
ஒவ்வொருவரிடத்திலும் ஏதோ ஒரு நம்பிக்கை குடி கொண்டிருக்கிறது. சிலர் எப்பொழுதும் ஒரே விதமான பேனாவை பரிட்சைக்கு பயன்படுத்துவார்கள். அந்த பேனாவை பயன்படுத்தினால் நிறைய மதிப்பெண் பெற முடியும் என்ற நம்பிக்கை அவருக்கு. அதே போல் வெளியூர் பயணம் செல்லும் பொழுது ஒரு குறிப்பிட்ட துணிமணிகளை உடுத்துவார்கள். அந்த துணிமணிகளை உடுத்தினால் உடம்புக்கு உடுத்த வசதியாக இருப்பதுடன் அவை நல்ல எண்ணத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை உடையோர் உண்டு. சிலர் வெளியில் செல்லும் பொழுது நாழி, நட்சத்திரம் போன்றவற்றை பார்த்து விட்டு செல்வார்கள். இதுபோல் அவரவரின் மனநிலையை பொறுத்து சகுனம் பார்க்கும் நம்பிக்கையும், பழக்க வழக்கங்களும் மாறுபடுவது இயல்பு. அது சங்க காலம் தொட்டு எப்படி இருந்து வருகிறது என்பனவற்றைப் பற்றிய குறிப்புகள் இதோ:
* முக்கியமாக முதன்முறை வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு அசைவ உணவு படைக்கக்கூடாது. உறவு முறிந்து விடும் என்ற பழக்க வழக்கம் நடைமுறையில் உள்ளது. இது சங்க காலம் தொட்டே இருந்து வருவதாக கூறப்படுகிறது.
* புது துணி அணிந்து கோயில்களுக்கு சென்றால் அதிகமாக துணி கிடைக்கும் என்ற நம்பிக்கை உண்டு. அதேபோல் நகத்தில் வெள்ளையாக பூ வளர்ந்தால் புத்தாடை கிடைக்கும் என்று நம்புகிறோம். இந்த நம்பிக்கை எல்லாம் நம் கலாச்சாரத்தில் தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கமாக உள்ளது.
* குறிப்பாக பறவைகள் பற்றிய நம்பிக்கைகள் அதிகமாக இருந்திருக்கின்றன. அவை பறக்கும் திசை, எழுப்பும் குரல், அதன் செயல்கள் குறித்து நம்பிக்கை கொண்டிருந்தனர். ஏதேனும் நல்ல காரியத்திற்கு புறப்படும் பொழுது காகம் இடப் பக்கத்தில் இருந்து வலப்பக்கம் செல்வது நல்லது என நம்புகின்றனர். அதுபோல் காகம் கரைந்தால் விருந்தினர் வருவர் என்பது தமிழர்களின் நம்பிக்கை. இது சங்க காலம் தொட்டே இருந்து வரும் நம்பிக்கையாகும்.
* அதேபோல் ஏதேனும் ஒரு காரியத்திற்கு செல்லும்போது கண் துடித்தல், கனவு காணுதல், தும்மல் விடுதல் போன்ற நிகழ்வுகள் நிகழுமாயின் அவற்றைக் கொண்டு எதிர்காலத்தை கணிக்கும் நம்பிக்கை தமிழரிடையே இன்றும் இருந்து வருகின்றது.
* அதேபோல் பல்லி சொல்லுதல் தமிழகத்தில் முக்கிய இடம் பெற்றுள்ளது. டெல்லி போன்ற இடங்களில் பெரிய பெரிய பல்லிகள் இருந்தாலும் சத்தம் எழுப்புவதில்லை. ஆனால் நம் தமிழகத்தில் மட்டும் எல்லா இடங்களிலும் பல்லி சத்தத்தை கௌலி சொல்வதாக, அது ஒவ்வொருவர் வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் சொல்வதற்கு பல்லி சொல்லும் பலன் என்று பஞ்சாங்கத்தை எடுத்து பார்த்து திருப்திப்பட்டுக் கொள்கிறோம்.
* தன்னைப் பற்றி ஒருவர் நினைத்தாலும், பேசினாலும் புரையேறும் என்ற நம்பிக்கை பழங்காலத்தில் இருந்தே பழக்கத்தில் இருந்து வருகிறது. இதை கூறுவதற்கு சாதாரணமாக தெரிந்தாலும், தன்னைப் பற்றி நினைப்பதற்கு நல்ல உறவுகள் இருக்கின்றனவே என்று சந்தோசம் தரக்கூடிய நிகழ்வாக இதைக் கொள்ளலாம்.
