இரவு நேரத்தில் உணவு உண்ணுவது குறித்து பலரும் பல கருத்துக்களை நம்மிடம் கூறுவார்கள். இரவு நேரத்தில் முறை தவறி உணவருந்துவது உங்களின் ரத்த சர்க்கரை அளவை அதிகரிப்பதோடு, இதய ஆரோக்கியத்துக்கும் கேடு விளைவிக்கும். என,வே இரவு உணவு குறித்து நீங்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
ஒரு நாளில் நாம் சாப்பிடும் கடைசி நேர உணவை சரியான நேரத்தில் சாப்பிடுவது நம்முடைய உடல் எடையை நிர்வகிப்பது மட்டுமின்றி, நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் சிறப்பாக வைத்துக்கொள்ள உதவுகிறது. இரவு நேரத்தில் நீங்கள் எவ்வளவு சாப்பிடுகிறீர்கள், என்ன சாப்பிடுகிறீர்கள், அதை எந்த நேரத்தில் சாப்பிடுகிறீர்கள் என்பது மிகவும் முக்கியம்.
2020ம் ஆண்டு, இரவு நேர உணவு குறித்து செய்யப்பட்ட ஆய்வுகளின்படி, தாமதமாக உணவருந்துவது எடை அதிகரிப்பு மற்றும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அதிகரிக்கிறது என கூறப்படுகிறது. எனவே, எந்த உணவாக இருந்தாலும் இரவு நேரத்தில் அதை 8 மணிக்குள் சாப்பிட்டு முடிக்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர். ஒரு நாளில் நீங்கள் கடைசி நேரத்தில் உண்ணும் உணவு உங்கள் ஒட்டுமொத்த உணவையும் நிர்வகிக்கும் ஒன்றாகும். அதேபோல, ஒரு நாள் முழுவதும் நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவின் தரம் மிகவும் முக்கியமானது.
இரவு 7 மணிக்குப் பிறகு உணவு சாப்பிடுவதை நிறுத்துவது ஆரோக்கியமானதுதானா என்று கேட்டால், அது நீங்கள் கடைபிடிக்கும் உணவுமுறை, வாழ்க்கைமுறை, உங்களின் ஆரோக்கிய இலக்கு போன்ற காரணிகளைப் பொறுத்ததாகும். எனவே, நீங்கள் தினசரி எத்தகைய ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்கிறீர்கள் என்பதை பொறுத்துதான் உங்களின் ஆரோக்கியம் அதில் அடங்கியுள்ளது.
இரவு 7 மணிக்குப் பிறகு உங்களுக்கு உண்மையிலேயே பசி இருந்தால் சாப்பிடலாம். அதைவிடுத்து, பசி இல்லாமலேயே இரவு 12 மணி, 2 மணி என அந்த நேரத்தில் உணவு சாப்பிடுவது உடலுக்குக் கெடுதலாகும். முடிந்தவரை இரவு உணவை 8 மணிக்குள்ளாக எடுத்துக்கொள்ளும்படி பார்த்துக் கொள்ளுங்கள். இது உங்களின் உடல் நிலையை சீராக வைத்திருக்க உதவும்.