நம்மில் பலர் எந்த நல்ல காரியம் ஆரம்பிப்பதற்கு முன்பும், அன்றாட நிகழ்விற்கும் சகுனம் பார்ப்பதை பழக்கமாகக் கொண்டிருப்பர். அந்த வகையில் பல்லி மிகவும் அதிர்ஷ்டமான, புனிதமான உயிரினமாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.
நாம் வெளியே செல்லும்போது பாதையில் பல்லி வந்தால் காரியம் வெற்றியாகும். நல்ல சேதியும் வரும். ஆந்தை நம் பாதையில் வந்தாலோ, நம் கண்களுக்குத் தெரிந்தால் சில குழப்பமான சூழ்நிலையில் நாம் விழப்போவதாக உணரலாம்.
கிளி நம் பார்வையில் அல்லது பாதையில் வந்தால் நல்ல சகுனமாகக் கொள்ளலாம். முன்னோர் ஆசிர்வாதம் கிடைப்பதன் அறிகுறியாகும். கடினமான சூழ்நிலைகளில் நம் முன்னோர்கள் உடன் இருந்து காப்பாற்றுவார் எனக் கருதப்படுகிறது.
கழுகின் பெரிய கண்கள் ஆர்வத்தைக் குறிப்பதாகும். கழுகு வழியிலோ, நெருக்கமாகவோ வந்தால் வரும் நாட்களில் பல முக்கியமான பாடங்களைக் கற்றுத் தரும் விதமாக நிகழ்வுகள் நடக்கும் என உணரலாம்.
பச்சோந்தியைப் பார்த்தால் இலக்குகளில் உறுதியாக இருக்க வேண்டும் என உணரலாம். பாம்பை கெட்ட சகுனமாகச் சொல்வர். உண்மையில் பாம்பு சக்தி மற்றும் ஞானத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. இது நமக்குள் இருக்கும் ஆற்றலைக் கற்றுக்கொள்ள உதவுகிறது. வெற்றியை நோக்கிச் செல்வதாக பாம்பு பார்த்தலின் பலன் உணர்த்துகிறது.
சிலந்தியைப் பார்த்தால் நம்மை நோக்கி உபயோகமான தகவல்கள் வரும் என கொள்ளலாம். காகம் இருள் மற்றும் மரணத்தின் அறிகுறியாகக் கருதப்படுகிறது. இது உண்மையின் அடையாளமாக உள்ளது. உண்மையை உணர்த்தி நம்மை தயார் படுத்துவதன் அடையாளமாகக் கொள்ளலாம். காகம் வழியில் வந்து இடமிருந்து வலமாக சென்றால் நன்மை என்றும், வலமிருந்து இடம் என்றால் காரியம் பலிதமாகாது எனவும் சொல்வர்.
பூனைகள் சகுனத் தடையாகப் பார்க்கப்படுகிறது. கன்றுடன் கூடிய பசு வந்தால் சுபம் எனக் கொள்ளலாம். இது தவிர, கிளம்பும்போது தும்மினாலோ, தடுக்கினாலோ சிறிது நேரம் உட்கார்ந்து விட்டுச் செல்ல பிரச்னையில்லை.
இவ்வாறு பொதுவான சகுனங்களும், தனிப்பட்ட சகுன சமிக்ஞைகள் நம்மை வாழ்வில் காக்கின்றன.