குழந்தைகள் பிறப்பிலிருந்தே இசைக்கும், இயக்கத்திற்கும் அதிகமாக ஈர்க்கப்படுவார்கள். அவர்களின் இந்த ஆர்வத்தை ஊக்குவிக்கும் சிறந்த வழிகளில் ஒன்று தான் நடனம் ஆடுவது. நடனம் என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, அது குழந்தைகளின் உடல், மனம், சமூக வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தப் பதிவில் குழந்தைகள் நடனம் ஆடுவதால் கிடைக்கும் பல்வேறு நன்மைகள் பற்றி பார்க்கலாம்.
நடனம் என்பது ஒரு வகையான உடற்பயிற்சி. இது குழந்தைகளின் இதயத்துடிப்பை அதிகரித்து, ரத்த ஓட்டத்தைப் பயன்படுத்துகிறது. இதனால், அவர்களின் உடல் வலிமை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தி மேம்படுகிறது. நடனம் ஆடுவதால் எலும்புகள் வலுவடைந்து உடல் சமநிலை அடையும். மேலும், நடனம் ஆடுவதால், குழந்தைகள் தங்கள் இயக்கங்களை சிறப்பாக கட்டுப்படுத்த கற்றுக் கொள்கிறார்கள்.
நடனம் ஆடுவதால் குழந்தைகளின் மூளை வளர்ச்சி அதிகரிக்கிறது. இது அவர்களின் நினைவாற்றல், கவனம் செலுத்தும் திறன், சிந்தனைத் திறன் போன்றவற்றை மேம்படுத்தும். புதிய திறன்களைக் கற்றுக்கொள்ளவும் சிக்கல்களைத் தீர்க்கவும், அவர்களது மூளையின் ஆற்றல் மிகவும் முக்கியம் என்பதால், நடனம் ஆடுவதால், மூளை சார்ந்த பல செயல்பாடுகளில் குழந்தைகளால் சிறப்பாக இருக்க முடியும். மேலும் நடனம் ஆடுவதால் அவர்களின் தன்னம்பிக்கை அதிகரித்து திறமைகளை வெளிப்படுத்தவும், புதிய சூழல்களில் தங்களைத் தாங்களே அறிமுகப்படுத்திக் கொள்ளவும் ஊக்கமடைகிறார்கள்.
மற்றவர்களுடன் இணைந்து பணியாற்ற நடனம் அவர்களுக்கு கற்றுக் கொடுக்கிறது. இது அவர்களின் தகவல் தொடர்பு திறன், ஒத்துழைக்கும் திறன், குழுவாக சேர்ந்து பணியாற்றும் திறனை மேம்படுத்துகிறது. நடனம் ஆடுவதால், குழந்தைகள் பிறரின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளவும், அவர்களுடன் உறவுகளை சிறப்பாக ஏற்படுத்திக்கொள்ளவும் கற்றுக் கொள்கிறார்கள். மேலும், இது குழந்தைகளின் கலை, படைப்பாற்றல் திறன்களை வெளிப்படுத்தி, தங்களின் சொந்த அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள உதவுகிறது.
நடனம் என்பது குழந்தைகளின் முழுமையான வளர்ச்சிக்கு உதவும் மிகச்சிறந்த கருவியாகும். இது அவர்களின் உடல், மனம் போன்ற எல்லா விஷயங்களிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. நடனம் ஆடுவதால் குழந்தைகள் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும், தன்னம்பிக்கையுடனும் வளர்கிறார்கள். எனவே, பெற்றோர்களும் ஆசிரியர்களும் குழந்தைகள் நடனம் ஆட ஊக்குவிக்க வேண்டும்.