ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தை நன்றாகப் படிக்க வேண்டும் என்று விருப்பப்படுவர். இருப்பினும் எல்லாக் குழந்தைகளும் படிப்பில் ஆர்வம் காட்டுவது கிடையாது. இது பெற்றோருக்குக் கவலை அளிக்கும் விஷயமாக இருப்பதால் படிப்பதில் குழந்தைகளுக்கு ஆர்வத்தை வளர்க்கவும் அவர்களுடைய மனநிலையை மாற்றவும் உதவும் சில வழிமுறைகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
நேர்மறையான உறுதிமொழிகள்: குழந்தைகள் தானாகப் படிக்க உட்காரும்பொழுது இன்று எவ்வளவு ஆர்வமுடன் படிக்க உட்கார்ந்திருக்கிறீர்கள், கல்வியை எவ்வளவு ரசிக்கிறீர்கள், கற்றுக்கொள்வதில் எவ்வளவு ஆர்வம் போன்ற நேர்மறையான விஷயங்களைச் சொல்ல வேண்டும். அப்போதுதான் குழந்தைகள் தங்களை திறமையான மற்றும் கல்வி கற்றவர்களாகப் பார்க்க வேண்டும் என்று நினைத்து திரும்பத் திரும்ப படிப்பதில் முனைப்புடன் செயல்படுவார்கள். அதற்கு மாறாக, குழந்தைகள் படிக்காதபோது அவர்களைத் தொடர்ந்து நச்சரிப்பது, சுட்டிக் காட்டுவது போன்றவற்றை ஒதுக்கி வைக்க வேண்டும்.
உண்மையான பாராட்டுகள்: ஒரு குழந்தை படிப்பதற்காக ஒரு சிறிய முயற்சியை மேற்கொண்டாலும் அதை ஊக்கப்படுத்தி பாராட்ட வேண்டும். இது அவர்களின் முயற்சியை மேலும் வளர வைக்கும் செயலாகும். ‘நீ வீட்டுப்பாடத்தில் எவ்வளவு கடினமாக உழைத்திருக்கிறாய். உன்னை நினைத்துப் பெருமையாக இருக்கிறது’ என்று நீங்கள் பாராட்டும் போது குழந்தைகள் தங்களின் முயற்சி மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்து வெற்றி பெற மென்மேலும் தங்களுடைய திறமையை வளர்த்துக் கொள்வார்கள். குழந்தைகளுடைய வெற்றியை நீங்கள் பாராட்டுவதன் மூலம் வெற்றி பெற கடினமான உழைப்புக்குத் தயாராகி விடுவார்கள்.
குழந்தை கற்க சிறந்த வழியைக் கண்டறியவும்: ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானது என்பதால் உங்கள் குழந்தை புத்தகங்களைப் படித்து மகிழ்கிறதா? அல்லது வீடியோக்கள், சுவாரஸ்யமான உண்மைகள். கதை அடிப்படையிலான அணுகுமுறை போன்றவற்றின் மூலம் பாடங்களை நன்றாகப் புரிந்து கொள்கிறதா? என்ற குழந்தை கற்க சிறந்த வழியை கண்டறிந்து அதற்கேற்ப குழந்தைகளிடம் அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, அவர்கள் வரலாற்றைப் படிக்க சலிப்பாக உணர்ந்தால், அதை ஒரு கதை நேர அமர்வாகவோ அல்லது நிஜ வாழ்க்கையுடன் தொடர்புப்படுத்துவதாக சுவாரஸ்யமாக மாற்றலாம். இதனால் சலிப்பான பாடங்கள் கூட மிக எளிதில் புரிய ஆரம்பிக்கும்.
போட்டியின் அழுத்தத்தைத் தவிர்க்கவும்: மற்ற குழந்தைகளுடன் உங்கள் குழந்தைகளை ஒப்பிட்டுப் பேசுவதைத் தவிர்ப்பதாலேயே மன அழுத்தம் போன்ற தேவையற்ற பிரச்னைகள் வருவது தடுக்கப்பட்டு, அவர்களுடைய வளர்ச்சியில் கவனம் செலுத்த முடியும். படிக்கும் வேகத்தை மேம்படுத்துதல், ஒவ்வொரு நாளும் புதிய சொற்களை கற்றுக்கொள்வது போன்ற தனிப்பட்ட இலக்குகளை அமைத்துக் கொள்வதன் மூலம் குழந்தை ஆரோக்கியமான மன நிலைக்கு மாறுகிறது.
தங்கள் சொந்த வேகத்தில் கற்றுக்கொள்ள அனுமதிக்கவும்: குழந்தைகளை தாங்களாகவே கண்டுபிடிக்க அனுமதிப்பதால் அவர்களது சுதந்திர உணர்வு வளர்கிறது. குழந்தைகளுக்கு அவர்களின் சொந்த வழியில் ஆராயக் கற்றுக்கொடுக்க இடம் கொடுப்பதால் குறிப்பாக குழந்தைகளுக்கு கேள்விகளுக்கான தீர்வுகளை நாம் கூறுவதை விட, கேள்விகளைக் கேட்பது மட்டும் பதில்களைத் தேடுவது போல் செய்யக் கற்றுக்கொடுக்க வேண்டும். இது குழந்தைகளின் கற்றல் மீதான விஷயத்தையும் அன்பையும் வாழ்நாள் முழுவதும் உருவாக்க உதவுகிறது.