* நாம் ஒருவரை பற்றி நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது அவர் எதிரில் வந்தால் உனக்கு ஆயுள் கூடுதல் என்று ஆசீர்வதிப்பது அப்பொழுது முதல் பழக்கத்தில் இருந்து வருகிறது.
* அதேபோல் சுப காரியங்களைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும் பொழுது அணைந்த விளக்கு எரியத் தொடங்கினால் நல்ல சகுனமாக கருதுகிறோம். இந்த நம்பிக்கை இந்தியா முழுவதும் பழக்க வழக்கங்களில் இருந்து வருகிறது.
* ஏதாவது நல்ல காரியத்திற்காக வெளியில் சென்று கொண்டிருக்கும் பொழுது மரண ஊர்வலம் எதிரே சென்றால் போகும் காரியம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை அப்பொழுது முதல் இப்பொழுது வரை தொடர்கிறது.
* இரண்டு திருமணங்கள் ஒரே நேரத்தில் ஒரே வீட்டில் நடந்தால் ஒரு குடும்பம் சிறப்பாக இருக்கும் என்றும், மற்றொரு குடும்பம் தாழ்நிலையை அடையும் என்ற நம்பிக்கையும், பழக்க வழக்கமும் அதிகமாக பழக்கத்தில் இருக்கின்றன.
* திருமணமான புதுப்பெண் கணவன் வீட்டிற்கு வந்தவுடன் உப்பிலோ, நெல்லிலோ கை வைக்க வேண்டும் என்ற பழக்கம் இருந்து வருகின்றன.
* பெண்களுக்கு இடது கண் துடித்தால் நல்லது என்றும், ஆண்களுக்கு வலது கண் துடித்தால் நல்லது என்றும் கொண்டாடுகிறோம். சிலப்பதிகாரத்தில் பிரிந்த கோவலன் மீண்டும் சேர உள்ளான் என்பதை உணர்த்த கண்ணகிக்கு இடது கண்ணும், மாதவியை விட்டு பிரிய உள்ளான் என்பதை உணர்த்தும் மாதவிக்கு வலதுக்கண்ணும் துடித்தது என்பதை அறிய முடிகிறது.
* அதுபோல் சங்க காலத்தில் விருந்தோம்பலுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்ததை ஏராளமாக அறிய முடிகிறது. இன்றும் அது தொடர்வதை காண முடிகிறது. குறிப்பாக கோவலன் கண்ணகியை விட்டுப் பிரிந்து இருந்தபோது, கோவலன் தன் கூட இல்லாததால் கண்ணகி விருந்தினரை உபசரித்து விருந்தோம்பல் செய்ய முடியவில்லையே என்று கலங்கியதாக ஒரு குறிப்பு வருகிறது. அதைப் படித்திருக்கிறோம்.
* மேலும் கணவன் மனைவியரிடையே எழும் ஊடலை தீர்க்கும் வாயில்களாக விருந்தினர் வருகை அமைந்திருக்கிறது. விருந்தினர் வந்தால் ஊடலை மறந்து விருந்து படைக்கும் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
* இங்கு தன் மனைவியின் உடலை தீர்க்க யாரேனும் விருந்தினர் வரமாட்டார்களா? என தலைவன் ஏங்குவதாக கீழ் வரும் பாடல் வரிகள் உள்ளன. இதிலிருந்து சங்க காலத்தில் விருந்தோம்பும் பண்பு எவ்வளவு சிறப்பு பெற்றிருந்தது என்பதை அறிய முடிகிறது.
"எமக்கு வருகதிர் விருந்தே சிவப்பாளன்று
சிறிய முன் எயிறு தோன்ற
முறுவர் கொண்ட முகங்காண் கம்மே"
இன்னும் கூறப்போனால் படித்தவர், படிக்காதவர் என அனைத்து தரப்பு மக்களிடமும் ஏதாவது ஒரு நிலையில் நம்பிக்கை ஆழமாக வேரூன்றி இருந்து வருகிறது. அத்தகைய நம்பிக்கைகளையும் பழக்க வழக்கங்களையும் மனித சமுதாயத்தில் இருந்து எளிதாக பிரிக்க முடியாது. யானைக்கு பலம் தும்பிக்கையில்; மனிதனின் பலம் நம்பிக்கையில் என்பதனைப் புரிந்து கொள்ளலாம். இது சங்க காலம் தொட்டே இருந்து வருகிறது என்பதற்கான ஆதாரங்கள் தான் இவை.