ஒரு குழந்தைக்கு சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொடுப்பது என்பது உற்சாகம் மற்றும் பயம் கலந்த தருணமாகும். இந்தத் தருணம் குழந்தை மற்றும் பெற்றோர் இருவருக்கும் ஒரு பெரிய சாதனை உணர்வால் நிரப்பப்பட்ட ஒரு மைல்கல். என்னதான் பிஸியான கால அட்டவணையில் நீங்கள் இருந்தாலும், கொஞ்சம் திட்டமிடல் மற்றும் பொறுமையுடன் இருந்து, நீங்கள் எப்படி உங்கள் குழந்தைக்கு சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொடுக்கலாம் என்பதை தெரிந்துகொள்வோம்.
1. அதிகமான நேரத்தைச் செலவழித்து, குறைவான தூரத்திற்கு முன்னுரிமை கொடுங்கள்:
உங்கள் கற்றல் செயல்முறையை நீண்ட நேரம் எடுப்பதற்கு பதிலாக, பகுதி பகுதிகளாக பிரித்துக்கொள்ளுங்கள். காரணம் ஒரு நாளைக்கு 15 - 20 நிமிட பயிற்சிகூட குறிப்பிடத்தக்க ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். இதை உங்கள் அன்றாட அட்டவணையில் பொருத்துவதற்கு அதிகாலை அல்லது மாலை வேளைகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இப்படிப்பட்ட தொடர் பயிற்சி குழந்தையை மிகவும் சோர்வடையாமல் அவர்களின் தசை செயல்பாடுகளை அதற்கேற்றவாறு மாற்றி, தன்னம்பிக்கையையும் வளர்க்க உதவுகிறது.
2. சரியான உபகரணங்களைப் பயன்படுத்தவும்:
உங்கள் குழந்தையின் அளவுக்கு ஏற்ப சரியான சைக்கிள் மற்றும் சரியான ஹெல்மெட் இருப்பதை உறுதிசெய்யவும். தேவைப்பட்டால் பயிற்சி சக்கரங்கள் (Extra wheels) ஆரம்பத்தில் பயனுள்ளதாக இருக்கும். ஆனால், சில பெற்றோர்கள் சமநிலை சைக்கிளையே (Without Extra wheels) விரும்புகிறார்கள்,
3. அடிப்படைகளுடன் தொடங்கி அவர்களின் நம்பிக்கையை வளர்த்து விடுங்கள்:
பேலன்சிங் (balancing), ஸ்டீயரிங் (steering) மற்றும் பிரேக்கிங் (braking) ஆகிய அடிப்படைகளுடன் தொடங்குங்கள். பூங்கா அல்லது அமைதியான தெரு போன்ற பாதுகாப்பான திறந்தவெளியைப் பயன்படுத்துங்கள். உங்கள் குழந்தை பெடல் மூலம் தள்ளுகிறார்களா? சைக்கிளை திட்டமிட்ட இடத்தில் நிறுத்துகிறார்களா? போன்ற அடிப்படை விஷயங்களைக் கண்காணியுங்கள். பயிற்சி செய்யும் வேளையில் சைக்கிளை நிறுத்தும்போது நிலையாகப் பிடித்துக்கொள்ளுங்கள். இப்படி அவர்களின் நம்பிக்கையைப் படிப்படியாக அதிகரிக்கும்போது உங்கள் ஆதரவை குறைக்கப் பாருங்கள். அதற்கு அவர்கள் செய்யும் ஒவ்வொரு சிறிய சாதனைக்கும் நீங்கள் ஒரு கைதட்டலுடன் அவர்களை ஊக்குவிக்கலாம்.
4. விளையாட்டு மற்றும் பொறுமை:
விளையாட்டுகள் மற்றும் சவால்களை இணைத்து உங்கள் கற்றல் செயல்முறையைச் சற்று வேடிக்கையாக ஆக்குங்கள். நீங்களே சில செயற்கை தடைகளை உருவாக்கி அவர்கள் கற்கும் விதத்தை வலிமைப்படுத்துங்கள். ஒரு மாறுதலுக்கு உங்கள் குழந்தையின் மனநிலையை சுறுசுறுப்பாக வைக்க சில பந்தயங்களை நடத்துங்கள். ஆனால், இது எல்லாவற்றிக்கும் உங்களின் பொறுமை மிகவும் முக்கியமானது. அந்நேரத்தில் உங்கள் குழந்தைகள் செய்யும் தவறுகளால் சில நேரங்களில் உங்களுக்குக் கோபம் ஏற்படக்கூடும். அதை தவிர்ப்பது அவசியம்.
5. படிப்படியான சுதந்திரம்:
உங்கள் குழந்தை பேலன்ஸ் மற்றும் ஸ்டீயரிங்கில் தேர்ச்சி பெற்றவுடன், இனி நீங்கள் மேற்பார்வையிட வேண்டிய நேரம் இது. குறுகிய தூரத்திற்கு ஓட்டச் சொல்லி அருகிலே இருங்கள். அதே சமயத்தில், அவர்கள் ஆசைப்பட்ட வழிகளிலே செல்லும்படி அவர்களுக்கு கொஞ்சம் சுதந்திரம் கொடுங்கள். அப்பொழுதுதான் அவர்கள் செய்யும் தவறுகள் வெளிப்படும். பின் அப்படியே சவாரிகளின் தூரத்தையும், அவர்கள் சந்திக்கும் சிக்கல்களையும் படிப்படியாக அதிகரிக்கவும். இது கொஞ்சம் கொஞ்சமாக உங்களின் ஆதரவை மறக்கச் செய்து, அவர்களைச் சுதந்திரமாக ஓட்ட வழிவகுக்கும்.
6. நம்பிக்கை மற்றும் சுதந்திரம்:
உங்கள் மேற்பார்வை இன்றி குழந்தை சுதந்திரமாக சவாரி செய்யத் தயாராக உள்ளது என்பதை நீங்கள் தீர்மானிக்கும் தருணம் முக்கியமானது. இது அவர்களின் திறன் நிலை, நம்பிக்கை மற்றும் சுற்றுச்சூழலின் நிலை ஆகியவற்றைப் பொறுத்தது. பொதுவாக, உங்கள் உதவியின்றி அவர்களால் தொடங்கவும், சவாரி செய்யவும் மற்றும் நிறுத்தவும் முடிந்தால், அவர்கள் யார் உதவியும் தேவையில்லாத நிலையை அடைந்துவிட்டார்கள் என்பதே அர்த்தம். இருந்தாலும் கொஞ்சம் நாட்கள் அவர்கள் சாலை பாதுகாப்பு விதிகளைப் எப்படி புரிந்துகொள்கிறார்கள், பழக்கமான பகுதிகளில் எப்படி பயணிக்கிறார்கள் என்பதை அவர்களுக்கு தெரியாமல் நாம் கண்காணிப்பது முக்கியம்.