொடுப்பார் என்று அவருக்கு நம்பிக்கையும் வந்தது. அதன் பின்பு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (டி. ஆர். டி. ஓ வில்) விஞ்ஞானியாக சேர்ந்தார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான  ஐ.எஸ்.ஆர்.ஓ வில் சேர்ந்து இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஏவுகணை உருவாக்கியதில் முக்கியப் பங்கு வகித்தார். ரோகிணி செயற்கைக்கோளை வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் நிலை நிறுத்த உதவியது.

ஏவுகணை வளர்ச்சியில் அவர் செய்த பணி அவருக்கு இந்தியாவின் ‘’ஏவுகணை நாயகன்’’ என்ற புனைப்பெயரை பெற்றுத் தந்தது. மேலும் அக்னி, பிரித்வி ஏவுகணைகள் போன்ற திட்டங்களில் முக்கிய பங்காற்றினார். மேலும் இந்தியாவின் உயரிய சிவிலியன் விருதான பாரத்ரத்னா உட்பட்ட பல விருதுகள் வழங்கப்பட்டன. மேலும் இந்தியாவின் 11 வது ஜனாதிபதியாக தேர்ந் தெடுக்கப்பட்டு ஐந்து வருடங்கள் அவர் சிறப்பாக பணி புரிந்தார்.

கலாம் தான் ஆசைப்பட்டபடி விமானி ஆகியிருந்தால் வெளி உலகத்திற்கு அவரது பெயர் தெரியாமலேயே போயிருக்கும். ஆனால் அவரது வாழ்வு மிகச் சிறப்பாக அமைய வேண்டும் என்று விரும்பிய இறைவன் அவரை விஞ்ஞானியாக்கி அதன் பின்பு ஜனாதிபதியாக்கி, மக்கள் மனதில் என்றென்றும் அவர் பெயர் நிலைத்திருக்குமாறு செய்தார்.

மூடிய ஒரு கதவைப் பார்த்து ஏங்கி நிற்பதில் என்ன பயன்? எனவே அதை விட்டுவிட்டு வேறு ஒரு திறந்த கதவின் வழியே நுழையலாம். வாய்ப்புகளும் அது போலத்தான். ஒரு வாய்ப்பு பறி போனால் அதற்காக புலம்பித் தவிப்பதில் அர்த்தமே இல்லை. அடுத்த வாய்ப்பிற்காக முயற்சி செய்யலாம்.

இதையும் படியுங்கள்:
ஆளுமை தருமே நமக்கு அடையாளம்!
டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்

வாழ்க்கை வாய்ப்புகள் நிறைந்தது. ஒன்று கிடைக்காவிட்டால் இன்னொன்று கிடைக்கும் என்கிற தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் ஒருவருக்கு வேண்டும். தடைகளைத் தாண்டிச் செல்லும் மன உறுதியை வளர்த்துக் கொண்டால் ஒவ்வொரு பின்னடைவும் ஒருவரை வலிமையாக மாற்றும். சவால்களை  கையாள்வதற்கு தகுந்த மனோநிலையை உருவாக்குகிறது.

மூடிய கதவுகள் என்பது தற்காலிகமானவை என்பதை புரிந்து கொள்வது வாழ்க்கையில் வெற்றியைத் தேடித் தரும். சிலருக்கு ஆரம்ப இலக்கு சிறந்த பொருத்தமாக இருக்காது. புதிய வாய்ப்புகளை ஆராய்வதன் மூலம் மிகவும் பொருத்தமான மற்றும் நிறைவான பாதைகளுக்கு இட்டுச்செல்லும். கிடைக்காததை  எண்ணிக் கவலைப்படுவதை விட, மேலும் சிறந்ததை தேடிச் செல்வது மிகுந்த நன்மை பயக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com