என்னது! 20 வயதிலேயே தொப்பையா? என்ன ஓடி என்ன பயன்?

Weight Loss
Belly
Published on

உடம்பை குறைப்பதற்கு ஆண்களும் பெண்களும் போட்டி போட்டுக் கொண்டு காலையில் எழுந்து நடந்தும் ஓடியும் உடற்பயிற்சி செய்து வருகின்றனர். இதனால் சிலருக்கு பலன் ஏற்பட்டாலும், பலர் உடல் எடை குறையாமல் கிறுகிறுத்து காணப்படுகின்றனர். இதற்கு காரணம் வெளியே எங்கும் கிடையாது. நம்மிடம் தான் உள்ளது. உடல் எடையை குறைக்க வேண்டுமானால் நாக்கை கட்டுப்படுத்த வேண்டும். 

அதிகாலையில் எழுந்து நடைப்பயிற்சி அல்லது ஓட்டப்பயிற்சி மேற்கொள்ளும் நபர்கள், அதை முடித்தவுடன் ஏதாவது ஒரு டீக்கடைக்கு சென்று நான்கு சமோசா ஒரு டீ சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். உடலில் உள்ள கொழுப்பு சத்தை நடந்தும், ஓடியும் எரித்துவிட்டு பின்னர் அதைவிட அதிக மடங்கு கொழுப்பு சத்தை உடலில் ஏற்றிக் கொண்டால் உடல் எடை எப்படி குறையும்?

அதேபோல வீடுகளில் அனைத்து பணிகளையும் செய்ய மெஷின்கள் வந்துவிட்டன. 30 ஆண்டுகளுக்கு முன்னர் துணி துவைப்பது, வீடு கூட்டுவது போன்ற வேலைகளை நாம் தான் செய்து வந்தோம். அதன் பின்னர் அதற்கான கருவிகள் வந்தவுடன் நமது உடல் உழைப்பு குறைந்து போய் விட்டது. இதனால் உடல் எடை அதிகரித்தது தான் மிச்சம். அதேபோல பக்கத்து தெருவில் இருக்கும் கடைக்கு செல்வதற்கும் பைக்கில் தான் செய்கிறோம். இப்படி இருந்தால் அதிகாலை நேரத்தில் எழுந்து நடைப்பயிற்சி அல்லது ஓட்ட பயிற்சி செய்தாலும் புண்ணியம் இல்லை.

வீட்டை கூட்டி சுத்தம் செய்வது என்பது கேவலமான காரியம் கிடையாது. அந்த வேலையை ஆண்கள் எடுத்துக்கொண்டு தினந்தோறும் வீட்டை பெருக்கினால், தொப்பை மெல்ல மெல்ல குறைந்து போகும். துணி துவைக்க வாஷிங் மெஷின் இருந்தாலும் கைகளால் துவைப்பது உடலுக்கு நலத்தை கொடுக்கும்.

இதில் ஒரு பிரச்சனை குடும்பத்தில் இப்போது இருவரும் வேலைக்கு செல்பவர்களாக உள்ளனர். அதனால் வீட்டு வேலைகளை அவர்களால் முறையாக செய்ய முடியாத நிலை உள்ளது. இதற்காக கருவிகளை வாங்கி அதன் மூலமாக வீட்டு வேலைகளை செய்ய பழகி விடுகின்றனர். வெளியிலிருந்து பார்க்கும்போது இது நல்ல விஷயமாகத்தான் தோன்றும். ஆனால் சிறிது காலம் கழித்து உடல் எடை கூடி, ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற உடல் உபாதைகள் நம்மை தொற்றிக் கொண்ட பின்னர் தான் அதிகாலையில் இருந்து ஓடவோ நடக்கவோ கட்டாயத்துக்கு உள்ளாக்கப்படுவோம்.

இதையும் படியுங்கள்:
வெந்நீரில் எலுமிச்சை, தேன் கலந்து குடித்தால் தொப்பை கரையுமா? உண்மை இதோ!
Weight Loss

பொதுவாக எந்த டாக்டரை கேட்டாலும் நன்கு நடக்க வேண்டும் என்று தான் சொல்கின்றனர். ஆனால் நம்மில் பலர் கடப்பாரையை முழுங்கி விட்டு கசாயம் குடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறோம். பொதுவாகவே நாம் எந்த உணவு பொருளை சாப்பிட்டாலும் அதை செரிமானம் செய்யும் அளவுக்கு உடல் உழைப்பு செய்ய வேண்டும். அப்படி இருந்தால் எந்த நோய் நொடியும் நம்மை அண்டாது. ஆனால் நாமோ உடலுக்குள் இருக்கும் உறுப்புகள் களைத்துப் போகும் அளவிற்கு உணவை அள்ளித் தள்ளுகிறோம். ஆனால் அதற்கு ஏற்ப உடல் உழைப்பை காட்டுவதில்லை.

இவ்வளவு நாள் சென்றதெல்லாம் போகட்டும். இனியும் நாட்களை கடத்த வேண்டாம் மக்களே!                                           

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com