நெல்லிக்காய் என்று அழைக்கப்படும் நெல்லிக்கனியின் வரலாறு தமிழ் இலக்கியத்தில் சங்க காலத்தில் இருந்தே பேசப்பட்டு வருகிறது என்பதிலிருந்து இதன் பெருமையை உணரலாம்.
நெல்லிக்கனியில் ஏகப்பட்ட சத்துக்களும் மருத்துவப் பயன்களும் இருக்கின்றன. நெல்லிக்கனியை 2000 வருடத்திற்கு முன்பிருந்தே மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
நெல்லிக்கனி ஆப்பிள், ஆரஞ்சு கனிகளை விட 20 மடங்கு சத்துக் கொண்டது. நெல்லிக்கனியின் சாறெடுத்து காலையில் பருகி வருபவர்கள் பலவிதமான நோய்களிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்கிறார்கள்.
நெல்லிக்காய் துவையல், ஊறுகாய், தொக்கு, சாறு சர்பத் என செய்து நாம் தினமும் உணவில் பயன்படுத்தி வந்தால் உடலை ஆரோக்கியத்துடன் காத்துக் கொள்ளலாம்.
நெல்லிக்காயில் கால்சியம், கார்போஹைட்ரேட், புரதம், பாஸ்பரஸ், கொழுப்பு என பல சத்துக்களும் அதிகமான வைட்டமின் சி மற்றும் பி2 இருக்கிறது.
நெல்லிக்காயில் சிறிய நெல்லி பெரிய நெல்லி என இரண்டு வகைகள் உண்டு. இரண்டிலுமே சத்து உள்ளது. அதிலும் பெரிய நெல்லியில் மிகவும் அதிகமான சத்து உள்ளது.
என்றும் இளமையுடன் இருக்க வேண்டுமா? ஐந்து நெல்லிக்காயை கொட்டை நீக்கி தேன் கலந்து காலை, மாலை பருகி வர என்றும் இளமையாக இருக்கலாம். பத்து நெல்லிக்காயை கொட்டை நீக்கி சாறு எடுத்து அதனோடு எலுமிச்சம்பழச் சாற்றையும் கலந்து தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் பருகி வர, உடலுக்கு மிகச்சிறந்த டானிக்காக பயன்படும். பல நோய்களை நீக்கும்.
சருமம் பளபளப்பாக: நெல்லிக்காயை நான்காக நறுக்கி உலர்த்தி பின்னர் பொடியாக்கி வைத்துக் கொண்டு அதோடு பயத்தம் பருப்பு மாவை கலந்து உடலில் தேய்த்து குளித்து வந்தால் சருமம் பளபளப்பாக இருக்கும்.
நீரிழிவு நோய் கட்டுப்பட: நெல்லிக்காயை உலர்த்தி பொடியாக்கி அதனுடன் சிறிதளவு நீர் கலந்து பருகி வர, நீரிழிவு நோய் கட்டுப்படும். இது மட்டுமின்றி, குடல் புண், வயிற்றுப் புண்களும் ஆறும்.
தலைவலி போக: நெல்லிக்காயை மைய அரைத்து நெற்றியில் பற்று போட, தலைவலி பறந்தே போகும்.
நெல்லிக்காய் கிடைக்கும்போதெல்லாம் உண்பதை பழக்கம் ஆக்கிக் கொள்ளுங்கள். இது கூட நெல்லிக்காய் சீசன்தான். இப்பொழுது வாங்கிய அதை வருடம் முழுதும் வரும்படி பக்குவப்படுத்தி வைத்துக் கொள்ளலாம். குழந்தைகளுக்கு நெல்லிக்காய் லேகியம் போல் செய்து கொடுத்தால் உடலுக்கு நல்ல போஷாக்கை தரும்.
நெல்லிக்காயை வாங்கி சாப்பிட்டு பயன்பெறத் தயாராகி விட்டீர்களா?