பற்களைப் பாதுகாக்கும் எலக்ட்ரிக் டூத் பிரஷ் பயன்கள்!
சிறு வயதில் பற்களை சரியான முறையில் பராமரிக்கவில்லை எனில், வளர்ந்த பின் பல பிரச்னைகளை தந்து, முக அழகையும் கெடுக்கும் மோசமான பல் பராமரிப்பு. பல்வேறு நோய் தொற்றுகளுக்கும், பல் பிரச்னைகள் காரணமாகிறது. இதைத் தடுக்க உதவும் நவீன கருவிதான் எலக்ட்ரிக் டூத் பிரஷ்.
இந்த எலக்ட்ரிக் டூத் பிரஷ் பல்வேறு வகைகளில் இயக்கக்கூடிய வசதிகளைக் கொண்டுள்ளது. இதன் மூலம் பற்களின் இடுக்குகள், மேல் பகுதி ஓரங்கள், ஈறுகள், நாக்கு என வாயின் அனைத்து பகுதிகளிலும் சுத்தம் செய்ய முடியும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதை எளிதாக பயன்படுத்தலாம்.
உணவுத் துகள்கள் பற்களின் இடுக்குகளில் உள்ளதை சுத்தமாக அகற்றி கறைகளையும் இது நீக்குகிறது. ஈறுகளில் ஏற்படும் அழற்சியையும் குறைக்கிறது.
எலெக்ட்ரிக் டூத் பிரஷ் பற்களை சுத்தம் செய்வதில் பெரும்பாலான வேலைகளை செய்து விடும். மணிக்கட்டு பகுதியில் கீல் வாத பிரச்னைகள் உள்ளவர்கள் மற்றும் வளர்ச்சி குறைபாடு உள்ளவர்களுக்கும் எலக்ட்ரிக் டூத் பிரஷ் உதவியாக இருக்கும்.
தினமும் குறைந்தபட்சம் மூன்று நிமிடங்கள் வரை பற்களை சுத்தம் செய்தால் மட்டுமே அவற்றின் ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியுமென மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அவசரமாக பணிக்குச் செல்லும் வேளைகளில் நிமிடங்களை சரியாக கணக்கில் வைத்து பிரஷ் பண்ண முடியாது. அத்தகையவர்களுக்கு எலக்ட்ரிக் டூத் பிரஷ் பயனுள்ளதாக இருக்கும். இதில் நேரத்தை பதிவு செய்து விட்டால் எவ்வித சிரமமும் இன்றி பற்களை சுத்தம் செய்ய முடியும்.
வழக்கமான டூத் பிரஷ்களை மூன்று மாதத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும். ஆனால், எலக்ட்ரிக் டூத் பிரஷ்களில் குறிப்பிட்ட இடைவெளியில் அதன் தலைப்பகுதியையும், பேட்டரியையும் மட்டும் மாற்றினால் போதுமானது.
பல் துலக்கும் அனுபவத்தை பரவசமாக்கும் இந்த எலக்ட்ரிக் டூத் பிரஷ்ஷை அனைவரும் உபயோகிக்க ஆரம்பிக்கலாமே.