
கண்டு காய் காய்க்கும் காணாமல் பூ பூக்கும் என்று பழமொழி உண்டு. அதாவது காய்ப்பது மட்டும்தான் தெரியும். பூப்பதே தெரியாது. அத்திப்பூ பூப்பதை அதிகமாக பார்க்க முடியாது. அதனால்தான் இந்த பழமொழி உருவானது.
இதில் நாட்டு அத்திக்காய், சீமை அத்திக்காய் என இரண்டு வகை உண்டு. இரண்டுமே ஒரே விதமான பலன்களை தரக்கூடியவை.
கோவிலில் உள்ள மரச் சிற்பங்கள் பெரும்பாலும் அத்தி மரத்தால் செய்யப்படுபவை.
கோவில்களில் உள்ள சிலைகளை ஊர்வலமாகக் கொண்டு செல்ல பயன்படும் பல்லக்குகள், தேர்கள் கூட அத்தி மரத்தால் ஆனவை.
காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் திருக்குளத்தில் அத்தி மரத்தால் செய்யப்பட்ட விஷ்ணு சிலை 12 வருடங்களுக்கு ஒரு முறை வெளியில் எடுக்கப்பட்டு பூஜைகள் செய்யப்படுகிறது.
அப்படிப்பட்ட அத்தி மரத்தினுடைய சிறப்பினைக் காணலாம்....
அத்திப்பழங்களை வினிகரில் ஒரு வாரம் ஊற விட்டு தினம் இரண்டு பழங்கள் வீதம் சாப்பிட, இன்று அதிகம் பேசப்படும், போதைப் பழக்கம் மற்றும் சில வியாதிகளால் ஏற்படும் நோயான கல்லீரல் வீக்கம் குணமாகும்.
இவை வயிற்று புண்ணுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
இவற்றில் விட்டமின் ஏ, சுண்ணாம்பு சத்து மற்றும் இரும்புச்சத்து அதிக அளவில் உள்ளது.
உடலில் உள்ள ரணங்களை ஆற்றக்கூடிய சக்தி கொண்டது.
அத்திக்காயை சாப்பிட மலச்சிக்கல் சரியாகும். சீதபேதியை குணப்படுத்தும். வாயுவை போக்கும். ரத்த மூலத்தை குணப்படுத்தும் தன்மை கொண்டது. உடலில் உள்ள புண்களை ஆற்றும் சக்தி கொண்டது.
சித்த மருத்துவத்தில் அத்திக்காய், அத்திப்பழம், அத்தி இலை, அத்திப்பட்டை, வேர் அனைத்துமே மருந்தாக பயன்படுகிறது.
அத்திப்பழத்தில் நார்ச்சத்து இருப்பதால் இன்சுலின் அளவை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் இதில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.
மலக்குடலை சுத்தம் செய்யவும், வயிற்றுப் புண்ணை ஆற்றவும் இதனை சமையலில் பயன்படுத்தலாம்.
அத்திக்காயில் பூச்சி புழு இருக்கும். எனவே சமைக்கும் முன்பு நன்கு கவனித்து சுத்தம் செய்ய வேண்டும். அத்துடன் அதிலுள்ள விதைப்பகுதியை சுரண்டி எடுத்து விட வேண்டும்.
அத்திக்காய் துவர்ப்பு சுவையுடையது. இதனுடன் பருப்பையும் சேர்த்து குழம்பு வைக்கலாம். பொரியல் செய்யலாம்.
அத்திக்காயை ஊறுகாய் செய்து உண்ணும் பழக்கம் இன்னும் சில மலைக் கிராமங்களில் வசிப்பவர்களிடம் உள்ளது.
அத்திப்பழம், அத்திக்காய் மட்டுமல்லாமல் அத்தி மரத்தின் மூலம் பலகைகளும் செய்யப்படுகின்றன. இதில் அமர்ந்து தியானம் செய்ய மனம் ஒருமைப்படும். தியானத்தின் மூலம் சக்தியையும் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.
ராஜ நிகண்டு என்ற வட இந்திய நூல் அத்தியின் சிறப்பை கூறுகிறது. கருத்தரித்த நாலாவது மாதம் அத்தி மரத்தின் பாலை எடுத்து அடிவயிற்றில் தடவிக் கொண்டால் கரு நன்றாக பிடித்துக் கொள்ளும் என்று இந்நூல் கூறுகிறது.